என் மலர்
புதுச்சேரி
- வெளிநாடு, வெளி மாநில பக்தர்கள் உட்பட திரளான பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து விநாயகரை தரிசனம் செய்தனர்.
- புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 500 இடங்களில் இன்று மாலை விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
புதுச்சேரி:
நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
புதுச்சேரியில் மிகவும் பிரசித்திபெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. மூலவர், உற்சவருக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம், பன்னீர் உட்பட 21 திரவிய பொருட்கள் மூலம் அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து கலசாபிஷேகம் செய்யப்பட்டு மூலவருக்கு தங்க கவசம், வைர கிரீடம் அணிவிக்கப்பட்டது. உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.
வெளிநாடு, வெளி மாநில பக்தர்கள் உட்பட திரளான பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து விநாயகரை தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் தங்கு தடையின்றி சாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் அனைவருக்கும் இடைவிடாது லட்டு, சர்க்கரை பொங்கல் உட்பட 9 வகை பிரசாதம் வழங்கப்பட்டது.
சதுர்த்தி விழாவையொட்டி கோவிலில் ஏராளமான போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதேபோல புதுச்சேரியில் உள்ள அனைத்து கோவில்களிலும் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது.
இந்து முன்னணி மற்றும் விநாயகர் சதூர்த்தி பேரவை சார்பில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 500 இடங்களில் இன்று மாலை விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
தொடர்ந்து தினமும் பூஜைகள் நடத்தப்படுகிறது. வருகிற 31-ந்தேதி (ஞாயிற்றுகிழமை) அனைத்து விநாயகர் சிலைகளும் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு புதுச்சேரி கடலில் விஜர்சனம் செய்யப்படுகிறது.
- பா.ஜ.க. பெண் நிர்வாகியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
- தகவலறிந்த ரெட்டியார்பாளையம் போலீசார் மற்றும் கட்சி நிர்வாகிகள் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
புதுச்சேரி:
புதுச்சேரி கரிக்கலாம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 4 திருநங்கைகள் மருத்துவப் பரிசோதனைக்காக நேற்று காலை சென்றனர்.
அப்போது அங்கிருந்த பா.ஜ.க. பெண் நிர்வாகி ஒருவர் உங்களுக்கு என்ன இங்கு வேலை? நீங்கள் ஏன் இங்கு வந்தீர்கள்? என கேட்டு திட்டியதாக கூறப்படுகிறது.
அதற்கு திருநங்கைகள் அரசு அனுமதியுடன் தான் பரிசோதனைக்காக வந்து இருக்கிறோம் என பதில் அளித்துள்ளனர். அப்போது அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பரிசோதனைக்குப்பிறகு வெளியே வந்த திருநங்கைகளிடம் 4 பேர் தகராறு செய்து ஸ்கூட்டர் சாவியை பறித்து தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட திருநங்கைகள் இதுபற்றி கரிக்கலாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றுள்ளனர். ஆனால் அங்கு புகாரை பெற மறுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று மாலை புதுச்சேரி இந்திரா காந்தி சிலை அருகேவுள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தை திருநங்கைகள் தலைவி ஷீத்தல் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் முற்றுகையிட்டு சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
தரக்குறைவாக திட்டி தாக்க முயன்ற பா.ஜ.க. பெண் நிர்வாகியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
தகவலறிந்த ரெட்டியார்பாளையம் போலீசார் மற்றும் கட்சி நிர்வாகிகள் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதனை ஏற்க மறுத்து போராட்டத்தை தொடர்ந்தனர்.
இரவு 10 மணியை கடந்தும் போராட்டம் நீடித்தது. அதன்பின்னர் கட்சியின் மாநில தலைவர் வி.பி.ராமலிங்கம் அங்கு வந்து சமரச பேச்சு நடத்தினார். இதனை ஏற்று போராட்டத்தை கைவிட்டு திருநங்கைகள் கலைந்து சென்றனர்.
திருநங்கைகள் பா.ஜ.க. அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது .
- கட்டிடத்தை அகற்ற அதிகாரிகள் காலம் தாழ்த்தியதாக கூறப்படுகிறது.
- சென்னை ஐகோர்ட்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பிரபாதேவி தாக்கல் செய்தார்.
புதுச்சேரி:
புதுச்சேரி முத்துப்பிள்ளைபாளையம், மாரியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் வீரராகு மனைவி பிரபாதேவி. இவருக்கு சொந்தமான இடம் புதுச்சேரி என்ஜினீயரிங் கல்லூரிக்கு எதிரே உள்ளது. இவ்விடத்தை அதே பகுதியைச் சேர்ந்த தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து சட்ட விரோதமாக கட்டிடம் கட்டியதாக கூறப்படுகிறது
இதை அகற்றுமாறு மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பிரபாவதி தேவி தரப்பில் பலமுறை கோரிக்கை மனு அளித்தும், நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் பிரபாவதி தரப்பில் முறையிடப்பட்டது.
மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு 12 வாரங்களுக்குள் மேற்கண்ட கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த கடந்த 26.09.2023 அன்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. ஆனால் கட்டிடத்தை அகற்ற அதிகாரிகள் காலம் தாழ்த்தியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து புதுச்சேரி மாவட்ட கலெக்டர், நகரமைப்பு குழும இயக்குனர் மற்றும் நில அளவை பதிவேடு துறை தாசில்தார் ஆகியோருக்கு எதிராக, சென்னை ஐகோர்ட்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பிரபாதேவி தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு கடந்த 13-ந் தேதி, விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு சட்டவிரோத கட்டிடங்களை அகற்ற நடவடிக்கை எடுக்காத கலெக்டர் உள்பட 3 பேருக்கும், நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு செப்டம்பர் 10-ந் தேதிக்கு வழக்கை தள்ளிவைத்தது.
- ராமதாசிடம் அனுமதி பெறாமல் அன்புமணி நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
- ராமதாசின் தைலாபுரம் வீட்டில் ஒட்டுகேட்பு கருவி வைக்கப்பட்டதற்கு கண்டனம்.
புதுச்சேரி அருகே தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பட்டானூரில் உள்ள சங்கமித்ரா தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று தொடங்கியது.
பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸ் 2025 மே மாதம் 30-ந்தேதி முதல் கட்சியின் தலைவராக செயல்படுவார் என்றும் தேர்தல் படிவங்களில் கையெழுத்திடும் அதிகாரமும் ராமதாசிற்கு மட்டுமே அதிகாரம். 2026 தேர்தல் கூட்டணி குறித்து பேச ராமதாசுக்கு மட்டுமே அனுமதி உள்ளிட்ட 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து, ராமதாஸ் மனதை புண்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை குழு குற்றச்சாட்டியுள்ளது. மேலும் ஒழுங்கு நடவடிக்கை குழு தாக்கல் செய்துள்ள அறிக்கையில்,
* பாமக, நிறுவனர் குறித்து நாள்தோறும் சமூக வலைத்தளங்களில் அவதூறுகள் பரப்பப்படுவதால் மனஉளைச்சல்.
* மக்கள் தொலைக்காட்சியை திட்டமிட்டு அன்புமணி அபகரித்து கொண்டார்.
* ராமதாசிடம் அனுமதி பெறாமல் அன்புமணி நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
* ராமதாசின் தைலாபுரம் வீட்டில் ஒட்டுகேட்பு கருவி வைக்கப்பட்டதற்கு கண்டனம்.
* அன்புமணியின் செயல்பாடு கட்சி கட்டுப்பாட்டை மீறியதாகவே கருதப்படுகிறது.
* சமரச பேச்சுவார்த்தையை அன்புமணி ஏற்காமல் உதாசீனப்படுத்தி உள்ளார்.
* பா.ம.க. தலைமை அலுவலகத்தை திட்டமிட்டு வேறு இடத்திற்கு அன்புமணி மாற்றினார்.
* பசுமை தாயகம் அமைப்பை திட்டமிட்டு கைப்பற்றி கொண்டார்.
* தனி நாற்காலி போட்டு துண்டு அணிவித்து ராமதாஸை, அன்புமணி அவமதித்துவிட்டார்.
* கட்சியை பிளவுப்படுத்த அன்புமணி செயல்பட்டதாக கருதப்படுகிறது என 16 வகையான குற்றங்களை அன்புமணி செய்துள்ளதாக ஒழுங்கு நடவடிக்கை குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
- தேர்தல் படிவங்களில் கையெழுத்திடும் அதிகாரமும் ராமதாசிற்கு மட்டுமே அதிகாரம்.
- 2026 தேர்தல் கூட்டணி குறித்து பேச ராமதாசுக்கு மட்டுமே அனுமதி.
புதுச்சேரி அருகே தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பட்டானூரில் உள்ள சங்கமித்ரா தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று தொடங்கியது.
இந்த பொதுக்குழுவில் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர்கள் கட்சி நிர்வாகிகள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். பொதுக்குழு மேடையில் ராமதாசுக்கு பக்கத்திலேயே அவரின் மூத்த மகள் காந்திமதி அமர்ந்திருந்தார்.
இதனை தொடர்ந்து பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கட்சியின் தலைவராக தொடர்வார் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் பொதுக்குழுவில் பங்கேற்றவர்கள் எழுந்து நின்று கரங்களை கட்டி ஆரவாரம் செய்தனர். இதனை தொடர்ந்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கு எழுந்து நின்று ராமதாஸ் நன்றி தெரிவித்தார்.
