என் மலர்
புதுச்சேரி
- ஜன.17-ந்தேதி தமிழகத்தை போல் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்குமாறு பலதரப்பிலிருந்து அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
- தொடர்ச்சியாக 6 நாட்கள் அரசு அலுவலகங்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் விடுமுறை கிடைத்துள்ளது.
புதுச்சேரி:
பொங்கல் பண்டிகை வருகிற 14-ந் தேதி முதல் கொண்டாடப்பட உள்ளது.
அடுத்த 15, 18 மற்றும் 19-ந்தேதிகள் அரசு விடுமுறை நாட்களாக வருகிறது. எனவே மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களது சொந்த ஊருக்குச் சென்று பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாடும் வகையில்,
அதற்கு இடைப்பட்ட நாளான ஜன.17-ந்தேதி தமிழகத்தை போல் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்குமாறு பலதரப்பிலிருந்து அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
அதையடுத்து வருகிற 17-ந் தேதி அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவினை சார்பு செயலர் ஷிரன் பிறப்பித்துள்ளார்.
இதேபோல், வருகிற 16-ந் தேதி உழவர் திருநாள் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தை பொது விடுமுறையாக அறிவிக்காமல், வரையறுக்கப்பட்ட விடுமுறை பட்டியலில் சேர்த்து ஏற்கனவே அரசாணை பிறப்பித்து இருந்தது. அதை மாற்றி தற்போது 16-ந் தேதியும் பொது விடுமுறையாக அறிவித்துள்ளது.
இந்த விடுமுறை புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதில், பிப். 1-ந் தேதி மற்றும் 8 ம் தேதி அரசு அலுவலகங்கள் இயங்கும்.
இதன் மூலம் தொடர்ச்சியாக 6 நாட்கள் அரசு அலுவலகங்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் விடுமுறை கிடைத்துள்ளது
- புதுச்சேரியில் ஏற்கனவே பொங்கலை முன்னிட்டு ஜனவரி 14 மற்றும் 15-ந்தேதி விடுமறை.
- தற்போது ஜனவரி 16 மற்றும் 17-ந்தேதி ஆகிய இரண்டு நாட்கள் சேர்த்து விடுமுறை அறிவிப்பு.
பொங்கல் பண்டிகை வருகிற செவ்வாய்க்கிழமை (14-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. அதற்கு அடுத்த நாள் மாட்டுப்பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த இரண்டு நாளும் புதுச்சேரியில் ஏற்கனவே விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 16 மற்றும் 17-ந்தேதி ஆகிய இரண்டு நாட்களும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 6 நாட்கள் தொடர்ந்து விடுமுறையாகும்.
விடுமுறையை சரிசெய்யும் வகையில் பிப்ரவரி 1 மற்றும் பிப்ரவரி 8 ஆகிய இரண்டு சனிக்கிழமைகள் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக காரைக்கால் மீனவர்கள் உட்பட 10 பேரை கைது செய்துள்ளனர்.
- சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை படகுடன் விடுவிக்க முன்னுரிமை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரி:
இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக காரைக்கால் மீனவர்கள் உட்பட 10 பேரை கைது செய்துள்ளனர்.
இவர்களை மீட்கக்கோரி புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
நாகையிலிருந்து மீன்பிடிக்க காரைக்கால் மாவட்டம் கீழ்காசாக்குடி அன்பழகன், 15 வயது சிறுவன், காரைக்கால்மேடு பாண்டியன், வேலாயுதம், மயிலாடுதுறை மாவட்டம் கலைமணி, தங்கதுரை, செல்வகுமார், ரமேஷ், 16 வயது சிறுவன், நாகை ராஜசேகர் ஆகிய 10 மீனவர்கள் சென்றிருந்தனர்.
அவர்கள் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கடந்த 8-ந் தேதி இரவு 11.30 மணிக்கு விசைப்படகுடன் கைது செய்யப்பட்டனர்.
சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை படகுடன் விடுவிக்க முன்னுரிமை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
- இரு சக்கர வாகனங்கள் வைத்திருக்கும் அனைத்து அரசு ஊழியர்களும் தவறாமல் ஹெல்மெட் அணிந்து பணிக்கு வர வேண்டும்.
- ஹெல்மெட் இல்லாமல் பைக் ஓட்டினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் ஹெல்மெட் அணியாததால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இதனால் வருகிற 12-ந் தேதி கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக போக்குவரத்து போலீசார் பல்வேறு இடங்களில் வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். பொதுமக்களுக்கு முன் மாதிரியாக போலீசார் மற்றும் அனைத்து அரசு துறை அரசு ஊழியர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய செய்ய வேண்டும் என போக்குவரத்து சீனியர் சூப்பிரண்டு பிரவீன்குமார் திரிபாதி நிர்வாக சீர்த்திருத்த துறைக்கு பரிந்துரை செய்திருந்தார்.
