என் மலர்
புதுச்சேரி
திருபுவனை பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமரன் (வயது 28). தனியார் பஸ் கண்டக்டராக வேலை செய்து வந்த இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு மாணவி ஒருவரை ஏமாற்றி விழுப்புரத்தில் நண்பர்களுக்கு விருந்தாக்கிய சம்பவத்தில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு காலாப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே முத்துக்குமரனுக்கு அவருடைய பெற்றோர் திருமணத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
இதற்காக முத்துக்குமரன் ஒரு வாரம் பரோலில் செல்ல விண்ணப்பித்து இருந்தார். அவருக்கு பரோல் வழங்க முடிவு செய்யப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் நேற்று கிழக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு மாறன் தலைமையில் போலீசார் கைதிகளின் அறைகளில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது முத்துக்குமரன் பதுக்கி வைத்து இருந்த செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து முத்துக்குமரனுக்கு திருமணத்துக்காக வழங்கப்பட இருந்த பரோல் ரத்து செய்யப்பட்டது.
பரோல் ரத்து செய்யப்பட்டதால் முத்துக்குமரன் மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார். இதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த அவர் ஜெயிலில் இருந்த பினாயிலை எடுத்து குடித்தார்.
இதில் மயங்கி விழுந்த அவரை ஜெயில் வார்டன்கள் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஜெயிலில் கைதி பினாயிலை குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற் படுத்தி உள்ளது.
புதுவைக்கு அண்டை மாநிலமான தெலுங்கானா, கர்நாடகா, ஆந்திரா, தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவது வழக்கம்.
வெள்ளிக்கிழமை இரவு முதல் புதுவையில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுண்ணாம்பாறு படகு குழாம், கடற்கரை சாலை, பாரதி பூங்கா உள்ளிட்ட சுற்றுலா இடங்களில் பயணிகள் அதிகளவில் காணப்படுவர்.
வழக்கமாக மார்ச், ஏப்ரல் மாதங்களில் பள்ளி பொதுத்தேர்வு நடப்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை குறையும். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக முற்றிலுமாக சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது.
புதுவையில் எங்கும் சுற்றுலா பயணிகளை காண முடியவில்லை. புதுவையில் பல விடுதிகள் பயணிகள் வருகையின்றி வெறிச்சோடியது.
இறைச்சியின் மூலமாக கொரோனா வைரஸ் பரவுவதாக வதந்திகள் பரவியது. இதனை சுகாதாரத்துறை மறுத்துள்ளது. இருப்பினும் பொதுமக்கள் மத்தியில் இந்த பீதி குறையவில்லை. இதனால் கோழி இறைச்சி விலை படுவீழ்ச்சியடைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.180 முதல் 200 வரை விற்று வந்த கோழி இறைச்சி தற்போது ரூ.60 முதல் ரூ.80 வரை விற்கப்படுகிறது.
புதுவை கவர்னர் மாளிகையில் நாள்தோறும் மாலை 5 மணி முதல் 7 மணி வரை பொதுமக்கள் சந்திப்பு நேரம் கடைபிடிக்கப்பட்டது.
இந்த நேரத்தில் யார் வேண்டுமானாலும் கவர்னர் மாளிகை வந்து தங்களின் புகார்களை தெரிவிக்க கவர்னர் கிரண்பேடி ஏற்பாடு செய்திருந்தார். கொரோனா வைரஸ் பரவி வரும் காரணமாக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டாம் என மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் அறிவுறுத்தியுள்ளது.
இதன்படி புதுவை கவர்னர் மாளிகையில் நாள்தோறும் நடத்தப்பட்ட மக்கள் சந்திப்பு ரத்து செய்யப்படுவதாக கவர்னர் மாளிகை அறிவித்தது.
இந்த நிலையில் போன் மூலம் பொதுமக்கள் தங்களின் குறைகளை மக்கள் சந்திப்பு நேரத்தில் தெரிவிக்க கவர்னர் கிரண்பேடி ஏற்பாடு செய்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது:-

கவர்னர் மாளிகையை தொடர்பு கொள்ள நினைப்பவர்கள் நேரடியாக தங்கள் புகார்களை தெரிவிக்கலாம். ஏற்கனவே கவர்னர் மாளிகை சந்திப்பு நேரமாக இருந்த மாலை 5 மணி முதல், இரவு 7 மணி வரை திங்கள் முதல் புதன்கிழமை வரை மக்கள் தங்கள் புகார்களை தெரிவிக்கலாம்.
இதற்காக 2224499, 2225390, 2334050 என்ற எண்கள் செயல்பாட்டில் இருக்கும்.
