என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • டி20 தொடரின் 2-வது போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற 25-ந் தேதி நடக்கிறது.
    • எவ்வளவு பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    இந்தியா வருகை தரும் இங்கிலாந்து அணியினர், வருகிற 22-ந் தேதி முதல் பிப்., 12-ந் தேதி வரை, 3 ஒரு நாள் கிரிக்கெட் போட்டி, 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றனர்.

    டி20 தொடரின் 2-வது போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற 25-ந் தேதி நடக்கிறது. இப்போட்டியை நேரில் பார்ப்பதற்கு, புதுச்சேரி தட்டாஞ்சாவடி, சுப்பையா நகரைச் சேர்ந்த சக்தி என்பவர், ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தார்.

    மேலும் தனது நண்பர்கள் 3 பேருக்கு டிக்கெட் பதிவு செய்து அதற்கான தொகை 6,360 ரூபாய் செலுத்தினார். ஆனால் பதிவு செய்யப்பட் டிக்கெட் ஏதும் வரவில்லை.

    இது தொடர்பாக சக்தி புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

    போலீஸ் விசாரணையில், சைபர் கிரைம் மோசடி கும்பல் கிரிக்கெட் போட்டிக்கான போலியாக டிக்கெட் புக்கிங் இணையதள பக்கத்தை உருவாக்கி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது. இதன் மூலம் எவ்வளவு பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வில்லியனுார் சார் பதிவாளர் பாலமுருகன் சி.பி.சி.ஐ.டி., போலீசில் புகார் அளித்தார்.
    • சி.பி.சி.ஐ.டி., போலீசார் சூர்யாவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி ரெட்டியார்பாளையம் சிவகாமி நகரில் வசித்து வந்தவர் பிரியா என்ற பச்சையம்மாள், அ.தி.மு.க. மகளிர் அணி இணை செயலாளராக இருந்து வந்தார்.

    கடந்த 2001-ம் ஆண்டு பிரியா தற்கொலை செய்து கொண்டார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த பிரியா சாவில் மர்மம் இருப்பதாக அவரது தாய் அப்போதைய முதலமைச்சரிடம் புகார் அளித்தார்.

    பிரியா பெயரில் உள்ள பல கோடி மதிப்பிலான நில பத்திரங்கள் மாயமானதாகவும் அவை தற்போது விற்கப்படுவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.

    இறந்த பிரியா கடந்த 1998-ம் ஆண்டு புதுச்சேரி ஒதியம்பட்டு கிராமத்தில் 14 ஆயிரத்து 400 சதுர அடி அளவு நிலத்தை வாங்கி தனது பெயரில் பதிவு செய்து வைத்திருந்தார். இதன் மதிப்பு சுமார் ரூ.50 கோடி.

    இந்த நிலத்தை வில்லியனூர் கணுவாப்பேட்டை முனியன் மற்றும் அவருடன் சிலர் சேர்ந்து பிரியா என்ற பச்சையம்மாள் பெயரில் ஆள்மாறாட்டம் செய்து அந்த இடத்தை அபகரித்து மனைகளாக பிரித்து பல்வேறு நபர்களுக்கு விற்பனை செய்துள்ளனர்.

    இது தொடர்பாக வில்லியனுார் சார் பதிவாளர் பாலமுருகன் சி.பி.சி.ஐ.டி., போலீசில் புகார் அளித்தார்.

    சி.பி.சி.ஐ.டி. போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கணுவாப்பேட்டை, புதுநகர், 3-வது குறுக்கு தெருவைச் சேர்ந்த முனியன், (40); 3வது வன்னியர் வீதியைச் சேர்ந்த காந்தி என்ற நிக்கல்குமார், (48) மற்றும் ஒரு பெண் நிலத்தை அபகரிப்பு செய்து விற்றது தெரியவந்தது. இதையடுத்து முனியன் மற்றும் காந்தி என்ற நிக்கல்குமாரை கைது செய்தனர்.

