என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • நித்தியானந்தம் தரப்பினருக்கும் ஜனா தரப்பினருக்கும் இடையே ஜெயிலில் பயங்கர மோதல் ஏற்பட்டது.
    • மோதலில் ஈடுபட்ட கைதிகள் பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி காலாப்பட்டில் மத்திய ஜெயில் உள்ளது. இந்த ஜெயிலில் தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் 500-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்தநிலையில் புதுச்சேரி பா.ஜ.க. பிரமுகர் செந்தில்குமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நித்தியானந்தம் தரப்பினருக்கும், தொழிலதிபர் வேலழகன் கொலைவழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜனா தரப்பினருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் நித்தியானந்தம் தரப்பினருக்கும் ஜனா தரப்பினருக்கும் இடையே ஜெயிலில் பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் இருதரப்பினரை சேர்ந்தவர்களும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர்.

    உடனே பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட சிறைத்துறை வார்டன்கள் கைதிகள் மோதலை தடுத்து நிறுத்தினர். மோதலில் ஈடுபட்ட கைதிகள் பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு ஜெயிலில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் காரணமாக புதுச்சேரி ஜெயிலில் பரபரப்பு ஏற்பட் டது.

    கைதிகள் மோதல் தொடர்பாக சிறைத்துறையினர் காலாப்பட்டு போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன்படி நித்தியானந்தம் தரப்பினர் 9 பேர் மீதும், ஜனா தரப்பினர் 4 பேர் மீதும் என மொத்தம் 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ஜெயில் அடிக்கடி இதுபோன்று கைதிகள் மோதலை தடுக்கும் வகையில் ஒரு தரப்பை சேர்ந்த கைதிகளை வேறு சிறைக்கு இடமாற்றம் செய்ய சிறைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 

    • புதுச்சேரியில் கடந்த கிறிஸ்துமஸ் முதல் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது.
    • கடற்கரை சாலையில் நள்ளிரவு 12.30 மணி வரை புத்தாண்டு கொண்டாட அனுமதிக்கப்படுவர்.

    புதுச்சேரி:

    நாட்டிலேயே புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அதிமானவர்கள் கூடும் இடமாக புதுச்சேரி உள்ளது.

    ஆண்டுதோறும் புத்தாண்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க அரசு பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது.

    அதிகரிக்கும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல நகர பகுதிகளில் ஓட்டல்கள், மதுபார்கள், ரெஸ்டோபார்கள், திறந்தவெளி மைதானங்களில் 31-ந் தேதி நள்ளிரவில் இசை, விருந்து நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

    இதில் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் பங்கேற்கின்றனர். கடற்கரை சாலையிலும் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள். புதுச்சேரியில் கடந்த கிறிஸ்துமஸ் முதல் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது.

    புத்தாண்டு கொண்டாட நேற்று முதல் ஆயிரக்கணக்கான வெளிநாடு, வெளிமாநில சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு வந்துள்ளனர். அருகில் உள்ள அண்டை மாநிலமான தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் புத்தாண்டை கொண்டாட கார், இருசக்கர வாகனங்களில் புதுச்சேரிக்கு இன்று மாலை வருவார்கள்.

    இவர்கள் அனைவரும் புத்தாண்டை கொண்டாடிவிட்டு பாதுகாப்பாக திரும்பி செல்ல அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. புத்தாண்டு பாதுகாப்பு பணிக்காக புதுச்சேரி கடற்கரை மற்றும் நகர பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் 500 தன்னார்வலர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.

    போக்குவரத்தை முறைப்படுத்த 300 போலீசார், ஊர்க்காவல் படையினர், என்.சி.சி., என்.எஸ்.எஸ். மாணவர்கள் என ஆயிரம் பேர் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இன்று காலை முதல் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு பணிக்கு வந்தனர்.

    மதியம் ஒரு மணி முதல் ஒயிட் டவுண் பகுதியில் வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டது. ஆம்பூர் சாலையிலிருந்து கடற்கரை நோக்கி செல்லும் அனைத்து சாலைகளும் பேரிகார்டுகள் மூலம் மூடப்பட்டது.

