என் மலர்
புதுச்சேரி

ரூ.465 கோடி ஆன்லைன் மோசடி- கேரளாவை சேர்ந்த பிரபல டிராவல்ஸ் நிறுவனத்துக்கு தொடர்பு
- லாரி டிரைவரான முகமது ஷரீப்பும் அவருடன் சேர்ந்தவர்களும் ரூ.465 கோடிக்கும் மேல் மோசடியில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்தது.
- மோசடி கும்பலிடம் இருந்து ரூ.331 கோடி மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் வேலை, ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம். குறைந்த வட்டியில் கடன் என பல்வேறு விதமான ஆசைகளை காட்டி கோடிக்கணக்கில் மோசடிகள் நடந்து வருகின்றன.
இந்த ஆன்லைன் மோசடி கும்பலுக்கு இந்தியா மட்டுமல்லாது பல்வேறு நாடுகளில் உள்ள மோசடி கும்பலுக்கும் தொடர்புகள் உள்ளது.
இதனிடையே கடன் செயலி மூலம் கடன் பெற்றவர்கள் அந்த தொகையை கட்டிய பிறகும், கடன் பெற்றவர்களுடைய படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி ரூ. பல கோடி மோசடிகள் நடந்து வருகிறது.
இதுதொடர்பாக கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த முகமது ஷரீப் (வயது 42) என்பவரை புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி தலைமையிலான போலீசார் கடந்த மாதம் கைது செய்தனர். லாரி டிரைவரான முகமது ஷரீப்பும் அவருடன் சேர்ந்தவர்களும் ரூ.465 கோடிக்கும் மேல் மோசடியில் ஈடுபட்டுள்ளது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.
இதுதொடர்பாக மத்திய அமலாக்கத்துறையும் புதுவை சைபர் கிரைம் போலீசாரிடம் மோசடி நபர்களின் விவரங்களை பெற்று விசாரணையை தொடங்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து மோசடி கும்பலிடம் இருந்து ரூ.331 கோடி மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது.
கைதான முகமது ஷரீப்பிடம் நடத்திய விசாரணையில் இந்த மோசடியில் இன்னும் பலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. கேரளாவை சேர்ந்த மிகப்பெரிய டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றுக்கும் இதில் தொடர்பு இருக்கிறது.
அந்த டிராவல்ஸ் நிறுவனத்தின் வங்கி கணக்குகள், அதன் மூலம் வெளிநாட்டிற்கு சென்றவர்கள் குறித்த விவரங்களை சேகரிக்க சைபர் கிரைம் போலீசார் கேரளா விரைந்துள்ளனர்.






