என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    புதுவை அருகே மோட்டார் சைக்கிள்- டிப்பர் லாரி மோதல்: தச்சு தொழிலாளி பலி

    மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதியதில் தச்சு தொழிலாளி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.

    சேதராப்பட்டு:

    புதுவை ஆலங்குப்பத்தை அடுத்த சஞ்சீவிநகர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் மணி என்கிற உலகநாதன் (வயது 38). தச்சு தொழிலாளி. இவரது மனைவி மாதா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் மணி தனது மோட்டார் சைக்கிளில் மகன் மற்றும் மகளை தவளக்குப்பத்தில் உள்ள உறவினர் வீட்டில் கொண்டு விட்டு விட்டு சொந்த ஊர் நோக்கி திரும்பிக் கொண்டு இருந்தார்.

    மொரட்டாண்டி டோல்கேட் திண்டிவனம் பைபாஸ் சாலையில் மணி வந்து கொண்டிருந்தார். அப்போது ஆரோவில்லில் இருந்து திருச்சிற்றம்பலம் கூட்டு ரோடு நோக்கி டிப்பர் லாரி ஒன்று வந்து கொண்டு இருந்தது.

    அப்போது மணி சாலையை கடக்க முயன்றார். திடீரென எதிர்பாராதவிதமாக அங்கு வந்த டிப்பர் லாரி மணி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் லாரியின் பின்பக்க டயர் மணியின் தலையில் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே மணி தலை நசுங்கி பலியானார். இதனை அறிந்த லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு அஜய்தங்கம் மற்றும் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்தனர்.

    மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த எச்சரிக்கை விளக்கை பொருட்படுத்தாமல் சாலையை கடந்ததே இந்த விபத்துக்கான காரணம் என அப்பகுதியை சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டினர்.

    Next Story
    ×