    அந்த பகுதியில் வசிப்பவர்கள், ஓட்டலில் தங்கியுள்ளவர்கள் காவல்துறை வழங்கிய அடையாள அட்டையை காட்டி சென்றனர். நகர சாலைகளில் வாகனங்களை நிறுத்தவும் போலீசார் தடை விதித்தனர்.

    சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்த பாரதிதாசன் மகளிர் கல்லூரி, உப்பளம் மைதானம் உட்பட 10 இடங்களில் நிறுத்த வசதி செய்யப்பட்டிருந்தது. இங்கிருந்து கடற்கரை சாலைக்கு செல்ல இலவசமாக 30 அரசு பஸ்கள் இயக்கப்பட்டது.

    கடற்கரை சாலையில் நள்ளிரவு 12.30 மணி வரை புத்தாண்டு கொண்டாட அனுமதிக்கப்படுவர். மதுபார்களில் இரவு ஒரு மணி வரை மது விநியோகம் செய்ய கலால்துறை சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது.

    புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் கடுமையாக நடந்து கொள்ளக்கூடாது என போலீசாருக்கு உயரதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அவர்கள் கேட்கும் தகவல்களை முன்கூட்டியே அறிந்து வைத்திருந்து கனிவோடு சுற்றுலா பயணிகளை அணுக வேண்டும் எனவும் போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கடற்கரை சாலையில் சி.சி.டி.வி. கேமரா, கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். டிரோன் கேமரா மூலமும் கண்காணிப்பு செய்யப்பட்டது.

    வழக்கமாக புதுச்சேரி அரசின் சுற்றுலாத்துறை சார்பில் இசை நிகழ்ச்சிகள் ஆங்காங்கே நடைபெறும். இந்தஆண்டு போலீசார் இசை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்கவில்லை.

    மாநிலத்தின் எல்லை பகுதியிலும் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

    • புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணையை தொடங்கினர்.
    • அந்த வங்கி கணக்கில் நாட்டில் பல்வேறு மாநிலங்களில் இருந்து கோடிக்கணக்கில் பணப்பரிமாற்றம் நடந்திருப்பது தெரியவந்தது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி, முருங்கப்பாக்கத்தை சேர்ந்தவர் அழகம்மை. டாக்டர். சென்னையில் தனியார் மருத்துவமனையில் பணிபுரிகிறார்.

    இவரிடம் கடந்த ஜூன் மாதம் மும்பை போலீஸ் அதிகாரி பேசுவதாக கூறி, ஆன்லைன் மோசடி கும்பல் போன் செய்தது. அவர்கள் அழகம்மையின் பெயரை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு போதை பொருட்கள் கடத்தப்பட்டுள்ளதாக கூறி, மிரட்டி, அவரிடம் இருந்து ரூ.27 லட்சத்தை பறித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணையை தொடங்கினர்.

    இதில் டாக்டர் அழகம்மை வங்கி கணக்கில் இருந்து பணப்பரிமாற்றம் செய்யப்பட்ட வங்கி கணக்கு யாருடையது? என ஆய்வு செய்த போது போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

    அந்த வங்கி கணக்கில் நாட்டில் பல்வேறு மாநிலங்களில் இருந்து கோடிக்கணக்கில் பணப்பரிமாற்றம் நடந்திருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் அந்த வங்கியின் கணக்கினை முடக்கினர்.

    இதைத்தொடர்ந்து சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடந்தது.மோசடி கும்பல் சமூக வலைதளங்களை பயன்படுத்தி தங்களை போலீஸ் அதிகாரி, தகவல் தொடர்பு துறை அலுவலக அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பொய்களை கூறி அப்பாவி பொதுமக்களை மிரட்டி கோடிக்கணக்கில் பணம் பறித்தது தெரியவந்தது.

    இந்த வழக்கில் தொடர்புடைய மேற்கு வங்காளத்தை சேர்ந்த சஞ்ஜிப் தீப் (வயது 54) ராகேஷ் கோஷ் (39), அமித்சர்தார், (36) ஆகியோரை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

    முதற்கட்ட விசாரணையில் அவர்கள் பயன்படுத்திய வங்கி கணக்கில் ரூ.66 கோடியே 11 லட்சம் பணப்பரிமாற்றம் நடந்தது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி புதுச்சேரி ஜெயிலில் அடைத்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    சிறப்பாக செயல்பட்ட சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, தியாகராஜன் மற்றும் போலீசாரை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா சைதன்யா பாராட்டினார்.

