என் மலர்
புதுச்சேரி
விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கடந்த 9.11.2019 அன்று புதுவை கம்பன் கலை அரங்கத்தில் நடந்த விடுதலை சிறுத்தைகள் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
அப்போது அவர் இந்து தெய்வங்களைப்பற்றி சில கருத்துக்களை தெரிவித்தார். இது, இந்து கோவில்களையும், தெய்வங்களையும் அவமதிக்கும் வகையில் இருப்பதாகவும், இந்து மத உணர்வை புண்படுத்துவதாகவும் கூறி இந்து முன்னணி பொதுச்செயலாளர் டி.என். கண்ணன் பெரம்பலூர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
திருமாவளவன் பேசிய இடம் புதுவை என்பதால் பெரம்பலூர் போலீசார் பின்னர் அந்த வழக்கை தமிழக டி.ஜி.பி. மூலமாக புதுவை போலீசுக்கு மாற்றினார்கள்.
அதன் அடிப்படையில் புதுவை ஒதியஞ்சாலை போலீசார் திருமாவளவன் மீது மத அவமதிப்பு உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேதராப்பட்டு:
புதுவை ஆலங்குப்பத்தை அடுத்த சஞ்சீவிநகர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் மணி என்கிற உலகநாதன் (வயது 38). தச்சு தொழிலாளி. இவரது மனைவி மாதா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் மணி தனது மோட்டார் சைக்கிளில் மகன் மற்றும் மகளை தவளக்குப்பத்தில் உள்ள உறவினர் வீட்டில் கொண்டு விட்டு விட்டு சொந்த ஊர் நோக்கி திரும்பிக் கொண்டு இருந்தார்.
மொரட்டாண்டி டோல்கேட் திண்டிவனம் பைபாஸ் சாலையில் மணி வந்து கொண்டிருந்தார். அப்போது ஆரோவில்லில் இருந்து திருச்சிற்றம்பலம் கூட்டு ரோடு நோக்கி டிப்பர் லாரி ஒன்று வந்து கொண்டு இருந்தது.
அப்போது மணி சாலையை கடக்க முயன்றார். திடீரென எதிர்பாராதவிதமாக அங்கு வந்த டிப்பர் லாரி மணி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் லாரியின் பின்பக்க டயர் மணியின் தலையில் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே மணி தலை நசுங்கி பலியானார். இதனை அறிந்த லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு அஜய்தங்கம் மற்றும் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்தனர்.
மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த எச்சரிக்கை விளக்கை பொருட்படுத்தாமல் சாலையை கடந்ததே இந்த விபத்துக்கான காரணம் என அப்பகுதியை சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டினர்.
கொரோனா வைரஸ் தாக்குதலை தடுப்பதற்கு இதுவரை எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு கலெக்டர் அருண் தலைமை தாங்கினார். துணை கலெக்டர்கள் சக்திவேல், தமிழ்ச்செல்வம், சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார், துணை இயக்குனர் ரகுநாத் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் புதுவை அரசு துறைகள் சார்பில் பேரிடர் மேலாண்மை அமைப்பை உருவாக்கி மக்கள் அதிகம் கூடும் இடமான பஸ் நிலையம், ரெயில் நிலையம், கடற்கரை ஆகிய இடங்களில் கொரோனா வைரஸ் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் ஆகியவை தொடர்ந்து இருந்தால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதுவையில் முக கவசம் (மாஸ்க்) தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதுவையில் கொரோனா வைரஸ் பாதிப்பில்லை என்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் சுகாதாரம், பள்ளி கல்வி, சமூக நலம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் துணை இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.
சீனாவில் பலரது உயிரை பறித்த கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவிலும் 50-க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர்.
குறிப்பிட்ட சில நாடுகளை சேர்ந்தவர்கள் இந்தியாவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோரும் விமான நிலையத்தில் பலத்த சோதனைக்கு பின்னரே வெளியேற அனுமதிக்கப்படுகின்றனர்.
புதுவையை பொறுத்தவரை சுற்றுலா பயணிகள் வருகைதான் நகரத்தை சிறப்பாக வைத்திருக்கும். தற்போது கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பதால் வெளிமாநில சுற்றுலா பயணிகள் புதுவைக்கு சுற்றுலா வருவதை தவிர்த்துள்ளனர்.
இதேபோல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் புதுச்சேரிக்கு வரவில்லை. இதனால் ஓட்டல்களில் அறைகள் பல காலியாக உள்ளன. கடற்கரை, தாவரவியல் பூங்கா, சுண்ணாம்பாறு படகு குழாம் உள்ளிட்ட இடங்களிலும் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாகவே காணப்பட்டது. வெளிமாநிலங்களிலிருந்து வந்த சுற்றுலா பயணிகள் முகக்கவசம் அணிந்தே புதுவையை சுற்றிப்பார்த்தனர்.

சீனாவில் ஆயிரக்கணக்கானவர்களின் உயிர்களை பலிகொண்ட கொரோனா வைரஸ் இந்தியாவிலும் புகுந்துள்ளது. இதனால் 40க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து குறிப்பிட்ட சில வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் இந்தியாவிற்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் இந்தியாவுக்கு வரும்போது விமான நிலையத்திலேயே பரிசோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
சந்தேகப்படும்படியானவர்கள் தனியாக இருக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள். புதுவையிலும் மார்பக நோய் மருத்துவமனை, ஜிப்மர் ஆஸ்பத்திரி போன்றவற்றில் தனியாக வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்று சுகாதாரத்துறையும் அறிவுறுத்தி உள்ளது.
மேலும் சுகாதாரத்துறை அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது. இதனை 104 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
இதற்கிடையே புதுவை வைத்திக்குப்பத்தில் நேற்று நடந்த மாசிமக விழாவில் சுகாதாரத்துறை சார்பில் விழிப்புணர்வு நோட்டீசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து காய்ச்சல், மூக்கு ஒழுகுதல், சளித்தொல்லை, உடல்வலி, மயக்கம், சோர்வு, தலைவலி, வயிற்றுப்போக்கு, தொண்டைவலி, இருமல், மூச்சு திணறல் ஆகியன இருந்தால் அருகிலுள்ள அரசு மருத்துவமனையை அணுக அறிவுறுத்தப்பட்டது.
இருமும்போதோ, தும்மும்போதோ கைக்குட்டையை உபயோகிக்கவேண்டும், கைகளை அடிக்கடி சோப்பின் மூலம் கழுவவேண்டும், முகக்கவசம் அணியவேண்டும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை தவிர்க்கவேண்டும், அதிக தண்ணீர், சுத்தமான நன்கு வேகவைத்த உணவை உட்கொள்ள வேண்டும், போதுமான ஓய்வு எடுக்கவேண்டும், கட்டிப்பிடித்தல், முத்தமிடுதல், கைகுலுக்குதல், எச்சில் துப்புதல், புகைப்பிடித்தல் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் என்றும் டாக்டரை ஆலோசிக்காமல் சுயமாக மருந்து உட்கொள்ளக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டன.