அதன் அடிப்படையில், நிர்வாக சீர்த்திருத்த துறை அனைத்து அரசு துறைகளுக்கும் அவசர சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதில் புதுச்சேரி போக்குவரத்து காவல்துறை மிஷன் ஜீரோ திட்டத்தின் கீழ் உயிரிழப்பினை தடுக்க வருகிற 12-ந் தேதி முதல் ஹெல்மெட் உபயோகத்தை கட்டாயமாக அமல்படுத்த உள்ளது. இரு சக்கர வாகனங்கள் வைத்திருக்கும் அனைத்து அரசு ஊழியர்களும் தவறாமல் ஹெல்மெட் அணிந்து பணிக்கு வர வேண்டும். இது உங்களது தனிப்பட்ட பாதுகாப்பின் நலனுக்காக அறிவுறுத்தப்படுகிறது.
ஹெல்மெட் இல்லாமல் பைக் ஓட்டினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். மேலும் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் 3 மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் நிறுத்தி வைக்கப்படும்.ஹெல்மெட் அணியாதது குறித்து பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி அமைப்புகள், சொசைட்டிகளின் பணிபுரிபவர்கள் உட்பட அனைத்து அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு வரப்படும்.
அனைத்து நிர்வாக செயலாளர்கள், டி.ஜி.பி., துறைத் தலைவர்கள் இதனை உறுதி செய்து கடுமையான நடவடிக்கை எடுப்பர்.
இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- அனைத்து மாநிலங்களில் இருந்தும் ஆயிரத்து 208 பேர், இருபாலர் பிரிவிலும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர்.
- யோகா நித்ரா பயிற்சி, போட்டிகள், பயிலரங்கங்கள், கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
புதுச்சேரி:
புதுச்சேரி அரசு சுற்றுலாத்துறை சார்பில், 30-வது சர்வதேச யோகா திருவிழா புதுச்சேரி கடற்கரை சாலை பழைய துறைமுக வளாகத்தில் நடந்து வருகிறது.
விழாவையொட்டி நடந்த யோகா போட்டிகளில் புதுச்சேரி, ஆந்திரா, டெல்லி, குஜராத், அரியானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, தெலுங்கானா, உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் உள்பட அனைத்து மாநிலங்களில் இருந்தும் ஆயிரத்து 208 பேர், இருபாலர் பிரிவிலும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர்.
தொடர்ந்து யோகா நித்ரா பயிற்சி, போட்டிகள், பயிலரங்கங்கள், கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இன்று காலை புதுவை கடற்கரை சாலையில் யோகா செயல் விளக்கம் மற்றும் மூச்சு பயிற்சி விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
இதையடுத்து குழந்தைகளுக்கான யோகா, இறுதி போட்டி மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் யோகா திருவிழா மாலை நிறைவு பெறுகிறது.
- போக்குவரத்து போலீசார் விபத்து இல்லா புதுச்சேரியை உருவாக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள்.
- புதுச்சேரி முழுவதும் 148 விபத்து பகுதி என அடையாளப்படுத்தப்பட்டு உள்ளது.
புதுச்சேரி:
சின்னஞ்சிறிய மாநிலமான புதுச்சேரியில் மாநில மக்கள் தொகையை விட வாகனங்கள் எண்ணிக்கை அதிகம்.
குண்டும் குழியுமான குறுகிய சாலைகள், சென்டர் மீடியன் இடைவெளி, தாறுமாறான பார்க்கிங், அதிவேக பயணம் உள்ளிட்ட பல காரணங்களால் ஒவ்வொரு ஆண்டும் விபத்துகளும் அதிகரித்து வருகின்றன.
புதுச்சேரியில் நடக்கும் ஒட்டு மொத்த விபத்து உயிரிழப்புகளில் 70 சதவீதம் பைக் விபத்துகளில் ஏற்பட்டவை. ஹெல்மெட் அணியாமல் அதிவேகமாக சென்றதால் தலையில் அடிப்பட்டு உயிரிழக்கின்றனர். ஹெல்மெட் அணிவது, அதிவேக பயணத்தை குறைத்தால் 50 சதவீத விபத்து உயிரிழப்புகளை தடுக்க முடியும்.
போக்குவரத்து போலீசார் விபத்து இல்லா புதுச்சேரியை உருவாக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். நகர பகுதியில் குறைவான வேகத்தில் செல்வதால் ஹெல்மெட் அவசியமா என கேள்வி எழுப்புகின்றனர்.