    • புத்தாண்டையொட்டி ஓட்டல்களில் மதுவிருந்துகள், ஆடல்பாடல் நடனங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • அனைத்து ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிகின்றன.

    புதுச்சேரி:

    புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி சுற்றுலா பயணிகள் கடலில் இறங்காமல் இருக்க தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது.

    புத்தாண்டு பிறக்க இன்னும் 3 நாட்களே இருக்கிறது. இதையொட்டி புத்தாண்டை கொண்டாட புதுச்சேரி தயாராகி வருகிறது. இப்போதே ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

    இதன் காரணமாக அனைத்து ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிகின்றன. எங்கு பார்த்தாலும் வெளிமாநில பதிவெண் கொண்ட கார்கள் சுற்றி வருகின்றன.

    இதற்கிடையே புத்தாண்டையொட்டி ஓட்டல்களில் மதுவிருந்துகள், ஆடல்பாடல் நடனங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கடற்கரை பகுதியில் புத்தாண்டை கொண்டாட லட்சக்கணக்கானவர்கள் திரளுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகின்றனர். ஒயிட்டவுன் பகுதியில் வாகனங்கள் செல்வதை தடுக்க செஞ்சிசாலை, ஆம்பூர் சாலை சந்திப்புகளில் தடுப்புகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

    மேலும் கடற்கரையில் புத்தாண்டை கொண்டாடுபவர்கள் கடலில் இறங்காமல் தடுக்கவும் தடுப்புகள் அமைக்கப்படுகின்றன. இரும்பு, மரக்கம்புகளை வைத்து இந்த தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

    இதற்கிடையே புத்தாண்டு கொண்டாட்டம் பாதுகாப்பு தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு இஷாசிங் தலைமையில் போலீசார் நேற்று இரவு கடற்கரையில் ஆய்வு செய்தனர். 

    • பிரெஞ்சு ஆட்சி காலத்தில் இருந்தே மது வகைகளுக்கு புகழ்பெற்ற பகுதியாக புதுச்சேரி உள்ளது.
    • பார்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் புத்தாண்டை கொண்டாட ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிய தொடங்கி உள்ளனர்.

    பிரெஞ்சு ஆட்சி காலத்தில் இருந்தே மது வகைகளுக்கு புகழ்பெற்ற பகுதியாக புதுச்சேரி உள்ளது. விலை குறைவு, விதவிதமான மது வகைகள், வெளிநாட்டு மதுபானங்கள் போன்றவை தான் மது பிரியர்களை புதுச்சேரி நோக்கி இழுக்கிறது.

    சுமார் 1000-க்கும் அதிகமான மது வகைகளும், 50-க்கும் மேற்பட்ட பீர் வகைகளும் புதுச்சேரியில் விற்பனையாகிறது.

    சாதாரண மது பாரில் இருந்து பல வசதிகளுடன் கூடிய நட்சத்திர பார்களும், ரெஸ்டோ பார்களும் உள்ளது. இந்த நிலையில் 2025 புதிய புத்தாண்டை வரவேற்க மதுபான கடைகள் புதுபொலிவு பெறுகின்றன.

    புதுச்சேரி கலால் துறை புத்தாண்டு நள்ளிரவில் நள்ளிரவு 1 மணி வரை பார்களில் மது விநியோகம் செய்ய அனுமதி வழங்கியுள்ளது. பார்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.

    புத்தாண்டு நள்ளிரவில் மது பார்களில் டி.ஜே. இசை நிகழ்சிகளுக்கும், கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும், சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களை ஈர்க்கும் வகையில் வெளிநாடுகளில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் 40-க்கும் மேற்பட்ட புதிய மதுவகைகள் புதுச்சேரியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ன.

    ஜப்பான் விஸ்கி, மெக்சிக்கோ டக்கீலா, லண்டன் ஜின், பிரான்ஸ் ஒயின்,இத்தாலி பீர், நியூயார்க் ஓட்கா, கோவா பென்னி, காஷ்மீர் பீர் என விதவிதமான மதுவகைகள் வரிசை கட்டி காத்திருக்கிறது.