    இந்த நிலையில் இறந்த பிரியா என்ற பச்சையம்மாளுக்கு பதிலாக ஆள்மாறாட்டம் செய்யப்பட்டவர், கடலுார் மாவட்டம், புதுப்பாளையம் சஞ்சீவி மனைவி சூர்யா(53). என தெரியவந்தது.

    இதையடுத்து சி.பி.சி.ஐ.டி., போலீசார் சூர்யாவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.

    • புதிய தொழில்நுட்பத்தில் அதிக இனிப்பு சுவை கொண்ட 2 அத்தி ரக செடிகளை உருவாக்கினார்.
    • மிளகு இனம் ஓராண்டு 8 மாதத்தில் மகசூல் தர கூடியது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கூடப்பாக்கத்தை சேர்ந்தவர் வெங்கடபதி. ஆராய்ச்சியின் மூலம் கனகாம்பரம் பூவில் பல 100 வகையான செடிகளை உருவாக்கி, சாதனை படைத்தவர். இதற்காக இவருக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. இவரது மகள் ஸ்ரீலட்சுமி (வயது 32) எம்.பி.ஏ., பட்டதாரியான இவர் தந்தையுடன் சேர்ந்து விவசாயத்தில் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.

    இதன் விளைவாக, ஆரஞ்சு, சாக்லெட், நாவல், பன்னீர் சுவை கொண்ட கொய்யா செடிகளை உருவாக்கினார். ஆரஞ்சு கொய்யா செடியை பிரதமர் மோடி பெயரிலும், சாக்லெட் கொய்யா செடியை புதுச்சேரி முன்னாள் கவர்னர் கிரண்பேடி பெயரிலும் அறிமுகப்படுத்தினார்.

    மேலும் புதிய தொழில்நுட்பத்தில் அதிக இனிப்பு சுவை கொண்ட 2 அத்தி ரக செடிகளை உருவாக்கினார்.

    காய்க்காத மிளகு செடிகளை காய்க்க வைப்பதற்காக இயற்கை முறையிலான கரைசல் ஊக்கியை கண்டுபிடித்தார். தற்போது எலுமிச்சை சுவையில் நறுமண மிளகை புதிதாக உருவாக்கி அசத்தியுள்ளார்.

    இது குறித்து இளம் விஞ்ஞானி ஸ்ரீலட்சுமி, கூறியதாவது:-

    விவசாயத்தில் புதிய தொழில் முறைகளை கண்டுபிடிக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. அதன் அடிப்படையில் ஏற்கனவே நான் குறைந்த பருவத்தில் அதிக விளைச்சல் தர கூடிய மிளகு இனத்தை கண்டுபிடித்தேன். பொதுவாக மிளகு இனத்தில் நட்ட 7-வது ஆண்டில் தான் மகசூல் கிடைக்கும். அதுவும் 25 அடியை தொட வேண்டும். ஆனால், நான் கண்டுபிடித்துள்ள மிளகு இனம் ஓராண்டு 8 மாதத்தில் மகசூல் தர கூடியது. 15 அடியே போதுமானது.

    இப்போது அதேபோன்று 15 அடியில் விளைச்சல் தர கூடிய புதிய மிளகு இனத்தை கண்டுபிடித்துள்ளேன். இதனுடைய காய்கள், இலைகளை சுவைத்தால் எலுமிச்சை நறுமணம் வரும். காரமும் சாதாரண மிளகு இனத்தை காட்டிலும் அதிக காரம் இருக்கும். சூரிய கதிர்வீச்சினால் மாற்றம் ஏற்பட்டு, இதனை கண்டுபிடித்துள்ளேன் என்றார்.

    • சட்டசபையில் பாதுகாவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார்.
    • எம்.ஜி.ஆரின் பிறந்த நாள், நினைவு நாளில் தனது வீட்டு வாசலில் வசனம் மற்றும் பாடல் வரிகளை எழுதி வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

    புதுச்சேரி:

    தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின், 108-வது பிறந்த நாளையொட்டி பல்வேறு தரப்பினரும் அவரது சிலைக்கும், உருவ படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

    ஆனால் புதுச்சேரியில் எம்.ஜி.ஆர். ரசிகர் ஒருவர் தனது வீட்டு வாசலில் எம்.ஜி.ஆர். உருவத்தை கோலமாக போட்டு மரியாதை செலுத்தினார்.

