search icon
என் மலர்tooltip icon

  சிறப்புக் கட்டுரைகள்

  சர்வமும் சக்தி மயம்- பரமனின் பாவத்தை போக்கிய அன்னபூரணி
  X

  சர்வமும் சக்தி மயம்- பரமனின் பாவத்தை போக்கிய அன்னபூரணி

  • தீபாவளி என்றவுடனேயே எல்லோருக்கும் அன்னபூரணி அம்பிகையைத்தான் நினைவுக்கு வரும்.
  • காசியில் அன்னபூரணி வெகு விசேஷம். விசுவநாதர், விசாலாட்சி, மகாகாளர், வேறு பல தெய்வங்கள் என்றிருந்தாலும், அன்னபூரணியே பிரதானம்.

  தீபாவளி நெருங்கிக்கொண்டிருக்கிறது. தீபாவளி என்றவுடனேயே எல்லோருக்கும் அன்னபூரணி அம்பிகையைத்தான் நினைவுக்கு வரும். பொன்னிற மேனி கொண்டிருக்கும் இவள், இரண்டு திருக்கரங்களோடு காட்சி தருகிறாள். இடது கரத்தில் ரத்தினங்கள் பதித்துத் தங்கத்தால் ஆன அன்ன பாத்திரம். இந்தப் பாத்திரத்தில் பால் அன்னம் (க்ஷீரான்னம்) இருக்கும். வலது கரத்தில், அள்ளி அள்ளி வழங்குகிற தங்கக் கரண்டி. வசீகர வதனம்; மென்மையும் கரிசனமும் கலந்த புன்னகை; 'கவலைப்படாதே, உன்னுடைய பசியை நான் போக்குகிறேன்' என்று சொல்லாமல் சொல்லும் பார்வை.

  ஜகன்மாதாவான அம்பிகை, அன்னபூரணியாக அவதாரம் எடுத்ததற்கான காரணம்தான் என்ன?

  யார் பெரியவர் என்பதில் பிரம்மாவுக்கும் திருமாலுக்கும் போட்டியொன்று நடந்ததில்லையா? அதில், தாழம்பூவைப் பொய் சாட்சிக்கு அழைத்து, தாமும் பொய் சொன்னார் பிரம்மா. பொய் சொன்னதற்கும் பொய் சாட்சியைத் தோற்றுவித்ததற்கும் பிரம்மாவின் அகந்தையே காரணம்.

  இந்த அகந்தையை நீக்க எண்ணிய சிவபெருமான், பிரம்மாவின் தலையைக் கிள்ளிவிட்டார். அதுவரைக்கும், ஐந்து தலைகளோடு திரிந்த பிரம்மா, ஒரு தலை போய்விட, சதுர்முகர் ஆனார்.

  என்னதான் தண்டனை என்றாலும், பிரம்மாவின் தலையைக் கிள்ளிய பாவம், சிவபெருமானிடம் ஒட்டிக் கொண்டது; பிரம்ம கபாலமே ஒட்டிக் கொண்டுவிட்டது. பாவத்தைப் போக்குவதற்காக எங்கெங்கோ அலைந்தார். என்னென்னவோ செய்து பார்த்தார். கடைசியில் வழி கிடைத்தது.

  எந்தக் கையில் பிரம்மகபாலம் ஒட்டிக் கொண்டதோ, அதே கையில் அதே கபாலத்தைப் பிச்சை பாத்திரமாக ஏந்திக் கொண்டு, இரந்து உணவு பெறவேண்டும். அவ்வாறு இரக்கும்போது, அம்பிகை வந்து யாசகம் இடவேண்டும். அம்பிகை யாசகம் இட்டால் மட்டுமே, பாவம் தொலையும்.

  ஐயனுடைய பாவத்தைப் போக்குவதற்காக, அன்னபூரணி வடிவம் தாங்கினாள் அம்பிகை. லோகஜனனியான இவள், அன்ன கலசமும் அகப்பையும் கைகளில் தாங்கி, பெருமானுக்குப் பிச்சையிட்டு, அன்னம் பாலித்து பாவம் போக்கினாள்.