புதுச்சேரி முழுவதும் 148 விபத்து பகுதி என அடையாளப்படுத்தப்பட்டு உள்ளது. இதுதவிர, ஒவ்வொரு நாளும் புது புது இடங்கள் விபத்து பகுதியாக அறியப்பட்டு வருகிறது. அந்த இடங்களில் பொதுப்பணித்துறை, நகராட்சி, போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்து விபத்துகளை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் விபத்துக்கள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த 2023-ம் ஆண்டு மட்டும் புதுச்சேரியில் நடந்த சாலை விபத்துக்களில் 232 பேர் உயிரிழந்தனர்.
கடந்த 2024-ம் ஆண்டில் 212 பேர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இதபோல் கடந்த 2023-ம் ஆண்டு 1,299 சாலை விபத்துகளும், கடந்த 2024-ம் ஆண்டு 1,329 சாலை விபத்துகளும் பதிவாகி உள்ளன.
நாடு முழுதும் சராசரியாக ஒரு லட்சம் மக்கள் தொகை அடிப்படையில் சாலை விபத்தில் 11 பேர் உயிரிழப்பு ஏற்படுவதாக தேசிய அளவில் பதிவாகி உள்ளது. ஆனால் புதுச்சேரியில் 1 லட்சம் மக்கள் தொகைக்கு சாலை விபத்தில் உயிரிழப்பு 15 ஆக அதிகரித்துள்ளது.
- அமைச்சர் ரகுபதி இந்த விஷயத்தில் புரிந்து பேசுகிறாரா என தெரியவில்லை.
- மணிப்பூரில் நியாயமான விசாரணை நடக்கிறது.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநில பா.ஜ.க. நிர்வாக அமைப்பு தேர்தல் சம்பந்தமாக புதுச்சேரி மாநில பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் அகில இந்திய மகளிர் அணி தலைவியும் தமிழக பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவிக்கு ஆதரவாக அரசு இருக்கவேண்டும். உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை எடுத்ததன் மூலம் நியாயமான விசாரணை நடக்கவில்லை என நிருபணமாகிறது.
தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இந்த விஷயத்தில் புரிந்து பேசுகிறாரா என தெரியவில்லை. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் எங்கு பெண்களுக்கு எதிரான கொடுமை நிகழ்ந்தாலும் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மணிப்பூரில் நியாயமான விசாரணை நடக்கிறது.
ஆனால் தமிழகத்தில் அதுபோல் இல்லை. எப்.ஐ.ஆர். வெளியே வந்துள்ளது. நாட்டில் எங்கு பெண்களுக்கு பாதிப்பு நிகழ்ந்தாலும் பா.ஜ.க. குரல் கொடுக்கிறது. சட்டரீதியான பாதுகாப்பு தருகிறோம். பா.ஜ.க. ஆட்சிபுரியும் மாநிலத்தில் எவ்வளவு பெரியவராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுகிறார்கள்.
தமிழக அரசு பாதிக்கப்பட்ட மாணவிக்கு எதிரான செயல்பாட்டுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்.
பெண்கள் தொடர்பான வழக்குகளில் அரசும், சமூகமும், மீடியாவும் பொறுப்புணர்வோடு அணுக வேண்டும். சமூக வலைத்தளங்களில் பெண்களை யார் விமர்சித்தாலும் தவறுதான்.
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை வழக்கமான நடவடிக்கைதான். அவர்கள் ஆதாரத்தை வைத்துதான் சோதனையிடுவார்கள்.
இவ்வாறு வானதி சீனிவாசன் கூறினார்.
- தமிழகத்தில் பொங்கல் தொகுப்புக்கான டோக்கன் பயனாளிகளுக்கு இன்று முதல் வழங்கப்படுகிறது.
- புதுச்சேரியிலும் பொங்கல் பொருட்கள் வழங்கப்படுமா? என பொதுமக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்தனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பச்சரிசி, கரும்பு உட்பட பொங்கல் பொருட்கள் வழங்கப்பட உள்ளது.
இதற்கான டோக்கன் பயனாளிகளுக்கு இன்று முதல் வழங்கப்படுகிறது. புதுச்சேரியிலும் பொங்கல் பொருட்கள் வழங்கப்படுமா? என பொதுமக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்தனர்.
ஆனால் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ளதால் பொங்கல் தொகுப்பு வழங்க கால அவகாசம் இல்லை. எனவே கடந்த ஆண்டை போல பொங்கல் தொகுப்புக்கு பதிலாக ரேஷன்கார்டுகளுக்கு ரொக்க பணமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.