    புதுச்சேரி அபிஷேகப் பாக்கத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார், (வயது 65.) இவர் சட்டசபையில் பாதுகாவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். எம்.ஜி.ஆர். பிறந்த நாளான நேற்று, அவர் தனது மனைவி, மகள் மற்றும் மருமகள் ஆகியோருடன் சேர்ந்து, அதிகாலை 3 மணி முதல் 7 மணி வரை, 4 மணி நேரம் செலவிட்டு வீட்டு வாசலில் எம்.ஜி.ஆர்., உருவத்தை கோலமாக போட்டு மரியாதை செலுத்தினார்.

    எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான அவர் எம்.ஜி.ஆரை நினைவு கூறும் வகையில் அவரது பிறந்த நாள், நினைவு நாளில் தனது வீட்டு வாசலில் எம்.ஜி.ஆர். உருவத்தை கோலமாக போட்டும், விவசாயம், கல்வி, ஒழுக்கம் போன்ற நல்ல பண்புகள் தொடர்பான அவர் பேசிய வசனம் மற்றும் பாடல் வரிகளை எழுதி வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

    கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ச்சியாக இதனை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த 2023-ம் ஆண்டு 43 ஆயிரத்து 134 இருசக்கர வாகனங்கள் விற்பனையாகி உள்ளது.
    • கடந்த ஆண்டு 17 சதவீதம் இ-ஸ்கூட்டரின் விற்பனை அதிகரித்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி போக்குவரத்துத்துறையின் கீழ் பாகூர், காரைக்கால், மாகி, உழவர்கரை புதுச்சேரி, வில்லியனூர், ஏனாம் மற்றும் புதுச்சேரி செக்போஸ்ட் ஆகிய 8 இடங்களில் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.

    புதுச்சேரி மாநிலத்தில் புதிய வாகனம் வாங்கும் போது, அதை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் வாகன பதிவு சான்றிதழ் வழங்கப்படும்.

    இந்தநிலையில் கடந்த 2 ஆண்டுகளில் புதுச்சேரி மாநிலத்தில் இருசக்கர வாகனங்களின் தேவையும், விற்பனையும் அதிகரித்துள்ளது.

    கடந்த 2023-ம் ஆண்டு 43 ஆயிரத்து 134 இருசக்கர வாகனங்கள் விற்பனையாகி உள்ளது. அதாவது ஒருநாளைக்கு 18 இருசக்கர வாகனங்கள் புதுச்சேரி மாநிலத்தில் விற்பனையாகி உள்ளது.

    கடந்த 2024-ம் ஆண்டு இருசக்கர வாகனங்களின் விற்பனை 50 ஆயிரத்து 438 ஆக உயர்ந்துள்ளது. அதாவது கடந்த 2023-ம் ஆண்டை விட 14 சதவீதம் இருசக்கர வாகன விற்பனை அதிகரித்துள்ளது.

    சமீப காலமாக நாளுக்கு நாள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து வருகிறது. இதுஒருபுறம் இருக்க, புதுச்சேரி மாநிலத்தில் போக்குவரத்து நெருக்கடி, சுற்றுசூழல் மாசு அதிகரித்து வருகிறது.

    இந்தநிலையில் புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 2023-ம் ஆண்டு 2 ஆயிரத்து 638 ஆக இருந்த இ-ஸ்கூட்டர் விற்பனை, கடந்த ஆண்டு (2024) 3 ஆயிரத்து 195 ஆக உயர்ந்துள்ளது.

    கடந்த ஆண்டு 17 சதவீதம் இ-ஸ்கூட்டரின் விற்பனை அதிகரித்துள்ளது. பெட்ரோல் விலை உயர்வால் பெரும் பாலான இரு சக்கர வாகன ஓட்டிகள் இ-ஸ்கூட்டருக்கு மாறியுள்ளனர்.