பொதுமக்களின் புகார்கள் பதிவு செய்யப்பட்டு கவர்னர் மாளிகை குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட துறைக்கு புகார்தாரரின் ஆடியோ அனுப்பி வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
புதுவை கவர்னர் மாளிகை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மக்களின் குறைகளை தீர்க்க உரிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.
வருகிற 16-ந் தேதி முதல் இந்த மக்கள் குறைகேட்பு தொடங்கும். மக்கள் சந்திப்பு நேரம் தவிர பொதுமக்கள் தங்கள் புகார்களை 1031 என்ற தொலைபேசி எண்ணில் எப்போது வேண்டுமானாலும் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதுவை முதலமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளோம். வெளிநாடுகளில் இருந்து வந்த 16 பேருக்கு கொரானா வைரஸ் இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டு ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டது.
இதில் 14 பேருக்கு பாதிப்பில்லை என வந்துள்ளது. மற்ற 2 பேரின் முடிவுகள் இன்னும் வரவில்லை.
புதுவையில் இதுவரை கொரோனா பாதிப்பு இல்லை. தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அரசின் பல்வேறுதுறை அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தினோம்.
இந்த கூட்டத்தில் கொரோனாவை தடுப்பு நடவடிக்கை, விழிப்புணர்வு, சிகிச்சை தொடர்பாக விவாதித்துள்ளோம். முக கவசத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தாராளமாக கிடைப்பதற்காக வெளி மாநிலத்தில் இருந்து வரவழைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
பொதுமக்கள் கொரோனா தொற்று இருப்பதாக சந்தேகப்பட்டால் புதுவை அரசு மருத்துவமனைக்கு தகவல் தர வேண்டும். பள்ளி மாணவர்கள் எப்படி கைகழுவ வேண்டும் என பயிற்சி தருகிறோம். விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளோம்.
புதுவைக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவதால் எல்லையில் பரிசோதனை முகாம் அமைத்துள்ளோம். 3 அரசு டாக்டர்கள் டெல்லி சென்று கொரோனா வைரஸ் சிகிச்சை அளிப்பது தொடர்பாக பயிற்சி பெற்று வந்துள்ளனர். இந்த டாக்டர்கள் அரசு மற்றும் தனியார் டாக்டர்களுக்கு பயிற்சி அளித்துள்ளனர்.
கொரோனா தடுப்பிற்கு உபகரணங்கள் வாங்க நிதி ஒதுக்கியுள்ளோம். சீனாவில் மக்கள் நடமாட்டத்தை குறைத்ததின் மூலமாகவே கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தினார்கள்.
புதுவையிலும் மக்கள் பெரியளவில் கூடுவதை தவிர்க்கும்படி கூறியுள்ளோம். திருமணம் போன்ற விழாக்களில் கைகளை கழுவிவிட்டு பங்கேற்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.
திருநள்ளாறு கோவிலுக்கு பல்வேறு மாநில பக்தர்கள் வருகின்றனர். அவர்கள் வருவதை தடுக்க முடியாது. நளன்தீர்த்த குளத்தில் குளிப்பதை தடை செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து ஆலோசனைக்கூட்டம் முதல்- அமைச்சர் நாராயணசாமி தலைமையில் கேபினட் அறையில் நடந்தது.
கூட்டத்தில் அரசு செயலர்கள் அன்பரசு, சுர்பீர்சிங், அசோக்குமார், கலெக்டர் அருண், டிஜிபி பாலாஜி ஸ்ரீவத்சவா, நகராட்சி ஆணையாளர்கள் கந்தசாமி, சிவக்குமார், சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
நெட்டப்பாக்கம் போலீசார் நேற்று இரவு நெட்டப்பாக்கம் அருகே ஏரிக்கரை காலனி பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது ரெங்கா ரெட்டிப்பாளையம் மலட்டாற்றில் ஜே.சி.பி. எந்திரம் மூலம் டிப்பர் லாரியில் மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது ஜே.சி.பி. எந்திரம் மூலம் டிப்பர் லாரியில் மணல் ஏற்றிக்கொண்டு இருந்தவர்கள் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதையடுத்து ஜே.சி.பி. எந்திரம் மற்றும் டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்து நெட்டப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து மணல் கடத்த முயன்றவர்கள் யார் என்பது குறித்தும், ஜே.சி.பி. எந்திரம் மற்றும் டிப்பர் லாரி யாருக்கு சொந்தமானது என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பாரதிய ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் புதுவையில் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நடிகர் ரஜினிகாந்த் முதலமைச்சர் பதவிக்கு வரமாட்டேன் என்றும், தனது அரசியல் நிலைப்பாடு குறித்து 3 திட்டங்களையும் அறிவித்துள்ளார்.