அதன்படி, பொங்கல் தொகுப்புக்கு பதிலாக ரொக்கப் பணம் ரேஷன்கார்டுதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்த அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டத.
இந்நிலையில், புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.750 வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
பொங்கல் தொகுப்புக்கு பதிலாக ரூ.750 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ளதால் பொங்கல் தொகுப்பு வழங்க கால அவகாசம் இல்லை.
- கோப்பு கவர்னர் அனுமதி கேட்டு அனுப்பப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பச்சரிசி, கரும்பு உட்பட பொங்கல் பொருட்கள் வழங்கப்பட உள்ளது.
இதற்கான டோக்கன் பயனாளிகளுக்கு இன்று முதல் வழங்கப்படுகிறது. புதுச்சேரியிலும் பொங்கல் பொருட்கள் வழங்கப்படுமா? என பொதுமக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்தனர்.
ஆனால் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ளதால் பொங்கல் தொகுப்பு வழங்க கால அவகாசம் இல்லை. எனவே கடந்த ஆண்டை போல பொங்கல் தொகுப்புக்கு பதிலாக ரேஷன்கார்டுகளுக்கு ரொக்க பணமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
பொங்கல் தொகுப்புக்கு பதிலாக ரூ.500 ரேஷன்கார்டுதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான கோப்பு கவர்னர் அனுமதி கேட்டு அனுப்பப்பட்டுள்ளது.
- நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் புதுச்சேரிக்கு மது பிரியர்கள் வருகின்றனர்.
- புத்தாண்டையொட்டி ஆண்டுதோறும் புதிய மது வகைகளும் அறிமுகப்படுத்தப்படும்.
புதுச்சேரி:
புதுச்சேரி என்றவுடன் நினைவுக்கு வருவதில் மதுவும் ஒன்று.
சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மது வகைகளும், நூற்றுக்கும் மேற்பட்ட பீர் வகைகளும் புதுச்சேரியில் கிடைக்கிறது.
இதை அருந்துவதற்கு நின்றபடி அருந்தும் மது பார்கள் முதல் ஏ.சி. அறைகள் மற்றும் நவீன அலங்காரத்துடன் கூடிய பார்கள் வரை உள்ளது. இதற்காகவே நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் புதுவைக்கு மது பிரியர்கள் வருகின்றனர்.
அதிலும் டிசம்பர் மாத இறுதியில் கிறிஸ்துமஸ் விடுமுறையையொட்டி சுமார் 10 நாட்களுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை புதுவையில் அதிகமாக இருக்கும். புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் படகு குழாம், கடற்கரை சாலை, பூங்காவில் சுற்றித் திரிந்தாலும், இரவில் மது வகைகளை நாடுகின்றனர்.
புத்தாண்டையொட்டி ஆண்டுதோறும் புதிய மது வகைகளும் அறிமுகப்படுத்தப்படும். இந்த ஆண்டு 40 வகையான புதிய மது வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டது. மது பிரியர்களை வரவழைக்கும் வகையில் மது வாங்கினால் சிற்றுண்டி, தள்ளுபடி என பல சலுகைகளும் வழங்கப்பட்டது.
வழக்கமாக விற்பனையாகும் மது வகைகளின் அளவை விட கிறிஸ்துமஸ் விடுமுறை முதல் நாள்தோறும் படிப்படியாக விற்பனை அதிகரித்து வந்தது.
உச்சகட்டமாக புத்தாண்டு நள்ளிரவில் விற்பனை இருமடங்காக இருந்தது. இதற்கேற்ப் பார்கள் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
மதுபார்கள், ரெஸ்டோ பார்கள், மது விற்பனை நிலையங்கள், ரிசார்ட்டுகளில் மது விற்பனை இரு மடங்காகியுள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் விற்பனையை கணக்கிட முடியும். ஆனால் புதுவையில் தனியார் மதுபார்களே அதிகம். இதனால் விற்பனையை துல்லியமாக கணிக்க முடியாது.
அதுபோல் ரிசார்ட்டுகளில் நடந்த புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சிகளில் அளவற்ற மது வழங்கியதை கணக்கிட முடியாது. இருப்பினும் சுமார் ரூ.50 கோடிக்கு அதிகமாக புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது புதுச்சேரியில் மது விற்பனை நடந்துள்ளதாக மது விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 10 நாட்களில் மட்டும் ஒரு மாதத்திற்கான விற்பனை நடந்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
- புதுவையில் மற்ற மாநிலங்களை விட பெட்ரோல், டீசல் விலை குறைவாகவே உள்ளது.
- பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை உயர்த்த கவர்னர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒப்புதல் அளித்தார்.
புதுவையில் மற்ற மாநிலங்களை விட பெட்ரோல், டீசல் விலை குறைவாகவே உள்ளது. இதனிடையே பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை உயர்த்த கவர்னர் கைலாஷ்நாதன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒப்புதல் அளித்தார்.
அதன்படி புதுவையில் பெட்ரோல் மீதான வாட் வரி 14.55 சதவீதத்தில் இருந்து 16.98 சதவீதமாகவும், காரைக்காலில் 16.99 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டது. டீசல் மீதான வாட் வரி புதுவையில் 8.65 சதவீதத்தில் இருந்து 11.22 சதவீதமாகவும், காரைக்காலில் 11.23 சதவீதமாகவும் அதிகரிக்கப்பட்டது.
இந்த வரி உயர்வு காரணமாக பெட்ரோல் டீசல் விலையும் லிட்டருக்கு ரூ.2 வீதம் உயர்ந்துள்ளது. அதன்படி பெட்ரோல் விலை புதுவையில் ரூ.94.26-லிருந்து ரூ.96.26 ஆகவும், காரைக்காலில் ரூ.94.03-லிருந்து ரூ.96.03 ஆகவும் உயர்ந்துள்ளது.
இதேபோல் டீசல் விலை புதுவையில் ரூ.84.48-லிருந்து ரூ.86.48 ஆகவும், காரைக்காலில் ரூ.84.31-லிருந்து ரூ.86.31 ஆகவும் உயர்ந்துள்ளது. மேலும் மாகியில் பெட்ரோல் விலை ரூ.91.92-லிருந்து ரூ.93.92 ஆகவும், டீசல் விலை ரூ.81.90-லிருந்து ரூ.83.90 ஆகவும், ஏனாமில் பெட்ரோல் விலை ரூ.94.92-லிருந்து ரூ.96.92 ஆகவும், டீசல் விலை ரூ.84.75-லிருந்து ரூ.86.75 ஆகவும் உயர்ந்துள்ளது.
இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
- மின்னணு ஒட்டு பதிவு இயந்திரத்தில் ஆண்கள்-3,77,934, பெண்கள்-4, 29,685, 3-ம் பாலினத்தவர்-105 பேர் ஓட்டளித்தனர்.
- 3-ம் பாலின வாக்காளர்களில் 70 சதவீதம் ஓட்டளித்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்திய தேர்தல் ஆணையம் 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. இதில் புதுச்சேரியின் மொத்த வாக்காளர்களில் 53.03 சதவீதம் பெண் வாக்காளர்கள் ஓட்டளித்து இந்திய அளவில் முதல் இடத்தில் உள்ளனர். 2024 பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரியில் 5,42,979 லட்சம் பெண் வாக்காளர்கள் பதிவு செய்திருந்தனர்.
மாகி சட்டசபை தொகுதிகளில் 31 ஓட்டுச்சாவடிகளும் பெண் அதிகாரிகளால் நடத்தப்பட்டது. இவர்களுக்கு ஓட்டு பதிவு இயந்திரங்கள், தேர்தல் நடைமுறைகள் பற்றி விரிவாக பயிற்சிகள் வழங்கப்பட்டன.
2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரியில் 7,90,895 லட்சம் பேர் ஓட்டளித்த சூழ்நிலையில், கடந்த 2024 பாராளுமன்ற தேர்தலில் 8,11,432 லட்சம் பேர் ஓட்டளித்துள்ளனர். 2019 பாராளுமன்ற தேர்தலை ஒப்பிடும்போது 2.5 சதவீதம் ஓட்டு பதிவு அதிகரித்துள்ளது. மின்னணு ஒட்டு பதிவு இயந்திரத்தில் ஆண்கள்-3,77,934, பெண்கள்-4,29,685, 3-ம் பாலினத்தவர்-105 பேர் ஓட்டளித்தனர்.
2019 பாராளுமன்ற தேர்தலில் 643 பேர் தபால் ஓட்டு பதிவு செய்திருந்தனர். இது 2024 பாராளுமன்ற தேர்தலில் 3,708 ஆயிரம் பேர் ஓட்டளித்தனர். நோட்டாவை பொருத்தவரை கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலில் 12,199 பேர் ஓட்டளித்து இருந்த சூழ்நிலையில், 2024 தேர்தலில் 9,763 பேர் ஓட்டளித்து இருந்தனர். 3-ம் பாலின வாக்காளர்களில் 70 சதவீதம் ஓட்டளித்தனர்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