    • மதுபோதையில் 2 பைக்குகளில் வந்த 4 வாலிபர்கள், மாணவி மற்றும் அவரது நண்பரை வீடியோ எடுத்து தகராறு செய்தனர்.
    • ஷாம் மற்றும் விமலை காலாப்பட்டு போலீசார் கைது செய்து கோர்ட்டில் நீதிபதி முன் ஆஜர்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள அரசு தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகத்தில், கடந்த 11-ந் தேதி விடுதியில் தங்கி படிக்கும் வடமாநில மாணவி ஒருவர், தனது சக கல்லூரி நண்பருடன் நடந்து சென்றார்.

    அப்போது மதுபோதையில் 2 பைக்குகளில் வந்த 4 வாலிபர்கள், மாணவி மற்றும் அவரது நண்பரை வீடியோ எடுத்து தகராறு செய்தனர். இருவரும் மாறி மாறி வீடியோ எடுத்தபோது மோதல் உருவானது. ஒரு கட்டத்தில் அந்த கும்பல் மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட்டது. இதில் படுகாயம் அடைந்த மாணவி, கதிர்காமம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

    இந்த விவகாரம் தொடர்பாக மாணவி புகார் அளிக்க முன்வரவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக தொழில்நுட்ப பல்கலைக்கழக நிர்வாகம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மாணவி மற்றும் மாணவரிடம் தகராறு செய்து தாக்குதலில் ஈடுபட்டது தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆடிட்டோரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர் மற்றும் அவரது உறவினர்கள் என தெரியவந்தது.

    தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து மாணவி மற்றும் மாணவரை ஆபாசமாக திட்டிய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க பல்கலைக்கழக பதிவாளர் காலாப்பட்டு போலீசில் புகார் அளித்தார்.

    காலாப்பட்டு போலீசார் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்திற்குள் அத்துமீறி நுழைதல், மாணவர்களை ஆபாசமாக திட்டுதல் என்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட்டது, மேட்டுப்பாளையம் தனியார் கம்பெனியில் பணியாற்றும் அரும்பார்த்தபுரம் ஷாம் (வயது19), வில்லியனூர் திருக்காஞ்சி சாலையை சேர்ந்த அரசு கலை கல்லூரி மாணவர் விமல்(19) மற்றும் 2 சிறுவர்கள் என தெரியவந்தது.

    ஷாம் மற்றும் விமலை காலாப்பட்டு போலீசார் கைது செய்து கோர்ட்டில் நீதிபதி முன் ஆஜர்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.

    மேலும் 2 பேரை போலீசார் தேடி வந்தனர். அவர்கள் 17 வயதுக்குட்பட்ட 2 சிறுவர்கள் என தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் பிடித்தனர். விசாரணை நடத்தி அவர்களை அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    • போகி பண்டிகை அன்று வீட்டில் உள்ள பழைய விரிப்பான்கள், துணிகள் போன்ற பொருட்களை எரிப்பது வழக்கம்.
    • நைட்ரஜன் ஆக்ஸைடுகளின் அளவு 15.5 மைக்ரோ கிராம், அமோனியாவின் அளவு 50 மைக்ரோ கிராம் என பதிவாகியுள்ளது.

    புதுச்சேரி:

    தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாள் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் வீடுகளில் பழைய பொருட்களை பொதுமக்கள் தீயிட்டு எரித்து, அகற்றுவது வழக்கம்.

    ஆனால் கடந்த சில வருடங்களாக, போகியன்று டயர், ரப்பர், பிளாஸ்டிக் போன்ற பொருட்களை எரிப்பதால் நச்சு புகைமூட்டம் ஏற்பட்டு மக்களுக்கு சுவாச நோய், இருமல், நுரையீரல், கண், மூக்கு எரிச்சல் உட்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. நச்சுக்காற்றாலும், கரிப்புகையாலும் காற்று மாசுபட்டு சுற்றுச்சூழல் சீர்கேடு அடைகிறது.