இது பா.ஜனதாவில் ஏற்கனவே நடைமுறையில் இருந்ததுதான். பா.ஜனதாவில் பணியாற்றிய தீனதயாள் உபாத்யா போன்றோர் கட்சி அமைப்புகளில் மட்டும்தான் செயல்பட்டனர். அவர்கள் ஆட்சிக்கு வர விரும்பவில்லை.
அதேபோல ரஜினி ஒரு திட்டத்தை முன் வைக்கிறார். இது நல்லதுதான். அமைப்பு ரீதியாக பணியாற்றுவோர் பிரபலத்தை விரும்ப மாட்டார்கள். ஆட்சியில் உள்ளவர்கள் பிரபலத்தை விரும்புவார்கள். நல்லெண்ண அடிப்படையில் ரஜினி இதை சொல்லியுள்ளார்.
ரஜினி கட்சி தொடங்கட்டும். பா.ஜனதாவுடன் ரஜினிக்கு நல்ல நட்பும், மதிப்பும் உள்ளது. புதிதாக தமிழகத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள பா.ஜனதா தலைவர் முருகன் திறமையானவர். நீண்ட கட்சி அனுபவம் கொண்டவர். அவர் திறம்பட பணியாற்றுவார். அவரின் நியமனம் எங்களுக்கு திருப்தி அளிக்கிறது.
பா.ஜனதாவில் உள்ளவர்களும் மனிதர்கள்தான். அவர்களுக்கு பதவிக்கு வர ஆசை இருக்கும். ஆனால், கட்சித்தலைமை ஒருவரை தலைவராக அறிவித்தபிறகு அந்த பதவிக்கு வர விரும்பியவர்கள்தான் முதல் மாலையை அவர்களுக்கு அணிவிப்பார்கள். இதுதான் பா.ஜனதாவின் நடைமுறை.
ஜோதிராவ்சிந்தியா பிரதமரை பார்க்க விரும்பினார். அவர் பார்க்க விரும்புவதை வேண்டாம் என மறுக்க முடியுமா? காங்கிரஸ் கட்சி பலவீனமாக உள்ளது. தங்கள் பலவீனத்தை சீரமைப்பதற்கு பதிலாக பா.ஜனதா மீது வீண் பழி சுமத்துகின்றனர். நாங்கள் யாரையும் விலை கொடுத்து வாங்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுவை ஆச்சார்யா கல்வி குழுமத்தின் கீழ் என்ஜினீயரிங், கலை அறிவியில், ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் இயங்கி வருகிறது.
புதுவை வில்லியனூரில் ஒரே கல்வி வளாகத்தில் ஆச்சார்யா என்ஜினீயரிங் கல்லூரி மற்றும் ஆச்சார்யா கலை அறிவியல் கல்லூரியும் செயல்பட்டு வருகிறது. இந்த இரு கல்லூரி மாணவர்களிடையே யார் பெரியவர்? என்ற ரீதியில் அவ்வப்போது மோதல் இருந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று காலை என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் ஒருவர் தன்னுடன் படிக்கும் மாணவியுடன் பேசிக் கொண்டிருந்தார். இதனை அதே கல்லூரியை சேர்ந்த மற்றொரு மாணவர் கண்டித்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து மாணவர் ஒருவருக்கு என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களும், மற்றொருவருக்கு கலை அறிவியல் கல்லூரி மாணவர்களும் ஆதரவாக திரண்டனர். கல்லூரி வகுப்புகள் முடிவடையும் நேரம் என்பதால் இரு தரப்பினரும் கல்லூரி வளாகத்தில் மோதிக் கொண்டனர்.
இதனால் கல்லூரி வளாகமே பெரும் கலவரம் போல் காட்சி அளித்தது. மாணவர்கள் தங்களுக்குள் கையில் கிடைத்த கட்டை, கல், ஆகியவற்றை கொண்டு ஒருவர் மீது ஒருவர் வீசி தாக்கிக்கொண்டனர்.
மாணவர்களை கட்டுப்படுத்த முடியாமல் கல்லூரி பேராசிரியர்களும், ஊழியர்களும் திணறினர். இந்த தாக்குதலில் 5 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
இந்த மோதல் சுமார் ½ மணி நேரம் நீடித்தது. இதன்பிறகு மாணவர்கள் தாங்களாகவே மோதலை கைவிட்டு கல்லூரியில் இருந்து வெளியேறினர்.
