என் மலர்
புதுச்சேரி
புதுச்சேரி:
புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் கமலா அறக்கட்டளை சார்பில் உலக மகளிர் தினவிழா லாஸ்பேட்டையில் உள்ள தனியார் திருமண நிலையத்தில் நடந்தது. விழாவுக்கு கமலா அறக்கட்டளை நிறுவனரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வைத்தியநாதன் தலைமை தாங்கினார். அறக்கட்டளையின் முதன்மை செயல் அலுவலர் ரமா வைத்தியநாதன் வரவேற்றார்.
விழாவில் சிறப்பு விருந் தினராக சட்டசபை எதிர்க் கட்சி தலைவர் ரங்கசாமி கலந்து கொண்டு மகளிர் குழுக்களுக்கு பரிசுகள் வழங்கினார். இதில் கோகுலகிருஷ்ணன் எம்.பி., என்.எஸ்.ஜெ.ஜெயபால் எம்.எல்.ஏ., என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பாலன், முன்னாள் எம்.எல்.ஏ. நந்தா சரவணன் மற்றும் மணி, செழியன், உமா மகேஸ்வரி ஆகியோர் கலந்துகொண்டனர்.
விழாவில் எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி பேசியதாவது:-
இந்த விழாவில் கலந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. குடும்பத்தை பெண்கள் தான் பொறுப்பாக வழிநடத்தி செல்கிறார்கள். பெண்கள் படித்தால் குடும்பத்தையும், தன்னை சார்ந்தவர்களையும் பார்த்து கொள்வார்கள். நாட்டில் பெண் கல்வி மிக அவசியம்.
புதுவையில் யார் ஆட்சி செய்கிறார்கள்? என்பது தெரியவில்லை.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்-அமைச்சர் ஆட்சி நடக்கிறதா? கவர்னர் ஆட்சி நடக்கிறதா? என்பது தெரியவில்லை. ஆட்சியாளர்களுக்கும், மாநில நிர்வாகியான கவர்னருக்கும் இடையே அதிகாரம் யாருக்கு என்பதில் போட்டி நடக்கிறது. இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கு நடக்கிறது. இதில் மக்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள்.
புதுவையை ஆளும் காங்கிரஸ் அரசு அறிவித்த எந்தவொரு திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. புதிய திட்டத்தை கொண்டுவரவில்லை. மக்கள் கேள்வி எழுப்பினால் பிறர் மீது பழியை போட்டு தப்பித்துக்கொள்கிறார்கள். அடுத்த ஆண்டு (2021) புதுவையில் மீண்டும் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி மலரும். அதேபோல் லாஸ்பேட்டை தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிட்டு வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.
புதுவை லாஸ்பேட்டையை சேர்ந்தவர் பிரீத்தி (வயது 18). தந்தையை இழந்த இவர் தனது தாயார் பரமேஸ்வரி பராமரிப்பில் இருந்து வந்தார்.
பிரீத்தி வில்லியனூர் அருகே பெரம்பையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இன்று காலை பிரீத்தி வழக்கம் போல் கல்லூரிக்கு வந்தார். அப்போது கல்லூரி வளாகத்தில் பிரீத்தி ஒரு நபருடன் பேசிக்கொண்டு இருந்தார்.
இதனை கல்லூரி பேராசிரியர் பார்த்து கண்டித்தார். இதனால் மனமுடைந்த பிரீத்தி அங்கிருந்து கல்லூரியின் முதல் மாடிக்கு சென்றார்.
திடீரென அவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற மாணவிகள் அலறல் சத்தம் போட்டனர்.
பின்னர் தலையில் பலத்த காயம் அடைந்த பிரீத்தியை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மாணவி பிரீத்தி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கல்லூரி வளாகத்தில் மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி:
முதலியார்பேட்டை 100 அடி ரோட்டில் அழகு நிலையம் (பியூட்டி பார்லர்) என்ற பெயரில் பெரிய அளவில் விபசாரம் நடப்பதாக முதலியார் பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு தலைமையில் நேற்று போலீசார் அந்த பியூட்டி பார்லரில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அந்த பியூட்டி பார்லரில் ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருந்த திண்டிவனத்தை சேர்ந்த வாடிக்கையாளர் சரவணன் என்பவரை கைது செய்தனர்.
இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தியதில் பியூட்டி பார்லர் என்ற பெயரில் விபசாரம் நடத்தியது எல்லைபிள்ளை சாவடியை சேர்ந்த ஜெயச்சந்திரன் மற்றும் அவரது மனைவி ஜெயஸ்ரீ என்பது தெரியவந்தது.
பியூட்டி பார்லருக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு மசாஜ், ஸ்பா செய்து அவர்களுக்கு தேவையான பெண்களை வெளியிடங்களுக்கு அனுப்பி வைப்பதும், பியூட்டி பார்லரிலேயே உல்லாசத்துக்கு அனுமதித்ததும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் அங்கு விபசாரத்தில் ஈடுபடுத்துவதற்காக சென்னை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட 5 பெண்களையும் போலீசார் மீட்டனர். அந்த பெண்களை மருத்துவ பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுவையில் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே பதவி ஏற்ற ஒரு வருடத்தில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க 2 முறை முயற்சி நடைபெற்றது.
இந்த நிலையில் புதுவையில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க தற்போது முயற்சி நடந்து வருவதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.
புதுவை மாநில புதிய காங்கிரஸ் தலைவராக ஏ.வி. சுப்பிரமணியன் பதவி ஏற்பு விழாவில் இந்த குற்றச்சாட்டை முதல்- அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார். அவர் கூறியதாவது:-
புதுவை மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஏ.வி. சுப்பிரமணியனுக்கு எனது வாழ்த்துக்கள். அமைச்சர் நமச்சிவாயம் காங்கிரஸ் கட்சி தலைவராக 4¾ ஆண்டுகள் இருந்துள்ளார். அவரது தலைமையில் கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டு வெற்றி பெற்றோம். அதன் பின் நடந்த அனைத்து தேர்தல்களிலும் காங்கிரசுக்கு வெற்றியே கிடைத்துள்ளது.
மத்தியில் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு தொடர்ந்து நமக்கு தொல்லை கொடுத்து வருகிறது.
கவர்னர் கிரண்பேடி அனைத்து கோப்புகளையும் திருப்பி அனுப்புவதை தவிர, வேறு எந்த வேலையையும் செய்வது இல்லை. எதிர்க்கட்சி தலைவர் எதிரிக்கட்சி தலைவராக செயல்படுகிறார். சட்டப்பேரவை நடைபெறும் போது வருவதில்லை. மக்கள் பிரச்சனைகள் குறித்து பேசுவதில்லை.
புதுவையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி முதல்-அமைச்சராக வரவேண்டும் என்பதற்காக பா.ஜ.க.-அ.தி.மு.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை ரங்கசாமி ரகசியமாக சந்தித்து வருகிறார்.
மக்களுக்கு ஆதரவான பிரச்சனைகளில் எதிர்க்கட்சிகள் எங்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். அதனை செய்யாமல் ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்து வருகிறார். இது, ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. அவரது செயல்பாடுகளை மக்கள் புரிந்து வைத்துள்ளனர்.
புதுவையில் காங்கிரஸ் கட்சியை மேலும் வலுவான கட்சியாக மாற்ற வேண்டும். இனிவரும் தேர்தல்களில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியாக உலகம் முழுவதும் பீதி ஏற்பட்டுள்ளது. இருமல், தும்மல் உள்ளவர்கள் முகக் கவசம் (மாஸ்க்) அணியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தற்போது பலர் முகக்கவசம் அணிந்தே செல்கின்றனர். மருத்துவமனைகளில் டாக்டர்கள், செவிலியர்கள் முகக்கவசம் அணிந்து பணியாற்றி வருகின்றனர். மேலும் பலர் முன்னெச்சரிக்கையாக முகக்கவசம் அணிந்துள்ளதை காண முடிகிறது. திடீர் கிராக்கியால் தற்போது முகக்கவசத்தின் விலையேறி உள்ளது. சாதாரணமாக ரூ.5-க்கு விற்கப்படும் முகக்கவசம், தற்போது அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாதவண்ணம் காத்திட என்-95 முகக்கவசம் விற்பனையும் சூடுபிடித்துள்ளது. இது ரூ.250 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்படுகிறது. முகக்கவசத்தை பொதுமக்கள் போட்டிபோட்டு வாங்கி செல்வதால் பல மருந்துகடைகளில் அதற்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உலகம் முழுவதிலும் கொரோனா வைரசினால் 90 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இந்த வைரஸ் மிக வேகமாக பரவக்கூடியது.