    எனவே, போகி அன்று டயர், ரப்பர், பிளாஸ்டிக், தெர்மோகோல், செயற்கை இழைத்துணி போன்ற பொருட்களை எரிக்க வேண்டாம் என்று மாசு கட்டுப்பாட்டு குழுமம் வேண்டுகோள் விடுத்திருந்தது. இந்தச் சூழலில், புதுச்சேரியில் 2024-ம் ஆண்டை காட்டிலும் நடப்பாண்டு போகி பண்டிகையன்று காற்றின் மாசு அளவு குறைந்துள்ளது.

    இதுகுறித்து புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழுமத்தின் உறுப்பினர் செயலர் ரமேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    போகி பண்டிகை அன்று வீட்டில் உள்ள பழைய விரிப்பான்கள், துணிகள் போன்ற பொருட்களை எரிப்பது வழக்கம். காலப்போக்கில் இத்தகைய பொருட்களுடன் வீட்டில் உள்ள உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், டயர் போன்ற பொருட்களை எரிக்க தொடங்கினர்.

    இதனால் காற்றில் மாசுக்களின் அளவு அதிகரித்தது புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு குழுமம், இத்தகைய பொருட்களை எரிப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றிய விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கியது. இந்தச் சூழலில் புதுச்சேரியில் மேட்டுப்பாளையம், அண்ணா நகர் மற்றும் காரைக்காலில் ஒரு இடத்திலும் போகி அன்று காற்றின் மாசு 24 மணி நேரம் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டது.

    இதில் மிதவை துகள்களின் அளவு 54 மைக்ரோ கிராம், கந்தக ஆக்ஸைடுகளின் அளவு 10.4 மைக்ரோ கிராம். நைட்ரஜன் ஆக்ஸைடுகளின் அளவு 15.5 மைக்ரோ கிராம், அமோனியாவின் அளவு 50 மைக்ரோ கிராம் என பதிவாகியுள்ளது.

    2024-ம் ஆண்டில் மிதவை துகள்களின் அளவு 138 மைக்ரோ கிராம். நைட்ரஜன் ஆக்ஸைடுகளின் அளவு 23.6 மைக்ரோ கிராம் என பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    போகி அன்று ஏற்பட்ட சிறு மழை தூறலும், மக்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வும் இந்த ஆண்டில் காற்றின் மாசு அளவு குறைய காரணமாக இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மற்ற 2 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • விபத்து குறித்து திருபுவனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மதகடிப்பட்டு அருகே தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம் லிங்காரெட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் கதிரவன் (வயது52). இவர் மதகடிப்பட்டில் செல்போன் கடை நடத்தி வந்தார்.

    நேற்று இரவு இவர் மதகடிபட்டில் இருந்து வீட்டுக்கு செல்ல அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் முகிலன்(37) என்பவருடன் காரில் வந்தார். காரை முகிலன் ஓட்டி வந்தார்.

    இதுபோல் சென்னையை சேர்ந்தவர் பிரபாகரன்(57). இவர் விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு ஏஞ்சல் (50) என்ற மனைவி உள்ளார். இவர்களது உறவினர் விபத்தில் காயமடைந்து புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    அவரை பார்ப்பதற்காக பிரபாகரன் தனது மனைவி ஏஞ்சல் மற்றும் உறவினர் மகள் சிந்து (12) ஆகியோருடன் ரெயிலில் விழுப்புரத்திற்கு வந்தார். அங்கிருந்து காரில் ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு வந்து கொண்டிருந்தனர். காரை பானாம்பட்டு பகுதியை சேர்ந்த டிரைவர் சந்திரன் (38) என்பவர் ஓட்டி வந்தார்.

    நள்ளிரவு 11.30 மணியளவில் மதகடிபட்டு மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்த போது இவர்களது காரும், முகிலன் ஓட்டி வந்த காரும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டது.

    இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே கதிரவன் மற்றும் அவரது நண்பர் முகிலன் மற்றொரு கார் டிரைவர் சந்திரன் ஆகியோர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

    பிரபாகரன், அவரது மனைவி ஏஞ்சல் மற்றும் சிறுமி சிந்து ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக முண்டியப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் வழியிலேயே பிரபாகரன் பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த விபத்து குறித்து திருபுவனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜிப்மர் ஆஸ்பத்திரியில் கடும் காய்ச்சல், இருமல், சளி போன்ற அறிகுறிகளுடன் 5 வயது சிறுமி அனுமதிக்கப்பட்டிருந்தார்.
    • ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில்சிறுமிக்கு எச்.எம்.பி.வி. வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

    புதுச்சேரி:

    சீனாவில் பரவும் எச்.எம்.பி.வி. வைரஸ் தொற்று இந்தியாவிலும் பரவி வருகிறது.

    புதுச்சேரியில் சில நாட்களுக்கு முன்பு தனியார் ஆஸ்பத்திரியில் 5 வயது சிறுமி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் உடல் நலம் தேறி நலமுடன் வீட்டுக்கு திரும்பினார்.

    இந்த நிலையில் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் கடும் காய்ச்சல், சளி, இருமலுடன் சிகிச்சைக்காக சேர்ந்த 5 வயது சிறுமிக்கும் எச்.எம்.பி.வி. வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் கடும் காய்ச்சல், இருமல், சளி போன்ற அறிகுறிகளுடன் 5 வயது சிறுமி அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில் அந்த சிறுமிக்கு எச்.எம்.பி.வி. வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையை தொடர்ந்து அந்த சிறுமி நலமாக உள்ளார். மேலும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

    • வைத்திலிங்கம் எம்.பி. வெற்றி வாய்ப்புள்ளவர்களை தேர்வு செய்வது, நகரம் மற்றும் கிராமங்களில் கட்சியை வளர்ப்பது என தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
    • நாராயணசாமி ராஜ்பவன், காமராஜர் நகர், நெல்லித்தோப்பு தொகுதிகளை குறிவைத்து தேர்தல் முன்கள பணிகளில் தனது ஆதரவாளர்களை முடுக்கி விட்டுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் கடந்த 2016-ம் ஆண்டு காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியில் முதலமைச்சராக நாராயணசாமி பதவியேற்று 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை ஆட்சியில் இருந்தார்.

    சட்டசபை தேர்தலுக்கு 2 மாதங்களுக்கு முன்பாகவே இவரது ஆட்சி கவிழ்ந்ததால் 5 ஆண்டுகள் முற்று பெறாமல் ஆட்சி காலம் முடிவடைந்தது.

    அடுத்து நடந்த 2021 சட்டசபை தேர்தலில், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி போட்டியிடாமல் தேர்தல் பணியாற்றினார். இந்த தேர்தலில், மாகி மற்றும் லாஸ்பேட்டை ஆகிய 2 தொகுதிகளில் மட்டும் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

    கூட்டணியில் போட்டியிட்ட தி.மு.க. 6 இடங்களில் வெற்றி பெற்று மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எதிர்க்கட்சித் தலைவரானார்.

    இந்த காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்து போட்டியிட்ட என்.ஆர். காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணி 16 இடங்களில் வெற்றி பெற்று முதலமைச்சராக ரங்கசாமி பதவியில் இருந்து வருகிறார்.

    காங்கிரஸ் தோல்வி குறித்து பல்வேறு விமர்சனங்கள் நாராயணசாமி மீது சுமத்தப்பட்டதால் நாராயணசாமி இதற்கு பதில் கூறாமல் அமைதி காத்து வந்தார்.

    இதற்கு பதிலடி தரும் வகையில் எதிர்வரும் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி கட்டிலில் அமர்த்த நாராயணசாமி தீவிர தேர்தல் பணியை தற்போதே தொடங்கி உள்ளார்.

    மேலும் காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. வெற்றி வாய்ப்புள்ளவர்களை தேர்வு செய்வது, நகரம் மற்றும் கிராமங்களில் கட்சியை வளர்ப்பது என தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

    காரைக்காலில் முன்னாள் அமைச்சர்கள் ஏ.வி. சுப்பிரமணியன், கமலக்கண்ணன் ஆகியோர் தேர்தல் முன்கள பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேபோன்று நாராயணசாமி தனக்கு ஆதரவாக கருதும் ராஜ்பவன், காமராஜர் நகர், நெல்லித்தோப்பு தொகுதிகளை குறிவைத்து தேர்தல் முன்கள பணிகளில் தனது ஆதரவாளர்களை முடுக்கி விட்டுள்ளார்.