இந்த சம்பவம் குறித்து கல்லூரி நிர்வாகம் தரப்பிலோ, மாணவர்கள் தரப்பிலோ போலீசில் புகார் செய்யப்படவில்லை. இதனால் போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை.
இருப்பினும் கல்லூரி நிர்வாகத்தினர் சார்பில் மாணவர்களிடையே மீண்டும் மோதல் தொடராமல் தவிர்க்க கல்லூரிக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் உகான் நகரில் தொடங்கிய உயிர் கொல்லியான ‘கோவிட்-19’ என்ற கொரோனா வைரஸ் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வருகிறது. தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இதுவரை இந்தியாவில் 60-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதுவை அரசு சார்பில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி புதுவை விமான நிலையம், ரெயில் நிலையம், பஸ் நிலையம் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் மருத்துவக்குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வரும் நபர்களை தீவிர சோதனைக்கு பின்னரே புதுவைக்கு அனுமதிக்கின்றனர்.
மேலும் புதுவை கோரிமேட்டில் உள்ள காசநோய் மருத்துவமனை, அரசு பொது மருத்துவமனை, ஜிப்மர் மருத்துவமனை உள்பட அனைத்து தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதுச்சேரியில் இதுவரை யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 23 பேருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் 20 பேருக்கு எந்த பாதிப்பும் இல்லை என முடிவு வந்துள்ளன. மீதமுள்ள 3 பேரின் ரத்த மாதிரிகள் புனேவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான முடிவுகள் தெரியவரும். அவர்கள் 3 பேரும் மருத்துவக்குழுவின் கண்காணிப்பில் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
அரியாங்குப்பம் ஆர்.கே. நகர் கம்பன் வீதியை சேர்ந்தவர் சிவா (வயது 57). இவருக்கு அழகம்மாள் என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
டிரைவர் வேலை செய்து வந்த சிவா குடிப்பழக்கத்துக்கு ஆளானார். இதனால் கடந்த 5 மாதமாக டிரைவர் வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்தார்.
அதுபோல் நேற்று முன்தினம் இரவு சிவா மது குடித்து விட்டு போதையில் தள்ளாடியபடி வீட்டுக்கு வந்தார்.
அப்போது வீட்டின் படிக்கட்டில் ஏறிய போது சிவா போதையில் தடுமாறி விழுந்தார். இதில், நெற்றியில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த சிவாவை அவரது மனைவி அழகம்மாள் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சிவா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் வினாயகமூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
புதுவை முதலியார்பேட்டை பழைய மார்க்கெட் வீதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 78). ஓய்வுபெற்ற ரோடியர் மில் தொழிலாளி.
கடந்த சில ஆண்டுகளாக இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், நோய் குணமாகவில்லை. இதனால் பெருமாள் விரக்தியுடன் இருந்து வந்தார்.
சம்பவத்தன்று இரவு நோய் கொடுமை அதிகமானதால் மனமுடைந்த பெருமாள் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டில் இருந்த மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக எடுத்து தின்றார்.
இதில், மயங்கி கிடந்த பெருமாளை அவரது குடும்பத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பெருமாள் இன்று அதிகாலை பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரபத்திரசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
அரியாங்குப்பம் கப்சியல் வீதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் மற்றும் போலீசார் அந்த பகுதியில் உள்ள வீட்டில் சோதனை நடத்தினர். சோதனையில் மஞ்சுளா (வயது 40) என்ற பெண் விபசாரம் நடத்தி வந்தது தெரியவந்தது.
மேலும் அங்கு மரக்காணத்தை சேர்ந்த வாடிக்கையாளர்களான வினோத்குமார்(30), ஜெகன் (30) ஆகியோர் விபசாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அந்த 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 2 பெண்களை போலீசார் மீட்டு பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
புதுச்சேரி:
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி மத்திய பிரதேச அரசியல் நிலை குறித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.
அதில், கர்நாடகாவில் செய்தது போல மத்திய பிரதேசத்திலும் பா.ஜனதா ஜனநாயக படுகொலை நிகழ்த்த நினைக்கிறது. பா.ஜனதாவின் சூழ்ச்சி வலையில் ஜோதிராதித்ய சிந்தியா விழுந்து விட்டார். அவர் தான் செய்தது இமாலய தவறு என்பதை விரைவில் உணர்ந்துகொள்வார்.
பா.ஜனதா அவரை பயன்படுத்திக்கொண்டு பின்னர் தூக்கியெறியும். மத்தியபிரதேசத்தில் கமல்நாத் அரசின் பெரும்பான்மையை நிரூபிப்பார் என நான் நம்புகிறேன்.
இவ்வாறு பதிவிட்டுள்ளார்.