  காசியில் அன்னபூரணி வெகு விசேஷம். விசுவநாதர், விசாலாட்சி, மகாகாளர், வேறு பல தெய்வங்கள் என்றிருந்தாலும், அன்னபூரணியே பிரதானம்.

  தீபாவளியன்றும் அடுத்த நாளும், ஸ்வர்ண (தங்க) அன்னபூரணி காசியில் அருள் காட்சி தருவாள். அந்த சமயத்தில் மாதா அன்னபூரணேச்வரியை தரிசிக்கவேண்டும். எந்தச் சொல்லும் எந்த வர்ணனையும் அன்னையின் அழகை விவரித்துவிடமுடியாது.

  கொலு மண்டபத்தின் மையத்தில் பத்மாசனத்தில் அன்னை அமர்ந்திருப்பாள். திருமேனியெங்கும் பொன் ஆபரணங்கள். வைரம், வைடூரியம், கோமேதகம், புஷ்பராகம், கெம்பு, நீலமணி, மரகதம் என்று அணிமணிகளில் மின்னும் ரத்தின வரிசைகள். சிரசில் அதியற்புதமான கிரீடம். கிரீடத்திற்கு மேலே தங்கக் குடை. அலங்கார பூஷிதையாக அம்பிகை ஜொலிப்பாள்.

  அன்னபூரணியின் வலது பக்கத்தில் ஐச்வரிய நாயகியான லட்சுமி; இடது பக்கத்தில் வற்றாத செல்வங்களுக்கு நிலைக்களனான நிலைக்களனான பூமாதேவி. அன்னபூரணிக்கு முன்பாக நின்றுகொண்டு, பிச்சைக்காகக் கையேந்தும் வெள்ளிக் கவச விசுவநாதர். ஐயன் கையேந்த அன்னை பிச்சையிடுகிறாள்.

  சுவாமிக்கே பிச்சையா என்று வினவத் தோன்றுகிறதா? சுவாமிக்கே அளிப்பவள் நமக்கு அளிக்கமாட்டாளா? அன்னை பிச்சையிட ஐயன் பெற்றுக்கொள்ளும் இந்த அற்புத நாடகம், 'எந்தத் தருணத்திலும் ஐயனும் அம்பிகையும் நம்மைக் காப்பாற்றுவார்கள்' என்னும் பேருண்மையை நமக்குத் தெரிவிப்பதற்காகத்தான்!

  அன்னபூரணி நடத்திய / நடத்துகிற திருவிளையாடல்கள் அபாரமானவை.

  காசியில் நாராயண தீட்சிதர் என்றொரு மகான் வாழ்ந்து வந்தார். அடியார்களை அன்பொடு நடத்துவார். கங்கைக் கரையில் சந்நியாசிகளையும் சாதுக்களையும் கண்டு வணங்குவார்.

  இப்படிப்பட்டவர், ஒரு முறை, கங்கைக் கரை சந்நியாசிகளைத் தம்முடைய இல்லத்திற்கு உணவருந்த அழைத்தார். அவர்களும் ஒத்துக்கொண்டனர். மகிழ்ச்சியோடு வீடு திரும்பியவர், மனைவியிடம் விஷயத்தைக் கூறிவிட்டு, மீண்டும் கங்கைக்கு நீராடச் சென்றார்.

  வீடு திரும்பியவருக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி! உணவு தயாரிக்கவோ அன்னம் பரிமாறவோ இயலாத நிலையில் மனைவி. என்ன செய்வது என்று புரியவில்லை. தவித்தார், துடித்தார். சாதுக்களை அழைத்துவிட்டு, திரும்பிவிடுங்கள் என்று சொல்லமுடியாதே! அவர்களும் சிறிது நேரத்தில் வந்துவிடுவார்களே! நிலை கொள்ளாமல் தவித்தவர், வாசலுக்கும் உள்ளுக்குமாக நடந்தார்.

  வாசலில் நின்று எட்டிப் பார்த்தார். யாரோ ஒரு பெண் அவசர அவசரமாக வந்தாள். அவளுடைய மூக்கில் புல்லாக்கு மின்னியது. அழகாகவும் அலங்கார பூஷிதையாகவும் இருந்தாள்.