    • 2025-ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாடங்களுக்கு இன்னும் 4 நாட்களே உள்ளது.
    • 10 இடங்களில் வாகன பார்க் கிங் வசதி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் ஆண்டு தோறும் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலமாக கொண்டாடப்படும். அதன்படி 2025-ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாடங்களுக்கு இன்னும் 4 நாட்களே உள்ளது.

    இதற்காக தற்போது இருந்தே சுற்றுலா பயணிகள் படையெடுக்க தொடங்கியுள்ளனர். சுற்றுலா பயணிகள் வருகையால் தங்கும் விடுதிகள் நிரம்பி வழிகின்றன. நகரில் பிரதான சாலைகளில் வெளிமாநில பதி வெண் கொண்ட வாகனங்கள் அதிகளவில் உலா வருகின்றன.

    இதற்கிடையே புதுச்சேரிக்கு வரும் வெளிமாநில சுற்றுலா பயணிகள் தங்களின் வாகனங்களை எங்கு பார்க்கிங் செய்வது என்பது தெரியாமல் நகரை சுற்றிச்சுற்றி வலம் வந்த படி உள்ளனர். ஒருசிலர் சாலையின் இருபுறமும் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கிறார்கள். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் சுற்றுலா பயணிகள் கார் பார்க்கிங் வசதி குறித்து அறிவதற்காக போக்குவரத்து போலீசார் 'கியூ.ஆர்' கோடு அடங்கிய பல கையை ஆம்பூர்சாலை, செஞ்சிசாலை, எஸ்.வி.படேல் சாலை உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் வைத்துள்ளனர். மேலும் சுற்றுலா பயணிகளுக்கும் 'கியூ.ஆர்' கோடு அடங்கிய வழிகாட்டி அட்டையை வழங்கி வருகின்றனர்.

    அதன்படி அண்ணா சாலையில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்குமார் திரிபாதி, போலீஸ் சூப்பிரண்டுகள் செல்வம், மோகன்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் ஆகியோர் பார்க்கிங் வசதி குறித்து 'கியூ.ஆர்' கோடு அடங்கிய அட்டையை வழங்கினர்.

    புத்தாண்டு பண்டிகையையொட்டி முதள் நாளான 31-ந் தேதியன்று புதுச்சேரியில் இந்திரா காந்தி விளையாட்டு மைதானம், உப்பளம் புதிய துறைமுக வளாகம், பாரதிதாசன் மகளிர் கல்லூரி உள்பட 10 இடங்களில் வாகன பார்க் கிங் வசதி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்தபார்க்கிங் இடங்களை அறியும் வகையில் தனி 'கியூ ஆர்' வழிகாட்டி அட்டையை போக்குவரத்து போலீசார் வழங்கவும் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

    • வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 18 கட்டிடங்கள் முதல் கட்டமாக அடையாளம் காணப்பட்டு புதுச்சேரி அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளன.
    • இந்த கட்டிடங்களை இன்டாக், நகர அமைப்பு குழுமங்கள் இணைந்து கணக்கெடுக்க உள்ளன.

    புதுச்சேரி:

    புதுச்சேரியை யுனெஸ்கோ பாரம்பரிய நகர பட்டியலில் இடம் பெற செய்யும் முயற்சியாக 114 பாரம்பரிய கட்டிடங்கள் அடையாளம் காணப்பட்டு கடந்த 2022-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

    அதில் விடுபட்ட 131 பாரம்பரிய கட்டிடங்கள் 2-ம் கட்ட பட்டியலில் சேர்த்து கடந்த ஆகஸ்டு மாதம் வெளியிடப்பட்டது.

    இந்த பட்டியலில் பழமையான கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள், தனியார் கட்டிடங்களும் இடம் பெற்றன. இந்த 2 பட்டியலிலும் சேர்த்து இதுவரை 245 பாரம்பரிய கட்டிடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதற்கிடையில் புதுச்சேரி புல்வார்டு பகுதியில் பிரெஞ்சு கட்டிடங்களுக்கு மத்தியில் உள்ள தமிழர் பாரம்பரிய கட்டிடங்களும் தற்போது கணக்கெடுக்கப்பட்டுள்ளன.

    இதில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 18 கட்டிடங்கள் முதல் கட்டமாக அடையாளம் காணப்பட்டு புதுச்சேரி அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளன. விரைவில் 3-வது பாரம்பரிய கட்டிடங்கள் பட்டியலும் வெளியாக உள்ளது.

