search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "school teacher suicide"

    எடப்பாடி அருகே கணவர் தனிக்குடித்தனம் வரமறுத்ததால் பள்ளி ஆசிரியை தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட உருக்கமான தகவல்கள் கிடைத்துள்ளது.

    எடப்பாடி:

    கரூர் மாவட்டம், தாலியாபட்டி, வெள்ளிஆணை பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார்(35). தனியார் மருந்தகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி தீபா(29) இவர்களுக்கு யாழினி (4) என்ற பெண் குழந்தை உள்ளது.

    தீபா சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே சித்தூர் பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.

    அவர் எடப்பாடியை அடுத்த மொரப்பட்டி பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்து வேலைக்கு சென்று வந்தார். வீட்டின் அருகில் உள்ள தனியார் பள்ளியில் யாழினி எல்.கே.ஜி. படித்து வந்தார்.

    இந்நிலையில் தற்போது கோடைவிடுமுறைக்காக சொந்த ஊர் சென்ற தீபா, அங்கு தனது கணவர் ராஜ்குமாரிடம், அடுத்த மாதம் குடும்பத்துடன் மொரப்பட்டி பகுதிக்கு சென்று குடித்தனம் நடத்துவோம் என வற்புறுத்தினார். ஆனால் அதற்கு ராஜ்குமார் சம்மதிக்கவில்லை. பெற்றோருடன் தான் இருப்பேன் என கூறினார். இதனால் தீபா மனவேதனை அடைந்தார். நேற்று அவர் மொரப்பட்டி வீட்டிற்கு சென்று வருவதாக கூறி எடப்பாடிக்கு வந்தார்.

    இந்த நிலையில் ராஜ்குமார் தனது மனைவியை செல்போனில் பலமுறை தொடர்பு கொண்டார். ஆனால் தீபா போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ராஜ்குமார் உடனடியாக தீபா குடியிருக்கும் மொரப்பட்டிக்கு வந்தார். அங்கு தீபா வீட்டில் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    உடனே அருகில் உள்ளவர்கள் உதவியுடன் தீபாவை மீட்ட ராஜ்குமார், அவரை எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு தீபாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த பூலாம்பட்டி போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.

    தீபாவிற்கு திருமணம் முடிந்து 7 ஆண்டுகள் ஆகவில்லை. இதனால் அவர் இறப்பு குறித்து கோட்டாச்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

    இன்று காலை எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு நேரில் வந்த சங்ககிரி கோட்டாச்சியர் அமிர்தலிங்கம் தீபாவின் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    தீபா இறந்தது குறித்து அவரது மகள் யாழினிக்கு தெரியவில்லை. இதனால் அவள் என் அம்மா எங்கே என்று உறவினர்களிடம் கேட்டார். அதற்கு அவர்கள் அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லை ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளதாக கூறினர். அம்மா எப்ப வருவாங்க என அடிக்கடி அப்பாவித்தனமாக கேட்கும் குழந்தையின் பரிதாப நிலை, காண்போரை கண்ணீரில் மிதக்க செய்தது.

    பள்ளி ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    உடையார்பாளையம் அருகே பள்ளி ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    உடையார்பாளையம்:

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே பாளையம்பாடி அரண்மனைகுறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 49). விவசாயி. இவருக்கு 3 மகள்கள், 1 மகன் உள்ளனர். இதில் மூத்த மகள் செந்தமிழ்செல்வி (25) மணகெதியில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாகவும், பள்ளி விடுதியில் காப்பாளராகவும் பணியாற்றி வந்தார். 

    இந்நிலையில் நேற்று காலை செந்தமிழ்செல்வியிடம், அவரது தந்தை செல்போனில் பேசி உள்ளார். அப்போது உனக்கு திருமண ஏற்பாடுகள் செய்து வருவதாக செந்தமிழ்செல்வியிடம் கூறினார். அதற்கு தனக்கு தற்போது திருமணம் வேண்டாம், தம்பி, தங்கைகள் படிப்பு முடிந்த பிறகு பார்த்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த செந்தமிழ்செல்வி பள்ளி விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தகவல் அறிந்த உடையார்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செந்தமிழ்செல்வி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சேகர் உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    இந்நிலையில் செந்தமிழ்செல்வி சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று மாலை அரியலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு அரியலூர்-ஜெயங்கொண்டம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தாசில்தார் முத்துலட்சுமி, துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ், இன்ஸ்பெக்டர் ரவிசக்கரவர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில், உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் பிரேத பரிசோதனைக்கு பிறகு செந்தமிழ்செல்வி சாவில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தின் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அரியலூர்-ஜெயங்கொண்டம் சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
    ×