இந்தியாவில் இந்த வைரஸ் பரவுவதை தடுக்க அரசு முன்னேற்பாடுகளை செய்துள்ளது. விமான நிலையங்கள், துறைமுகங்கள், சுற்றுலா தலங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் பலத்த சோதனைக்குப் பின்னரே இந்தியாவுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் இந்த வைரஸ் பாதிப்பு இல்லாமல் இருந்தது. தற்போது 30 பேர் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அவர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தென்மாநிலங்களில் இந்த பாதிப்பு பெருமளவில் இல்லை.
குறிப்பாக நமது புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு யாருக்கும் இல்லை. இதுவரை சந்தேகத்தின்பேரில் 9 பேருக்கு சோதனை நடத்தப்பட்டது. ஆனால் அவர்களில் யாருக்கும் இந்த பாதிப்பு இல்லை.
இந்த வைரஸ் தொடர்பாக மத்திய அரசின் ஆலோசனைகளை பெற்று அதன்படி நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். அரசு மார்பக நோய் மருத்துவமனை, ஜிப்மரில் இதற்கு சிகிச்சை அளிக்க தனிவார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன. அனைத்து தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும் தலா 10 படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யுமாறு கூறியுள்ளோம்.
இந்த வைரஸ் தாக்குதல் தொடர்பான ஆய்வுகளை செய்ய சென்னை கிண்டியிலேயே ஆய்வகம் உள்ளது. இதனால் சுமார் 8 மணி நேரத்துக்குள்ளேயே ஒருவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளாரா? இல்லையா? என்பதை அறிந்து கொள்ள முடியும்.
கொரோனா வைரஸ் தாக்குதலை தடுப்பதில் தனிமனித சுகாதாரம் அவசியம். அடிக்கடி கைகளை கழுவிட வேண்டும். முகத்தில் கை வைக்கக்கூடாது. மக்கள் அதிக நடமாட்டம் உள்ள இடங்களுக்கு செல்லக் கூடாது. தும்மல், இருமல் உள்ளவர்கள் கைகளில் துணிகளை வைத்திருந்து அந்த எச்சில் பிறர்மேல் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
புதுவையை பொறுத்தவரை தற்போது முகக்கவசம் அணிய வேண்டிய அவசியமில்லை. அச்சமிருப்பவர்கள் அதை அணிந்துகொள்ளலாம். சளி இருப்பவர்கள் அணிந்துகொள்ளலாம். முகக்கவசம் தேவையான அளவுக்கு நமது மாநிலத்தில் உள்ளது.
தேவைப்பட்டால் மத்திய அரசிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம். கொரோனா வைரஸ் குறித்து புதுவை மக்கள் அச்சப்பட தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுச்சேரி:
பிரபல வில்லன் நடிகர் ஆனந்தராஜ் புதுவையை சேர்ந்தவர் ஆவார். இவருடைய வீடு புதுவை அண்ணா சாலையையொட்டி உள்ள திருமுடி நகரில் உள்ளது.
ஆனந்தராஜுக்கு 5 தம்பிகள், 2 தங்கைகள் உண்டு. இதில், கடைசி தம்பி கனகு என்கிற கனகசபை (வயது 40). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தனி வீட்டில் வசித்து வந்தார். இவர், வட்டிக்கு பணம் கொடுப்பது மற்றும் ஏலச் சீட்டு தொழில் நடத்தி வந்தார்.