  தீட்சிதரின் வீட்டு வாசலில் நின்றாள். 'ஐயா! தங்களுக்கு ஆட்சேபம் இல்லையானால் நான் உங்கள் வீட்டில் சமைக்கட்டுமா? உங்கள் சங்கடம் எனக்குத் தெரியும். நானேகூடப் பரிமாறுகிறேன்' என்றாள்.

  கரும்பு தின்னக் கூலியா? சங்கட நிவர்த்திக்காக அம்பிகையைப் பிரார்த்தித்துக் கொண்டே தீட்சிதரும் சம்மதித்தார்.

  சமைத்தாள்; பரிமாறினாள். அதிதிகள் ஒவ்வொருவராக விடைபெற்றனர். அவர்கள் அகல்வதற்கு முன்னரே அவளும் அவசர அவசரமாக வந்தாள். நேரமாகிவிட்டது என்று ஏதோ சொன்னாள். தானும் புறப்பட்டுவிட்டாள்.

  எல்லா அமளி துமளியும் தீர்ந்த நிலையில், தீட்சிதருக்கு உறைத்தது. அந்தப் பெண்மணி யார் என்றே கேட்கவில்லையே? எந்த வீடு என்றுகூடத் தெரியாது. பணம் பொருள் கொடுத்துக் கொச்சைப்படுத்தவேண்டாம்; ஆனால், ஆபத்தில் உதவியவருக்கு நன்றி சொல்லியிருக்க வேண்டாமோ? தோன்றவே இல்லையே இருந்த அவசரத்திலும் பதைபதைப்பிலும் அவள் செய்த உதவியை ஏற்றுக் கொண்டாயிற்று; ஆனால், நன்றி சொல்லக்கூட இல்லையே! அவளையும் சாப்பிடச் சொல்லியிருக்கலாம். அடுப்படியில் உழைத்த பெருமாட்டி எவ்வளவு பெருந்தன்மையாகச் சிரித்துக்கொண்டே இருந்தாள். எவ்வளவு பெருந்தன்மையாக நகர்ந்துவிட்டாள்.

  நினைக்க நினைக்க..தீட்சிதருக்கு ஆறவே இல்லை. மனமெல்லாம் அழுதது. புழக்கடைத் தட்டிக்கு அந்தப்பக்கத்தில் இருந்த மனைவியும் ஏதோ கூறுவது கேட்டது. உதவின பெண்ணை மதிக்காமல் அனுப்புவது பாவமில்லையா என்று புலம்புவதாகப் புரிந்தது.

  அழுதுகொண்டே படுத்தவர், மனச் சோர்விலும் உடல் களைப்பிலுமாக உறங்கிப் போனார். ஏதோதோ எண்ணங்கள். திடீரென்று ஒரு கனவு. கனவில், காலையில் வந்த பெண்மணி. அதே அழகு, அதே கம்பீரம், அதே கரிசனம். ஆனால், சற்று அதிகப்படியாகச் சிரிப்பதுபோல் இருந்தது.

  உற்றுப் பார்த்தார். நன்றி சொல்லத் தெரியாத முட்டாள் என்பதனால் பரிகாசமாகச் சிரிக்கிறாளோ? இல்லை, சிரிப்பில் பரிகாசம் இல்லை, பாசம் இருந்தது.

  புரியாமல் விழிக்க…. 'என்னை இன்னுமா உனக்கு அடையாளம் தெரியவில்லை?', என்னும் வினா திகைக்க வைத்தது.

