என் மலர்
புதுச்சேரி
- சிலையை செய்ய 2 வாரங்கள் ஆனதாக அதனை உருவாக்கிய ’செப்’ தெரிவித்துள்ளார்.
- சாக்லெட் சிலையுடன் நின்று சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள தனியார் பேக்கரியில் ஆண்டுதோறும் புத்தாண்டை வரவேற்று பிரமாண்ட அளவில் முக்கிய பிரமுகர்களின் சிலைகள் சாக்லெட் மூலம் தயாரிக்கப்படும்.
அதேபோல் இந்த ஆண்டும் புத்தாண்டையொட்டி சாக்லெட்டால் பிரமாண்டமான 'கிங்காங்' உருவ சிலையை வடிவமைத்து வைத்துள்ளனர். இந்த சிலை 7 அடி 2 அங்குலம் உயரம் கொண்டதாக உள்ளது.
இதற்காக 800 கிலோ சாக்லெட் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த சிலையை செய்ய 2 வாரங்கள் ஆனதாக அதனை உருவாக்கிய 'செப்' தெரிவித்துள்ளார்.
இந்த சாக்லெட் சிலையுடன் நின்று சுற்றுலா பயணிகள், குழந்தைகள் செல்போன்களில் செல்பி எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
- சொகுசு பேருந்துகளுக்கு குறைந்தபட்சம் ரூ.12-லிருந்து ரூ.16 ஆகவும், அதிகபட்சமாக ரூ.36-லிருந்து ரூ.47 ஆகவும் உயர்வு.
- புதுச்சேரி எல்லைக்குள் கி.மீ.,க்கு 75 பைசா என்பது 98 பைசாவாக உயர்வு. 25 கி.மீ., வரை ரூ.20 லிருந்து ரூ.25 ஆக அதிகரிப்பு.
புதுச்சேரியில் 6 ஆண்டுகளுக்கு பிறகு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. முதலமைச்சர் ரங்கசாமியின் அறிவிப்பிற்கு பிறகு கட்டண உயர்வு அமலுக்கு வர உள்ளது.
அதன்படி, ஏசி வசதியில்லாத நகரப் பேருந்துகளுக்கு குறைந்தபட்சம் ரூ.5-லிருந்து ரூ.7 ஆகவும், அதிகபட்சமாக ரூ.13-லிருந்து ரூ.17 ஆகவும் கட்டணம் உயர்வு.
ஏசி வசதியுடன் கூடிய பேருந்துகளில் குறைந்தபட்சம் ரூ.10-லிருந்து ரூ.13 ஆகவும், அதிகபட்சமாக ரூ.26-லிருந்து ரூ.34 ஆகவும் அதிகரிப்பு. சொகுசு பேருந்துகளுக்கு குறைந்தபட்சம் ரூ.12-லிருந்து ரூ.16 ஆகவும், அதிகபட்சமாக ரூ.36-லிருந்து ரூ.47 ஆகவும் உயர்வு.
புதுச்சேரி எல்லைக்குள் கி.மீ.,க்கு 75 பைசா என்பது 98 பைசாவாக உயர்வு. 25 கி.மீ., வரை ரூ.20 லிருந்து ரூ.25 ஆக அதிகரிப்பு.
புதுச்சேரி எல்லைக்குள் ஏசி விரைவுப் பேருந்துக் கட்டணம் கி.மீ.,க்கு ரூ.1.30-லிருந்து ரூ.1.69 ஆக உயர்வு. புதுச்சேரி நகரத்திற்குள் வோல்வோ பேருந்துகளுக்கான கட்டணம் கி.மீ.,க்கு ரூ.1.70-லிருந்து ரூ.2.21 ஆக உயர்வு. புதுச்சேரியிரிலிருந்து கடலூருக்கான கட்டணம் ரூ.20-லிருந்து ரூ.25 ஆகவும், விழுப்புரத்திற்கு ரூ.25-லிருந்து ரூ.30 ஆகவும் அதிகரிப்பு.
- இருசக்கர வாகனங்களை ஓட்டுபவரும், பின்னால் அமர்ந்திருப்ப வரும் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
- 3 மாதம் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்ய பரிந்துரைக்கப்படும்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு, தலைக்கவசம் அணிவதன் மூலமாக விபத்து இறப்பில்லா புதுச்சேரி நிச்சயம் என்ற இலக்கை அடைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி வருகிற ஜனவரி 1-ந் தேதி முதல் இருசக்கர வாகனங்களை ஓட்டுபவரும், பின்னால் அமர்ந்திருப்ப
வரும் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதன்படி புதுச்சேரி அனைத்து அரசு துறை அதிகாரிகள், ஊழியர்கள் இருசக்கர வாகனங்களில் செல்லும்போது கட்டாயம் ஹெல்மெட் அணிவதை பின்பற்ற வேண்டும். இதனை துறை தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் மோட்டார் வாகன சட்டத்தின்படி ரூ.1,000 அபராதமும். 3 மாதம் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்ய பரிந்துரைக்கப்படும்.
- தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
- அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.
புதுச்சேரி அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
தற்பொழுது கிடைத்துள்ள சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேலும் வலுப்பெற்று, மேற்கு வடமேற்கு திசையில், தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி அதற்கடுத்த இரு தினங்களில் நகரக்கூடும்.
அதன் காரணமாக 17.12.2024 முதல் 19.12.2024 தேதிகளில் தமிழக மற்றும் புதுச்சேரி கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கி.மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் புதுச்சேரி பகுதி மீனவர்கள் ஆழ்கடல் பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் மற்றவர்கள் புதுச்சேரி கடற்பகுதிகளில் மீன்பிடித் தொழிலை பாதுகாப்பாக மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் இந்த அறிவிப்பு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் அவ்வப்பொழுது வெளியிடப்படும் அறிவிப்பிற்கு ஏற்ப மாறுபடும் என்பதால் வானிலை எச்சரிக்கைகளை தொடர்ந்து கவனித்து வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.
- புதுச்சேரி அமைச்சர் திருமுருகன் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தார்.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் கடந்த 3 நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது.
அதேபோல் டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரியின் கடைமடை பகுதியான காரைக்கால் கடலை நோக்கி மழைநீர் வெள்ளம் போல் சீறிப்பாய்ந்து வருகிறது.
இந்த நிலையில் காரைக்கால் திருநள்ளாறு அரசலாறு கரையோர பகுதியில் விரிசல் ஏற்பட்டு குடியிருப்பு பகுதியில் நள்ளிரவில் மழைநீர் சூழ்ந்தது.
இதனை அறிந்த புதுச்சேரி அமைச்சர் திருமுருகன் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தார்.
தொடர்ந்து தாழ்வான பகுதியில் வசிக்கும் பொது மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பும் பணியிலும் ஈடுபட்டார்.
பின்னர் அமைச்சர் திருமுருகன் அந்த பகுதியில் உள்ள சிறிய பாலம் வழியாக நடந்து சென்றார். அமைச்சர் திருமுருகன் கடந்து சென்ற சில விநாடிகளில் திடீரென அந்த இணைப்பு பாலம் இடிந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. அதிர்ஷ்டவசமாக அமைச்சர் திருமுருகன் மயிரிழையில் உயிர் தப்பினர்.
இதனைக் கண்ட அமைச்சரின் ஆதரவாளர்கள் திகைத்து போய் நின்றனர். உடனடியாக அமைச்சர் திருமுருகனை அங்கிருந்து விரைந்து அழைத்து சென்றனர்.
மழை நீர் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த அமைச்சர் திருமுருகன் மயிரிழையில் உயிர் தப்பியது காரைக்காலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- புதுச்சேரியில் கவர்னராக இருந்த கிரண்பேடி கட்டாய ஹெல்மெட் திட்டத்தை அமல்படுத்துமாறு போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
- மிக குறைந்த எண்ணிக்கையிலேயே அரசு ஊழியர்களும், சில வாகன ஓட்டிகளும் ஹெல்மெட் அணிந்து செல்கின்றனர்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் அறிவிக்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதைத்தொடர்ந்து கட்டாய ஹெல்மெட் திட்டம் வாபஸ் பெறப்பட்டது.
அதன்பின்னர் புதுச்சேரியில் கவர்னராக இருந்த கிரண்பேடி கட்டாய ஹெல்மெட் திட்டத்தை அமல்படுத்துமாறு போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து மீண்டும் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டது.
புதுச்சேரியில் ஏற்கனவே போலீசார் மற்றும் அரசுஊழியர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணியவேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆனால் மிக குறைந்த எண்ணிக்கையிலேயே அரசு ஊழியர்களும், சில வாகன ஓட்டிகளும் ஹெல்மெட் அணிந்து செல்கின்றனர்.
இந்த சூழலில் தற்போது இருசக்கர வாகனங்களில் செல்வோர் வருகிற ஜனவரி முதல் கட்டாயம் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்று போக்குவரத்து போலீசார் உத்தரவிட்டுள்ளனர். இதனை அமல்படுத்தவும் போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.
