என் மலர்
புதுச்சேரி
புதுவை காமராஜர் சாலை சாரதிநகர் 4-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சண்முகம். இவர் காமராஜர் சாலையில் இளநீர் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகள் லட்சுமி (வயது23). இவர் புதுவையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
இவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து திருமண நிச்சயம் செய்தனர். வருகிற 27-ந்தேதி திருமணம் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்து வந்தனர். ஆனால் லட்சுமிக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை லட்சுமி வீட்டின் கழிவறைக்கு சென்றார். வெகுநேரமாக திரும்பிவரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் கழிப்பறையின் கதவை உடைத்து பார்த்த போது லட்சுமி இரும்பு கம்பியில் துப்பட்டாவால் தூக்குபோட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் லட்சுமியை தூக்கில் இருந்து மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி லட்சுமி பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து திருமணத்துக்கு விருப்பம் இல்லாததால் லட்சுமி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை அருகே வானூரை அடுத்த ரங்கநாதபுரம் பூந்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் செங்கேணி (வயது 62). விவசாயி.
இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் ரங்கநாதபுரத்தில் இருந்து லிங்காரெட்டிபாளையம் நோக்கி சென்றார். லிங்கா ரெட்டிப்பாளையம் சுடுகாடு அருகே வேகத்தடை இருந்ததால் செங்கேணி திடீர் பிரேக் போட்டார்.
இதில், மோட்டார் சைக்கிளில் இருந்து தடுமாறி விழுந்த செங்கேணி தலையில் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அந்த வழியாக சென்றவர்கள் செங்கேணியை மீட்டு வானூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த செங்கேணி சிகிச்சை பலன் இன்றி இன்று அதிகாலை பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து அவரது மகன் கந்தன் கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போக்கு வரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா முழுவதும் உள்ள கல்வி நிலையங்களை வருகிற 31-ந் தேதி வரை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையொட்டி புதுவை மத்திய பல்கலைக்கழகத்துக்கு வருகிற 31-ந்தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) சித்ரா அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கோவிட்-19 காரணமாக வருகிற 31-ந்தேதி வரை பல்கலைக்கழகத்துக்கு விடுமுறை விடப்படுகிறது. இக்காலத்தில் வகுப்புகள், தேர்வுகள், நூலகம் உள்பட அனைத்தும் ஒத்திவைக்கப்படுகின்றன.
விடுதி மாணவ- மாணவிகளும் அவரவர் ஊர்களுக்கு திரும்பி செல்லலாம். விடுதிகள் அனைத்தும் இன்று மூடப்படும்.
பல்கலைக்கழகம் தொடங்கும் போது திரும்பி வரலாம். விடுதியில் இருந்து புறப்படும் போது வார்டனிடம் தெரிவிக்க வேண்டும்.
அத்துடன் மாணவர்கள் தங்கள் துறைத்தலைவர் மற்றும் விரிவுரையாளர்களிடம் கல்வி தொடர்பாக தொடர்பில் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுவை அம்பலத்தடையார் மடத்து வீதியில் (கொசக்கடை வீதி) உள்ள விடுதி ஒன்றில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலூர் பகுதியை சேர்ந்த 2 காதல் ஜோடிகள் அறை எடுத்து தங்கினர்.
இந்த நிலையில் பெரியகடை போலீஸ்காரர் சதீஷ்குமார், ஐ.ஆர்.பி. போலீஸ்காரர் சுரேஷ் ஆகியோர் அங்கு ரோந்து பணி சென்றுள்ளனர். அவர்கள் காதல் ஜோடி தங்கியிருந்த அறைக்கு சென்று சோதனை என்ற பெயரில் அவர்களிடம் தகாத முறையில் பேசியுள்ளனர்.