நேற்று இரவு வழக்கம் போல் படுக்க சென்றார். இன்று காலை நீண்ட நேரம் வரை அவரது வீட்டு கதவு திறக்கப்படவில்லை. கதவை தட்டிப்பார்த்த போதும் உள்ளே இருந்து எந்த பதிலும் வரவில்லை.
எனவே, சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் ஒதியஞ்சாலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அங்கு படுக்கை அறையில் கனகு இறந்து கிடந்தார். அவர் விஷம் குடித்து தற்கொலை செய்திருப்பது தெரிய வந்தது.
ஏலச்சீட்டு நடத்தியதில் அவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் சமீபகாலமாக மன வேதனையில் இருந்து வந்தார்.
இதனால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது.
இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் அனைத்து மாநிலங்களும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என மருத்துவ வல்லுனர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதனால் இந்த ஆண்டு ‘ஹோலி’ கொண்டாட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் புதுவை கவர்னர் மாளிகையில் நாள்தோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தை கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 2 வார காலத்துக்கு தள்ளி வைத்துள்ளதாக கவர்னர் மாளிகை தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் பொது மக்கள் தங்கள் குறைகளை மனுவாக கவர்னர் மாளிகையின் நுழைவு வாயிலில் உள்ள பெட்டியில் போடலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் கவர்னர் கிரண்பேடி தனது டெல்லி பயணத்தையும் திடீரென ரத்து செய்துள்ளார். இது குறித்து கிரண்பேடி வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-
டெல்லி, அமிர்தசரஸ் ஆகிய இடங்களில் நடைபெறும் மகளிர் தினம் மற்றும் சாலை பாதுகாப்பு விழாவில் நான் கலந்து கொள்வதாக இருந்தது. அதனை ரத்து செய்துள்ளேன்.
இதேபோல் புதுவை கவர்னர் மாளிகையும் மகளிர் தினம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளது.
இவ்வாறு கிரண்பேடி கூறியுள்ளார்.
புதுவை கரிக்கலாம் பாக்கத்தை சேர்ந்த நிருபன் ஞானபானு என்ற இளைஞர் நோணாங்குப்பம் சுண்ணாம்பாற்று படகுத்துறை அருகே ஜல்லிக்கட்டு என்ற ஓட்டலை தொடங்கி உள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்ட இந்த ஓட்டலில் வித்தியாசமான சலுகைகளை அவர் அறிவித்துள்ளார்.
அதில், சாப்பிட வருபவர்கள் 100 திருக்குறளை ஒப்புவித்தால் அவர்களுக்கு பிரியாணி மற்றும் காடை வறுவல், இறால் தொக்கு, நண்டு வறுவல், வஞ்சிரம் மீன் உள்ளிட்ட 20 வகை அசைவ விருந்து வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
மேலும் மாமியார் - மருமகள் ஒன்றாக வந்து சாப்பிட்டால் அவர்களுக்கு 50 சதவீத கட்டணம் இலவசம். அவர்கள் ஒருவருக்கொருவர் ஊட்டி விட்டால் முற்றிலும் இலவசம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நிருபன் ஜானபானு மத்திய அரசின் பயிற்சி பள்ளியில் ஓட்டல் கலை கல்வி பயின்றவர். அதன்பிறகு வெளிநாடுகளுக்கு சென்று ஓட்டல் பணியில் ஈடுபட்டார். நைஜீரியா, இங்கிலாந்து, அமெரிக்கா என பல நாடுகளில் பணிபுரிந்த அவர் சொந்த ஊரில் ஓட்டல் தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தில் புதுவையில் ஓட்டலை தொடங்கி உள்ளார்.
இவரது தந்தை ஞானபானு எழுத்தாளர் ஆவார். அவர் தமிழ் மீது மிகவும் ஆர்வம் கொண்டவர். அதை பின்பற்றி தமிழுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என கருதி திருக்குறள் திட்டத்தை அறிமுகப்படுத்தி இருப்பதாக கூறினார்.