  'எங்கே பிறருக்கு உணவிட்டு அன்புடன் ஆதரிப்பவர்கள் இருக்கிறார்களோ, அங்கே நான் இருப்பேன். அதனால்தான், உன்னுடைய வீட்டு வாசலிலும் நின்று கொண்டிருந்தேன். எட்டிப் பார்த்தாய். அழைக்கிறாயோ என்று ஓடி வந்தேன். அதெல்லாம் கிடக்கட்டும். வாசல் கிழக்குத் திண்ணையில், என் புல்லாக்கு விழுந்துவிட்டது. எடுத்துக் கொண்டு வராதே. அந்த இடத்திலேயே எனக்கொரு கோயில் எழுப்பு. காசி நகரில் நல்ல இடமாக அது அமையட்டும்', என்று அம்பிகை அருள் மலர்ந்தாள். இப்போதும், காசி நகரில், நாராயண தீட்சிதர் பெயரால் விளங்கும் வீதியில், தத்தாத்ரேயர் ஆலயத்திற்கு அருகில் இந்த ஆலயம் உள்ளது.

  அன்னபூரணியின் அன்பு இதுதான்! யாராக இருந்தாலும், எந்த உயிராக இருந்தாலும், பசியால் தவிக்கக்கூடாது என்றே அம்பிகை எண்ணுகிறாள். இதனால்தான், அம்பிகையே அன்னபூரணியாகி வருகிறாள்.

  பசிப்பிணி போக்கவேண்டும் என்றால், எல்லோரும் உறவாகவும் ஒட்டாகவும் நட்பாகவும் பழகவேண்டும். இத்தகைய ஒருமைப்பாடுதான் அன்னபூரணிக்கு வேண்டும்.

  'ஆதி க்ஷாந்த ஸமஸ்த வர்ணனகரீ' என்றே அன்னபூரணியை ஆதிசங்கரர் வர்ணித்தார். அதாவது, 'அ' முதல் 'க்ஷ' வரையான அட்சரங்களாகவும் மந்திரங்களாகவும் இருப்பவள். மந்திரதேவியிடத்தில் அன்னத்தை, உணவை, சோற்றையா யாசிப்பது?

  நம்முடைய உடல் என்பது பஞ்சபூதச் சேர்க்கையால் ஆனது. அன்னத்தால், உணவால் இந்த உடல் வளர்கிறது. உலகப் பிறப்பென்றாலே உடல் உண்டு. அன்னத்தால் உடல் வளர, வளர, படிப்படியாக அறிவும் அன்பும் வளரும். இவை வளர்ந்தால், மெல்ல மெல்ல ஞானம் வளரும். அன்னமிட்டால், அன்புக்கும் அறிவுக்கும் ஞானத்திற்கும் வாயில்கள் திறந்துவிடப்படும்.

  இது மட்டுமில்லை; அன்னம் என்பது ஒருவகையில் அனுபவமும் ஆகும். உணவை உண்ணும்போது, நா மட்டுமல்லாது, கண்களும் காதுகளும் நாசியும் செயல்படுகின்றன; உணவின் வண்ணமும் நேர்த்தியும், உணவு சமைக்கும்போது கிட்டும் ஒலிகளும், உணவின் வாசமும் எத்தனை விதவிதமான அனுபவங்களைத் தருகின்றன. உணவே அனுபவமும் ஆகிறது. உணவே கைங்கரியமும் ஆகிறது. ஆகவேதான், 'அஹம் அன்னம்' என்று வேத - உபநிடதங்கள் உரைக்கின்றன.

  அன்பு, அறிவு, அனுபவம், பக்குவம், பரிபக்குவம், பரமஞானம் என்று எல்லாவற்றுக்கும் அன்னமே வழிவகுக்கும் என்பதால்தான், அம்பிகையும் அன்னபூரணி ஆகி அருள்கிறாள். அன்னபூரணியிடம் அன்னம் யாசித்தபின் ஞானமும் யாசிக்கவேண்டும்.

  அன்னபூர்ணே ஸதாபூர்ணே சங்கர பிராண வல்லபே

  ஞான வைராக்ய ஸித்யர்த்தம் பிக்ஷாம் தேஹி ச பார்வதி மாதா அன்னபூரணேச்வரி பூரணையானவள்; பரிபூரணையானவள்.

  புவி வாழ்வுக்கு மட்டுமல்ல, வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதற்கும், வானுறையும் தெய்வப் பேறு பெறுதற்கும் இவளே ஆதாரம், இவளே வழிகாட்டி, இவளே அதிதேவதை!

  தொடர்புக்கு - sesh2525@gmail.com

  Next Story
  ×