- தொடர் மழையின் காரணமாக பல ஏக்கர் பரப்பளவில் நடப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
- காராமணி உள்ளிட்ட பயிர் வகைகளை தொடர் மழையின் காரணமாக பயிரிட முடியாமல் விவசாயிகள் உள்ளனர்.
புதுச்சேரி:
தொடர்மழையின் காரணமாக வீடூர் அணை திறக்கப்பட்டதால் புதுச்சேரி சங்கராபரணி ஆற்றில் நீர்வரத்து மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இதன் காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் புதுச்சேரி கூனிச்சம்பட்டு-மணலிப்பட்டு இடையேயான படுகை அணை, செட்டிப்பட்டு படுகை அணை, கைக்கிலப் பட்டு படுகை அணை உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றின் இரு கரையினையும் தொட்ட வாறு மழைநீர் ஆர்ப்பரித்து செல்கிறது.
இந்நிலையில் தொடர் மழையின் காரணமாக பல ஏக்கர் பரப்பளவில் நடப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
சென்ற மழையின் போது பாதிக்கப்பட்ட நெல் பயிர்களில் மழை விட்டதால் சிலர் அறுவடை செய்ய தயாராக இருந்தனர். ஆனால் தற்போது மீண்டும் மழை பெய்வதால் நெல் பயிர்கள் முழுவதும் அழுகி வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் வழக்கமாக கார்த்திகை மாதத்தில் நடப்படும் உளுந்து, காராமணி உள்ளிட்ட பயிர் வகைகளை தொடர் மழையின் காரணமாக பயிரிட முடியாமல் விவசாயிகள் உள்ளனர். கார்த்திகை மாதம் முடிய இன்னும் 2 நாட்களே உள்ளதால் பட்டம் தவறி பயிர் இட்டால் விளைச்சல் கிடைக்காது என்பதால் பயிரிட முடியாமலும் சில விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
- சம்பந்தப்பட்ட 73 மாணவர்களையும் போலீசார் வரவழைத்து விசாரணை நடத்தினர்.
- மேலும் பல ஏஜெண்டுகளை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் ஒரு அரசு மருத்துவ கல்லூரி, 3 சுய நிதி மருத்துவ கல்லூரிகளில், எம்.பி.பி.எஸ். சேர்க்கையில் வெளிநாடு வாழ் இந்தியர் (என்.ஆர்.ஐ.) மற்றும் என்.ஆர்.ஐ. ஸ்பான்சர் பிரிவில் 15 சதவீத ஒதுக்கீடு அடிப்படையில் 116 இடங்கள் ஒதுக்கப்படுகிறது.
இந்த இடங்களில் வெளிநாடு வாழ் இந்திய மாணவர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்களின் உறவினர்களின் குழந்தைகள் ஸ்பான்சர் ஒதுக்கீட்டில் சேர்க்கை பெறலாம்.
இந்த என்.ஆர்.ஐ. ஸ்பான்சர் ஒதுக்கீட்டில் குறைந்த நீட் மதிப்பெண் பெற்ற பல மாணவர்கள், ஏஜெண்டுகள் மூலம் போலியான வெளிநாட்டு தூதரகங்களின் கடிதம் அளித்து எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்க்கை பெற்றனர்.
என்.ஆர்.ஐ. ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ். சேர்க்கை பெற்ற மாணவர்களின் சான்றிதழ்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் 73 மாணவர்கள் போலியான தூதரக ஆவணங்கள் சமர்ப்பித்தது தெரிய வந்தது. இந்த மோசடி தொடர்பாக சென்டாக் ஒருங்கிணைப்பாளர் புதுச்சேரி லாஸ்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட 73 மாணவர்களையும் போலீசார் வரவழைத்து விசாரணை நடத்தினர். அப்போது, ஆந்திரா மற்றும் தமிழக பகுதியை சேர்ந்த ஏஜெண்டுகள்கள் தூதரக கடிதங்களை போலியாக தயாரித்து கொடுத்தது தெரியவந்தது.