மேலும் ஒரு காதல் ஜோடியை மிரட்டி ரூ.15 ஆயிரம் பணம் பறித்ததாக கூறப்படுகிறது. மற்றொரு காதல் ஜோடியிடம் பெரிய அளவில் பணம் இல்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் அவர்களிடம் இருந்த பணத்தை பறித்துக் கொண்ட போலீசார் காதலன் முன்னிலையில் காதலியான இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றிய தகவல் சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவா உத்தரவின் பேரில் பெரியகடை போலீஸ்காரர் சதீஷ்குமார், ஐ.ஆர்.பி. போலீஸ்காரர் சுரேஷ் ஆகியோர் பணிஇடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் மீது கூட்டு சேருதல், மிரட்டி பணம் பறித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து 2 பேரையும் பெரியகடை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் அதிரடியாக போலீஸ்காரர் சதீஷ் குமார், ஐ.ஆர்.பி. போலீஸ்காரர் சுரேஷ் ஆகிய 2 பேரையும் பணிநீக்கம் செய்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் நேற்று இரவு உத்தரவிட்டார்.
புதுவைக்கு வந்த காதல் ஜோடியை மிரட்டி பணம் பறித்ததுடன் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் போலீஸ்காரர், ஐ.ஆர்.பி. போலீஸ்காரர் ஆகிய இருவர் பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பது போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் இன்று உலக மக்களை அச்சுறுத்தி உள்ளது. தற்போது இந்த வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருவதால் மத்திய அரசு நோய் தடுப்பு நடவடிக்கை எடுத்து உள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் சுகாதாரத்துறை உஷார்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த வைரஸ் பரவாமல் இருக்க தமிழகத்தில் எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதே போல புதுவை மாநிலம் காரைக்காலிலும் 5-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காரைக்காலில் கொரோனா வைரஸ் தொற்றுநோயிலிருந்து சிறு குழந்தைகளை காக்கும் பொருட்டு, மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், எல்.கே.ஜி முதல் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:-
கொரோனா வைரஸ் தொற்றுநோயிலிருந்து, பள்ளி கல்லூரி மாணவர்களை காக்கும் பொருட்டு, அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளிலும் வருகிற 31-ந் தேதி வரை பிரார்த்தனை, அணி வகுப்பு, கூட்டம், ஒன்றும் கூடும் நிகழ்ச்சி, விழாக்கள் போன்ற எதுவும் நடத்த கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
உலக அளவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் கொரோனா தடுப்பு முறைகள் குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதற்காக மாவட்ட நலத்துறை பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக வெளிமாநிலங்களில் இருந்து காரைக்காலுக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் நவீன கருவி (அகசிவப்பு வெப்பமானி) கொண்டு பரிசோதனை செய்யும் படி மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா, நலவழித்துறை துணை இயக்குனர் டாக்டர் மோகன்ராஜ் ஆகியோர் உத்தரவிட்டனர்.
இதனை தொடர்ந்து சுகாதாரத்துறை ஊழியர்கள் நேற்று காரைக்கால் புதிய பஸ்நிலையம், ரெயில் நிலையத்தில் நவீன கருவி(அகசிவப்பு வெப்பமானி) கொண்டு வெளி மாநில பயணிகளிடம் பரிசோதனை செய்தனர்.
பின்னர் அவர்கள் பயணிகளிடம், ‘யாருக்காவது சளி, இருமல், மூச்சுதிணறல் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்ய வேண்டும். கொரோனா வைரஸ் தொற்றுநோய் உள்ள நாடுகளிலிருந்து வருகை தரும் பயணிகள் 28 நாட்கள் வெளியில் யாரையும் தொடர்பு கொள்ளாமல் வீட்டில் இருக்க வேண்டும். சளி, இருமல் இருந்தால் ஒருமுறை பயன்படுத்தும் பேப்பரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கூட்டம் அதிகமாக உள்ள இடங்களுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம்’ என்றனர்.
பாகூர்:
பாகூர் அருகே மேல் பரிக்கல்பட்டு வன்னியர் தெருவை சேர்ந்தவர் சின்னையன் (வயது 55). விவசாய கூலித்தொழிலாளி. இவர், நேற்று மாலை ஆராய்ச்சி குப்பம்- பரிக்கல்பட்டு மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் சின்னையன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில், தூக்கி வீசப்பட்ட சின்னையன் தலையில் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பாகூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சின்னையன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அவரது மகன் ஜெயசங்கர் கொடுத்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகரன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