    புல்வார்டு பகுதி மட்டுமின்றி அதனையொட்டிய பகுதிகளுக்கு அப்பாலும் பல்வேறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புதுச்சேரியில் ஏராளமான கட்டிடங்கள் உள்ளன. குறிப்பாக ஏ.எப்.டி., சுதேசி, பாரதி பஞ்சாலைகள் உள்ளன.

    இதுமட்டுமின்றி வில்லியனுார் திருக்காமீசுவரர் கோவில், வில்லியனுார் லூர்து மாதா ஆலயம் உள்பட பல்வேறு வழிபாட்டு தலங்களும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. எனவே இந்த கட்டிடங்களை இன்டாக், நகர அமைப்பு குழுமங்கள் இணைந்து கணக்கெடுக்க உள்ளன. இதன் மூலம் பாரம்பரிய நகரங்களின் பட்டியலில் புதுச்சேரி இடம் பெறவுள்ளது.

    • தற்போது சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருகிறது.
    • செல்போன் கடைகளில் வைத்திருந்த 500 ‘டம்மி’ ஸ்மார்ட் செல்போன்களை சேகரித்தார்.

    அரியாங்குப்பம்:

    புதுச்சேரியை அடுத்த அரியாங்குப்பம் உப்புக்கார வீதியை சேர்ந்தவர் சுந்தரராசு (வயது 52). இவர் மணவெளி தந்தை பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் ஒவ்வொரு வருடமும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கிறிஸ்துமஸ் குடில் அமைத்து வருகிறார்.

    கொரோனா காலத்தில் மருத்துவ பொருட்களை பயன்படுத்தி குடில் அமைத்திருந்தார். மேலும் 1 கன செ.மீ. அளவில் கிறிஸ்துமஸ் குடில் செய்து அசிஸ்ட் உலக சாதனை விருது பெற்றுள்ளார்.

    இந்தநிலையில் தற்போது சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செல்போன்களால் குடில் அமைக்க ஆசிரியர் சுந்தரராசு முடிவு செய்தார். இதற்காக செல்போன் கடைகளில் வைத்திருந்த 500 'டம்மி' ஸ்மார்ட் செல்போன்களை சேகரித்தார். அவற்றை பயன்படுத்தி தனது வீட்டில் கிறிஸ்துமஸ் குடில் அமைத்துள்ளார்.

    இதில் ஏசு கிறிஸ்து பிறப்பை குறிக்கும் வகையில் பொம்மைகளும் வைக்கப்பட்டுள்ளன. சைபர் குற்றத்திற்கு முக்கிய காரணமான பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், எக்ஸ், யூடியூப் மற்றும் இ-மெயில் போன்ற வலைதளங்களின் முகப்பு பக்கங்களை கொண்ட டம்மி செல்போன்களால் குடில் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.

    இதனை பொதுமக்கள் பார்வையிட்டு வியந்து வருகின்றனர்.

    • அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • 104 பிரிவுகளின் மாணவர் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்காக சுமார் 20 ஆயிரம் மாணவ, மாணவிகள் வாக்களித்தனர்.

    பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழக மாணவர் கவுன்சிலில் இந்திய மாணவர் சங்கம்(SFI) மற்றும் பகுஜன் மாணவர் கூட்டமைப்பு (BSF) கூட்டணி வெற்றி பெற்றது.

    பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழக மாணவர் பேரவை தேர்தல் கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி நடைபெற்றது.

    பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், பாண்டிச்சேரி சமுதாயக்கல்லூரி, காரைக்கால், அந்தமான், மாகி பகுதியில் உள்ள கல்லூரிகளில் உள்ள 104 பிரிவுகளின் மாணவர் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்காக மாணவர்கள் வாக்களித்தனர்.

    சுமார் 20 ஆயிரம் மாணவ, மாணவிகள் இந்த தேர்தலில் வாக்களித்தனர்.

    இந்த தேர்தலில் இந்திய மாணவர் சங்கம் (எஸ். எப்.ஐ.) அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி.) மாணவர் காங்கிரஸ் உள்ளிட்ட சங்கங்களை தோற்கடித்து மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

     வாக்களிப்பு முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே இந்திய மாணவர் சங்க பிரதிநிதிகள் முன்னிலை வகித்தனர்.