இதை தொடர்ந்து ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த மெட்டி சுப்பாராவ் (வயது50), தமிழ்நாடு தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பூமிநாதன் என்ற ஜேம்ஸ் (48), செல்வகுமார் (43), கார் லோஸ் சாஜிவ் (45,) வசந்த் என்ற விநாயகம் (42) ஆகிய 5 ஏெஜண்டுகளை கைது செய்து போலீசார் காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
இதில் தொடர்புடைய மேலும் பல ஏஜெண்டுகளை போலீசார் தேடி வருகின்றனர். இதனிடையே இந்த ஏஜெண்டுகள் புதுச்சேரி மட்டுமல்லாது பல மாநில மாணவர்களுக்கும் போலி என்.ஆர்.ஐ. சான்றிதழ் வழங்கியிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
இதனால் இந்த வழக்கு அகில இந்திய அளவிலான மோசடிக்கு அச்சாரமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
- வெள்ள சேதத்தை மதிப்பிட நேற்று முன்தினம் மத்திய குழுவினர் வந்து பார்வையிட்டு சென்றனர்.
- ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 5 நாட்களுக்கு புதுவையில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
புதுச்சேரி:
கடந்த நவம்பர் 30-ந்தேதி புதுச்சேரியை தாக்கிய ஃபெஞ்சல் புயல் கடும் சேதத்தை ஏற்படுத்தியது.
வரலாறு காணாத வகையில் ஒரே நாளில் 50 செ.மீ. மழை கொட்டியது. புதுவை நகர், புறநகர், கிராமபுறங்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது. 500-க்கும் மேற்பட்ட மரங்கள், மின்கம்பங்கள், மின் மாற்றிகள் சாய்ந்தது. துணை மின்நிலையங்களில் வெள்ளம் புகுந்தது.
ஆயிரக்கணக்கான ஹெக்டேர் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியது. அனைத்து கால்வாய்கள், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. 50கி.மீ.க்கும் அதிகமான சாலைகள் சேதமடைந்துள்ளது.
வெள்ள சேதத்தை மதிப்பிட நேற்று முன்தினம் மத்திய குழுவினர் வந்து பார்வையிட்டு சென்றனர். நகர பகுதி ஓரிருநாளில் இயல்பு நிலைக்கு திரும்பியது. ஆனால் கிராமப்புறங்களில் சாத்தனூர், வீடூர் அணை திறப்பால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் மீளவில்லை.
இந்த நிலையில் மீண்டும் வங்க கடலில் ஏற்பட்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 5 நாட்களுக்கு புதுவையில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நேற்றைய தினமே வானம் கருமேகங்களுடன் காணப்பட்டது. ஆனால் மழை பெய்யவில்லை.
இந்த நிலையில் இன்று அதிகாலை மேகங்கள் திரண்டு வானம் இருண்டு காணப்பட்டது. காலை 7.30 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. சுமார் அரைமணி நேரத்துக்கும் மேல் கனமழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்தவண்ணம் உள்ளது.
இதனால் மீண்டும் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது.
கிருஷ்ணா நகர், வெங்கட்டா நகர், ரெயின்போ நகர் பகுதிகளில் ஏற்கனவே பெய்த புயல் மழையில் தேங்கியிருந்த வெள்ளம் வடிந்திருந்த நிலையில் மீண்டும் இன்று பெய்து வரும் மழையால் தண்ணீர் தேங்கி வருகிறது.
இதே போல் தற்காலிக பஸ் நிலையத்திலும் மழை நீர் தேங்கி சேறும் சகதியுமாக காணப்படுகிறது. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.
இதனிடையே புதுவை மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் குலோத்துங்கன் தலைமையில் நடந்தது. சப்-கலெக்டர்கள் சோமசேகர் அப்பாராவ், இசிட்டா ரதி, அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் பொதுப்பணித்துறை மூலம் தேவையான இடங்களில் அதிகளவு மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைக்க வேண்டும். ஜே.சி.பி. எந்திரம், மோட்டார் பம்புகளை தயார்நிலையில் வைக்க வேண்டும். பேரிடர் காலத்தில் அதிகாரிகள் விரைவாக பணியாற்ற வேண்டும்.
தன்னார்வலர்கள் மூலம் பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி உணவு வழங்க வேண்டும். தாழ்வான பகுதிகள் அனைத்தும் அதிகாரிகளின் கண்காணிப்பில் இருக்க வேண்டும். அணைகள் திறக்கப்படும்போது முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டும். தாழ்வான பகுதியில் வசிப்போரை பாதுகாப்பாக தங்க வைக்க வேண்டும்.
தாசில்தார்களுக்கு வயர்லெஸ் வழங்கப்படும். மழைக்காலங்களில் அதிகாரிகள் அதை பயன்படுத்தி ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி கடலோர பகுதியில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் ஆழ்கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனடியாக கரைக்கு வரவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
- புத்தாண்டு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
- புத்தாண்டுக்கு கூடும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு தொடர்பாகவும் போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புத்தாண்டு கொண்டாட்ட நகரமாக புதுவை மாறியுள்ளது.