ராமதாஸ் 2025 மே மாதம் 30-ந்தேதி முதல் கட்சியின் தலைவராக செயல்படுவார் என்றும் தேர்தல் படிவங்களில் கையெழுத்திடும் அதிகாரமும் ராமதாசிற்கு மட்டுமே அதிகாரம். 2026 தேர்தல் கூட்டணி குறித்து பேச ராமதாசுக்கு மட்டுமே அனுமதி உள்ளிட்ட 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- அன்றிலிருந்து இன்று வரை கருத்து மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
- பொதுக்குழு கூட்டத்தில் 34 தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி அருகே தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பட்டானூரில் உள்ள சங்கமித்ரா தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று தொடங்கியது.
இந்த பொதுக்குழுவில் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர்கள் கட்சி நிர்வாகிகள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பரில் இதே திருமண மண்டபத்தில் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடந்த பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் இளைஞரணி புதிய தலைவராக ராமதாஸ் மகள் வழி பேரனான முகுந்தனை நியமனம் செய்து டாக்டர் ராமதாஸ் அறிவித்திருந்தார். அப்போது மேடையில் டாக்டர் ராமதாசுக்கும் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் உருவாகியது.
அன்றிலிருந்து இன்று வரை கருத்து மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பா.ம.க.வில் டாக்டர் ராமதாஸ் அணி அன்புமணி அணி என இருவேறு அணிகளாக பிரிந்து ஒருவருக்கொருவர் மாறி மாறி கூட்டங்களை நடத்தி வந்தனர்.
இந்த நிகழ்வு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இடையே சலசலப்பை ஏற்படுத்தி வந்தது. கடந்த 9-ந் தேதி அன்புமணி தலைமையில் மாமல்லபுரத்தில் பொதுக்குழு கூட்டம் நடந்தது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு தந்தைக்கும், மகனுக்கும் கருத்து மோதல் நிகழ்ந்த அதே இடத்தில் மீண்டும் பா.ம.க. பொதுக்குழு கூட்டம் டாக்டர் ராமதாஸ் தலைமையில் இன்று நடந்து வருகிறது.
இதில் நிர்வாகிகள் பொதுக்குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், தொண்டர்கள் என நான்காயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் 34 தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் முக்கியமாக கட்சியின் அனைத்து நிகழ்வுகள் மற்றும் வரும் தேர்தலில் கூட்டணி குறித்தும் கட்சியின் முக்கிய முடிவுகள் எடுக்க டாக்டர் ராமதாசுக்கு மட்டுமே முழு அதிகாரம் கொடுப்பதாகவும், தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இளைஞரணி தலைவர் பதவியும் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
பொதுக்குழு கூட்டத்தையொட்டி பா.ம.க.வினர் வைத்துள்ள வரவேற்பு பேனர்களில் அன்புமணி படம் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- நீண்ட தூரம் செல்லாதவாறு பாதுகாப்பு ஊழியர்கள் கயிறு கட்டியிருந்ததை மீறி சிலர் குளித்தனர்.
- சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகூர்:
சுதந்திர தினத்தையொட்டி நேற்று முதல் 3 நாட்கள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதால் சுற்றுலாவுக்கு பலரும் பல இடங்களுக்கு சென்று வருகின்றனர்.
புதுச்சேரிக்கு கர்நாடகா, கேரளா, ஆந்திர பிரதேசம் பகுதியில் இருந்து சுற்றுலாவுக்கு ஏராளமானோர் வந்துள்ளனர்.
இதனால் கடற்கரை மற்றும் சுற்றுலா தளங்களில் வழக்கத்தை விட கூட்ட நெரிசல் இருந்து வருகிறது.
இதைப்போல பெங்களூரு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெண் ஊழியர் மேகா (வயது 27) மற்றும் பவன்(25), பிரிட்ஜ்வால்(24), உள்பட சுற்றுலாவுக்கு 12 பேர் புதுச்சேரி வந்தனர்.
புதுச்சேரி பகுதியை சுற்றி பார்த்தவர்கள் இன்று அரியாங்குப்பம் அடுத்த சின்ன வீராம்பட்டினம் கடற்கரைக்கு வந்தனர். பிறகு அவர்கள் அங்கு கடலில் இறங்கி குளித்தனர்.
நீண்ட தூரம் செல்லாதவாறு பாதுகாப்பு ஊழியர்கள் கயிறு கட்டியிருந்ததை மீறி சிலர் குளித்தனர். அப்போது ராட்சத அலை எழும்பி வந்ததில் எதிர்பாராதவிதமாக அவர்கள் சிக்கினர்.