    இந்நிலையில் 58 இடங்களில் SFI வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். SFI கூட்டணியில் போட்டியிட்ட BSF வேட்பாளர்கள் இரண்டு இடங்களில் வெற்றி பெற்றனர். காயத்ரி எஸ். குமார் கவுன்சிலில் தலைமையேற்றார்.

    வெற்றி பெற்ற கவுன்சில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் இருக்கும் பாரதரத்னா டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் கட்டிடத்தின் அருகில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    • மரபுகளை மீறி செயல்படுவதாக தி.மு.க., காங்கிரஸ், அ.தி.மு.க., கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
    • பலமுறை சபாநாயகரை கண்டித்து எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் வெளிநடப்பு செய்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

    பாஜகவை சேர்ந்த மணவெளி தொகுதி எம்.எல்.ஏ. ஏம்பலம் செல்வம் சபாநாயகராக இருந்து வருகிறார். இவர் சபாநாயகர் பதவிக்கான விதி, மரபுகளை மீறி செயல்படுவதாக தி.மு.க., காங்கிரஸ், அ.தி.மு.க., கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

    இந்த நிலையில் புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதியை சேர்ந்த சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு நேற்று முன்தினம் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர கோரி சட்ட சபைசெயலர் தயாளனிடம் மனு அளித்தார். இந்த தீர்மானம் சட்டசபையில் விவாதிக்கப்படும் என சபாநாயகர் ஏம்பலம் செல்வம் அறிவித்திருந்தார்.

    இதனிடையே பாஜகவை ஆதரிக்கும் திருபுவனை தனி தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ. அங்காளன், சட்டசபை செயலர் தயாளனிடம் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி மனு அளித்தார்.


    அந்த மனுவில், சபாநாயகர் பதவிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உறுப்பினர் செல்வம் செயல்படுகிறார். அவர் பாரபட்சமாக செயல்படுவது அரசியலமைப்பு மீறலாக உள்ளது. அவர் நிழல் முதலமைச்சராகவும் செயல்படுகிறார். இதனால் சபாநாயகர் பதவி மதிப்பிழந்துள்ளது.

    எனவே செல்வத்தை சபாநாயகர் பதவியிலிருந்து நீக்கம் செய்ய சட்டமன்ற விதிகளின்படி பிரேரணை அறிவிப்பை முன்வைக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

    புதுச்சேரி சட்டசபையில் மொத்தம் உள்ள 6 சுயேட்சை எம்.எல்.ஏ.க்களில் 3 பேர் பா.ஜனதாவை ஆதரித்து வருகின்றனர். இதில் மீதமுள்ள சிவசங்கரன், ஸ்ரீனிவாஸ் அசோக் ஆகியோர் என்ன நிலைப்பாடு? எடுக்க உள்ளனர் என தெரியவில்லை.

    அதேநேரத்தில் சபாநாயகருக்கு எதிராக மேலும் சில எம்.எல்.ஏ.க்களையும் திரட்டி நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு வலு சேர்க்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.

    புதுச்சேரி சட்டமன்ற வரலாற்றில் கண்ணன் சபாநாயகராக இருந்தபோது, முதலமைச்சர் வைத்திலிங்கம் தலைமையில் ஆளும்கட்சியான காங்கிரசார் வெளிநடப்பு செய்தனர். பலமுறை சபாநாயகரை கண்டித்து எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் வெளிநடப்பு செய்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது.

    ஆனால் சபாநாயகருக்கு எதிராக முதன் முதலாக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்திருப்பது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • புதுச்சேரியில் உள்ள உணவகங்கள், பேக்கரிகளில் சோதனை நடத்தினர்.
    • 20 உணவுப் பொருட்களின் மாதிரிகளை ஆய்வு செய்வதற்காக எடுத்து சென்றனர்.

    புதுச்சேரி:

    மத்திய உணவு பாதுகாப்புத்துறை அமைச்சகம், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி நாடு முழுதும் உள்ள உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் விற்பனையாகும் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் காலாவதி தேதிகள், தயாரிப்பு இடங்களின் சுகாதார முறைகள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

    இதையொட்டி புதுச்சேரி உணவு பாதுகாப்பு துறை அதிகாரி பாலகிருஷ்ணன் தலைமையில் புதுச்சேரியில் உள்ள உணவகங்கள், பேக்கரிகளில் சோதனை நடத்தினர்.