நாடு முழுவதும் இருந்து புத்தாண்டை கொண்டாட டிசம்பர் மாத இறுதியில் கிறிஸ்துமஸ் முதல் புதுவையில் சுற்றுலா பயணிகள் குவிய தொடங்கி விடுவர். சாதாரண விடுதிகள் முதல் நட்சத்திர விடுதிகள் வரை சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழியும். இதற்கான முன்பதிவு நவம்பர் இறுதியிலேயே தொடங்கிவிடும்.
விடுதிகள், திறந்தவெளி மைதானங்களில் புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். புத்தாண்டுக்கு வரும் சுற்றுலா பயணிகள் மூலம் புதுவையில் பிரம்மாண்டமான வர்த்தகம் நடைபெறும்.
தானே புயல் கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் 30-ந்தேதி வீசியது. அந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டம் சீர்குலைந்தது. தற்போது ஃபெஞ்சல் புயல் புதுவையை தாக்கியுள்ளது. புயல் தாக்கி 10 நாட்களாகியதை தொடர்ந்து புதுச்சேரி மெல்ல, மெல்ல மீண்டு வருகிறது.
புத்தாண்டு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் குலோத்துங்கன் தலைமையில் நடந்த கூட்டத்தில் பொது நிகழ்ச்சிகள், கண்காட்சிகள் நடத்த நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகளில் முன் அனுமதி பெற வேண்டும்.
இதற்காக வருகிற 20-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. புத்தாண்டுக்கு கூடும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு தொடர்பாகவும் போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கையானது ஃபெஞ்சல் புயலில் மீண்டு புத்தாண்டுக்கு தயாராகி வரும் புதுச்சேரி வியாபாரிகள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
- சிறப்பு குழந்தையான நவதீப் பிறந்ததிலிருந்து உடல்நலக்குறைவால் இருந்து வந்த நிலையில் உயிரிழந்தார்.
- புதுவையில் கடந்த 10 ஆண்டுகளில் 4 ஆயிரத்து 895 ஜோடி கண்கள் தானம் செய்யப்பட்டுள்ளன.
புதுச்சேரி:
புதுச்சேரி லாஸ்பேட்டை ஆனந்தா நகரை சேர்ந்தவர் ரமேஷ் இவரது மனைவி மகாலட்சுமி.
லாஸ்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தின் ஆஷா பணியாளராக மகாலட்சுமி பணியாற்றி வருகிறார். இவர்களின் மகன் நவதீப் (வயது 11).
சிறப்பு குழந்தையான நவதீப் பிறந்ததிலிருந்து உடல்நலக்குறைவால் இருந்து வந்த நிலையில் இறந்து போனார்.
குழந்தையின் கண்களை தானம் வழங்க மகாலட்சுமி தம்பதியினர் முன்வந்தனர். இதையடுத்து அரவிந்த் கண் மருத்துவமனைக்கு கண்கள் தானம் செய்யப்பட்டது.
இதனால் கருவிழி பாதிப்பால் பார்வையிழந்த 4 பேருக்கு பார்வை கிடைக்க இந்திய செஞ்சிலுவை சங்கம் ஏற்பாடு செய்தது.
தங்களது குழந்தை இறந்தாலும் அவனது கண்கள் மூலம் 4 பேருக்கு பார்வை கிடைப்பது பெருமை கொள்வதாக பெற்றோர் தெரிவித்தனர்.
புதுவையில் கடந்த 10 ஆண்டுகளில் 4 ஆயிரத்து 895 ஜோடி கண்கள் தானம் செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம் யூனியன் பிரதேசங்களில் கண் தானம் செய்வதில் புதுவை முதலிடம் வகிக்கிறது.
- சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் எம்.டி.ஆர்.ராமச்சந்திரன் சிகிச்சை பெற்று வந்தார்.
- 1980-1983 மற்றும் 1990-1991 வரை திமுக சார்பில் புதுச்சேரி முதலமைச்சராக அவர் பணியாற்றினார்.
புதுச்சேரி முன்னாள் முதல்வர் எம்.டி.ஆர்.ராமச்சந்திரன் (93) வயது மூப்பு காரணமாக காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார்
1980-1983 மற்றும் 1990-1991 வரை திமுக சார்பில் புதுச்சேரி முதலமைச்சராக பணியாற்றினார். மேலும் 2001- 2006 வரை புதுச்சேரி சட்டமன்ற சபாநாயகராகவும் காங்கிரஸ் கட்சி சார்பில் பணியாற்றினார்