இந்த அறிவிப்புக்கு பிறகு பல சிறுவர்கள் திருக்குறளை மனப்பாடம் செய்வதாக கேள்விப்பட்டேன். இது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது என்று தெரிவித்தார்.
மேலும் குடும்ப ஒற்றுமையை மேம்படுத்தும் வகையில் மாமியார் -மருமகள் திட்டம் அறிவிக்கப்பட்டதாகவும் கூறினார்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது நைஜீரியாவில் இருந்து நிருபன் ஞானபானு சமூக வலைதளம் மூலமாக பல்வேறு கருத்துக்களை வெளியிட்டார். அதற்கு அதிக ‘லைக்’குகள் கிடைத்தது.
அந்த போராட்டத்தின் நினைவாக தனது ஓட்டலுக்கு ‘ஜல்லிக்கட்டு’ என்று பெயர் வைத்திருப்பதாக அவர் கூறினார்.
புதுச்சேரி:
புதுவை கலெக்டர் அருண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பணியிடங்களில் பெண்கள் பாலியல் துன்புறுத்தலை தடுத்தல், தடை செய்தல் மற்றும் தீர்வு காண்பது தொடர்பாக மத்திய அரசு 2013-ம் ஆண்டு ஒரு சட்டம் இயற்றியது.
இந்த சட்டப்படி 10 பெண்களுக்கு மேல் பணிபுரியும் இடங்களில் இச் சட்டத்தின் பிரிவு 4-ன்படி அங்கு பணிபுரியும் ஒரு பெண் உயர் அதிகாரியை தலைவராக கொண்டு குறைந்தபட்சம் 2 பெண் ஊழியர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன உறுப்பினரை கொண்ட ஒரு குழு அமைக்க வேண்டும்.
இந்த கமிட்டி அனைத்து அலுவலகங்கள், பணியிடங்களில் அமைக்க வேண்டும். மேலும் கமிட்டி தலைமையில் யாரை உறுப்பினர்களாக கொண்டு இயங்குகிறது என்பதை தெளிவுபடுத்தி தகவல் பலகையில் வெளியிட வேண்டும்.
இந்த அறிக்கையை கலெக்டர் மற்றும் துறையின் மாவட்ட அதிகாரிக்கு சமர்பிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் இச்சட்டத்தின் பிரிவு 26-ன்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
புதுச்சேரி:
ஏழை மக்களை ஏமாற்றும் காங்கிரஸ் அரசை கண்டித்தும், புதுவை அரசு 23 மாதமாக வழங்க வேண்டிய இலவச அரிசிக்கான பணத்தை உடனடியாக வங்கியில் செலுத்த வலியுறுத்தியும் பா.ஜனதா சார்பில் சட்டசபையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்காக இன்று காலை பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. தலைமையில் மிஷன்வீதியில் பா.ஜனதாவினர் திரண்டனர்.
பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக சட்டமன்றம் நோக்கி வந்தனர். அவர்களை ஆம்பூர் சாலையில் போலீசார் தடுத்து நிறுத்தினர். அங்கு காங்கிரஸ் அரசை கண்டித்தும், 23 மாத நிலுவை அரிசிக்கு பதிலாக பணம் வழங்க வலியுறுத்தியும் பா.ஜனதாவினர் கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சங்கர், செல்வகணபதி, மாநில நிர்வாகிகள் தங்க. விக்ரமன், ரவிச்சந்திரன், செல்வம், ஏம்பலம் செல்வம், துரை.கணேசன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் தாமோதரன், நாகராஜ், சாய்சரவணன், ரத்தினவேலு, அகிலன், மோகன்குமார், ஆறுமுகம், இந்திரன், சோபி, மகேஷ், பாரதிமோகன், இளங்கோ, தட்சிணாமூர்த்தி, புகழேந்தி, கணேஷ், ரமேஷ், மாவட்ட தலைவர்கள் வக்கீல் அசோக்பாபு, நாகேஸ்வரன், ஆனந்தன், தெய்வசிகாமணி, ஜெயந்தி, அனிதா, ஜெயலட்சுமி, லதா, கனகவள்ளி, வள்ளி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