    இதில் புதுச்சேரி காமராஜர் சாலையில் உள்ள பிரபல அசைவ ஓட்டலில் பிரிட்ஜில் வைக்கப்பட்டிருந்த கெட்டுபோன 3 கிலோ மாட்டிறைச்சியை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அதனை அழித்தனர்.

    இதுபோல் பஸ் நிலையம் அருகில் சுகாதாரமற்ற முறையில் இயங்கி வந்த 5 உணவகங்களுக்கு அறிவுறுத்தல் நோட்டீஸ் வழங்கி, 20 உணவுப் பொருட்களின் மாதிரிகளை ஆய்வு செய்வதற்காக எடுத்து சென்றனர்.

    • பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
    • 1 மணி வரை மதுகடைகள் செயல்பட அனுமதி அளித்துள்ளதன் மூலம் குடிமகன்களுக்கு இந்த புத்தாண்டு மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில புத்தாண்டு வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.

    இதையொட்டி புதுச்சேரியில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள், ரிசார்ட்டுகள், தங்கும் விடுதிகள், ரெஸ்டோ பார்கள் மற்றும் பொது இடங்களில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள். கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

    குறிப்பாக தனியார் ஓட்டல்களில் ஆட்டம்-பாட்டம் என புத்தாண்டு கொண்டாட்டம் களைக்

    கட்டும். இதற்கான முன்பதிவு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.

    புதுச்சேரியில் ஆங்கில புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான இளைஞர்கள், இளம் பெண்கள் வருகை தருவார்கள். சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் அரசு சார்பிலும், தனியார் சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    புதுச்சேரி மாநிலத்தை பொறுத்தவரை மதுபான கடைகள் வழக்கமாக காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ரெஸ்டோ பார்கள் நள்ளிரவு 12 மணி வரை செயல்பட அனுமதி உள்ளது.

    ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மதுபான கடைகளை கூடுதல் நேரம் திறக்க சிறப்பு அனுமதி வழங்கப்படுவது வழக்கம். அதன்படி வருகிற 2025-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டையொட்டி மதுபானகடைகள், பார்களை கூடுதல் நேரம் திறக்க கலால்துறை அனுமதி வழங்கியுள்ளது.

    இதுகுறித்து புதுச்சேரி அரசு கலால்துறை துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் மதுபான கடை

    களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    புதுச்சேரியில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு டிசம்பர் 31-ந் தேதி நள்ளிரவு வரை மதுபான விற்பனைக்கு சிறப்பு அனுமதி (உரிமம்) வழங்கப்படுகிறது.

    அதன்படி மதுபானம் விற்பனை செய்யும் கடைகள் (சில்லரை, மொத்த விற்பனை) இரவு 11 மணி முதல் 11.30 மணி வரை சிறப்பு அனுமதி பெற ரூ.5 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல் மதுபார்களுடன் செயல்படும் மதுபான கடைகளுக்கு இரவு 11 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை செயல்பட ரூ.10 ஆயிரமும், சுற்றுலா பிரிவு' (ரெஸ்டோ, ஓட்டல்களுடன் இணைந்த மது பார்களுக்கு) ரூ.5 ஆயிரமும், ஓட்டல்களில் சிறப்பு அனுமதி பெற்று மதுவிருந்துடன் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்துபவர்களுக்கு ரூ.15 ஆயிரமும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    எனவே கூடுதலாக மதுபான விற்பனை செய்ய விரும்புவோர் உரிய கட்டணம் செலுத்தி சிறப்பு அனுமதி பெற்றுக்கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    குடிமகன்களுக்கு கொண்டாட்டம் கடந்த காலங்களில் புத்தாண்டையொட்டி நள்ளிரவு 12 மணிவரை மட்டுமே மதுகடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. தற்போது 1 மணி வரை மதுகடைகள் செயல்பட கலால்துறை அனுமதி அளித்துள்ளதன் மூலம் குடிமகன்களுக்கு இந்த புத்தாண்டு மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

    ×