    மேலும் இளைஞர்களை குறி வைத்து நாராயணசாமியின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பேஜ்களில் நாராயணசாமி தகவல்கள் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

    மேலும் வருகிற சட்டசபை தேர்தலில் நாராயணசாமி போட்டியிட்டு வென்று காட்ட மீண்டும் தேர்தல் பணிகளில் ஆர்வம் காட்டுவதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

    • தமிழ்நாட்டில் இரண்டு சிறுவர்களுக்கு எச்எம்பிவி வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
    • தொற்றும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

    சீனாவில் இருந்து குழந்தைகளை தாக்கக்கூடிய மெட்டாப்நியூமோவைரஸ் (எச்எம்பிவி) தொற்று உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவில் பாதிப்பு 13 ஆக உயர்ந்தது.

    தமிழ்நாட்டில் இரண்டு சிறுவர்களுக்கு எச்எம்பிவி வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

    புதிதாக பரவி வரும் எச்.எம்.பி.வி. வைரஸ் தொற்றும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

    இருப்பினும், தொற்று குறித்து பயப்படத் தேவை இல்லை எனவும், ஆனால் பாதுகாப்பு வழிமுறைகள் அவசியம் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், புதுச்சேரியில் 5 வயது சிறுமிக்கு HMPV தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    5 வயது சிறுமி காய்ச்சல் காரணமாக ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் HMPV கண்டறியப்பட்டது.

    சிறுமி தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

    • அரசின் வருமானத்தை உயர்த்தி, செலவினை சமாளிக்கவும் முடிவு செய்யப்பட்டது.
    • அடுத்த நிதி ஆண்டிற்கான பட்ஜெட் முன் தயாரிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி சட்டசபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் கூடியது.

    கூட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனீ. ஜெயக்குமார், திருமுருகன், சாய் ஜெ சரவணன்குமார், தலைமைச் செயலர் சரத் சவுகான், அரசு செயலர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் புதுச்சேரியில் நலத்திட்டங்களுக்கு அதிகரித்து வரும் நிதி சுமை, அதனை சமாளிப்பதற்கான வழிமுறைகள் குறித்து நீண்ட நேரமாக விவாதிக்கப்பட்டது.

    அதை தொடர்ந்து அரசின் வருமானத்தை உயர்த்தி, செலவினை சமாளிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

    குறிப்பாக புதிதாக மதுபானக்கடைகள் உரிமம் தருவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. மதுபான உரிம கட்டணத்தையும், கலால் வரியையும் உயர்த்துவது குறித்தும் முடிவு செய்யப்பட்டது.

    மேலும் 10 ஆண்டுகளுக்கு மேலாக உய்ர்த்தப்படாத நில வழிகாட்டி மதிப்பையும் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. அதேபோல் கூட்டுறவு சர்க்கரை ஆலை பள்ளியை கல்வித்துறையுடன் இணைத்தல் உள்ளிட்ட விஷயங்களும் விவாதித்து முடிவு எடுக்கப்பட்டது.

    அடுத்த நிதி ஆண்டிற்கான பட்ஜெட் முன் தயாரிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ரூ.13 ஆயிரம் கோடிக்கு மேல் புதுச்சேரி அரசு பட்ஜெட் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது. இருப்பினும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த கூடுதல் நிதி தேவைப்படுகிறது.

    எனவே சொந்த வருவாயை அதிகரிக்க முடிவு செய்து, அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 3-வது வாரத்தில் மாநில திட்ட குழு கூட்டம் கூட உள்ள சூழ்நிலையில் மாநில வருவாயை பொறுத்து, பட்ஜெட்டிற்கு இறுதி வடிவம் கொடுத்து, மத்திய அரசின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது.

    ×