இதில் அவர்கள் அலறல் சத்தம் போடவே அங்கு இருந்தவர்கள் அவர்களை மீட்டனர். ஆனால் இதில் மேகா, பவன், பிரிட்ஜ்வால் ஆகியோரை பிணமாகவே மீட்க முடிந்தது.
தகவல் அறிந்தவுடன் அரியாங்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்தவர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 2 பேரைசிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சுற்றுலாவுக்கு வருபவர்கள் கடல் அலையில் சிக்கி பலியாவது வாடிக்கையாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.
- நகரம் முழுவதும் உள்ள சாதாரண விடுதி முதல் நட்சத்திர விடுதி வரை சுற்றுலாப் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
- நகரில் உள்ள சாலையோர உணவகங்களில் கூட்டம் அலைமோதியது.
புதுச்சேரி:
புதுச்சேரிக்கு வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகின்றனர்.
சுற்றுலாப் பயணிகள் விரும்பும் பட்டியலில் உலகிலேயே புதுச்சேரி 2-ம் இடத்தை பிடித்துள்ளது. அதனால் சுற்றுலா வருவோரை மேலும் கவர்வதற்காக மத்திய, மாநில அரசுகள் புதுச்சேரி யில் பல்வேறு சுற்றுலா மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில் சுதந்திர தினத்தையொட்டி தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறையை கொண்டாட புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் கன மழை பெய்து வருகிறது.
இதனால் அங்குள்ள சுற்றுலா தளங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் வழக்கத்தை விட இந்த ஆண்டு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர்.
அதோடு மகான் அரவிந்தர் பிறந்தநாளையொட்டி வட மாநில சுற்றுலாப் பயணிகளும் புதுச்சேரி வந்துள்ளனர். இவர்கள் பெரும்பாலும் நகர குதியில் உள்ள ஆசிரம விடுதிகளில் தங்கி உள்ளனர்.
நகரம் முழுவதும் உள்ள சாதாரண விடுதி முதல் நட்சத்திர விடுதி வரை சுற்றுலாப் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
இதனால் நகரம் மற்றும் கடற்கரை ரிசார்டுகளில் அறைகள் கிடைக்காமல் சுற்றுலாப் பயணிகள் தவித்தனர். இதனால் பலர் தமிழக பகுதியான கடலூர் மற்றும் விழுப்புரத்தில் தங்கும் அறை எடுத்து தங்கி புதுச்சேரி வந்தனர். ஓட்டல்களில் உணவு அருந்த சுற்றுலாப் பயணிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் நகரில் உள்ள சாலையோர உணவகங்களில் கூட்டம் அலைமோதியது.
புதுச்சேரி நகர பகுதியில் பல மாநிலங்களை சேர்ந்த கார்கள் உலா வருகிறது. இதனால் ராஜீவ்காந்தி சந்திப்பு, கிழக்கு கடற்கரை சாலை, வழுதாவூர் சாலை, திண்டிவனம், விழுப்புரம் சாலை, காமராஜர் சாலை, நேருவீதி, அண்ணா சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஒவ்வொரு இடத்தையும் கடந்து செல்ல அரைமணி நேரத்துக்கும் மேல் ஆனது. வாகனங்கள் ஊர்ந்து சென்றன. கடற்கரை சாலை, பாரதிபூங்கா, ஆசிரமம், மணக்குள விநாயகர் கோவில், நோணாங்குப்பம் படகு குழாம், பாண்டி மெரினா, ஈடன் கடற்கரை உள்பட சுற்றுலா தலங்கள் சுற்றுலாப் பயணிகளின் வருகையால் நிரம்பி வழிந்தது.
நேற்றைய தினம் தமிழகத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் மதுகடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனால் தமிழகத்தின் அண்டை மாவட்டங்களில் இருந்து மது அருந்த ஏராளமானோர் புதுச்சேரியில் குவிந்தனர். அனைத்து மதுக்கடைகளிலும் மது வாங்க கூட்டம் அலைமோதியது.
- இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்தபோது நிகழ்ந்த வன்முறையால் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.
- கவர்னர் கைலாஷ்நாதன் சுதந்திரத்துக்கு பாடுபட்ட தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.
புதுச்சேரி:
கடந்த 1947-ம் ஆண்டு ஆகஸ்டு 14-ந் தேதி இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்தபோது நிகழ்ந்த வன்முறையால் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதை நினைவுகூரும் வகையில் ஆகஸ்டு 14-ந் தேதி பிரிவினை கொடுமைகளின் நினைவு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
இந்நிலையில் புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள நகராட்சி அலுவலகம் அமைந்துள்ள மேரி கட்டிடத்தில் பிரிவினை கொடுமைகளின் நினைவு தினம் கலைப்பண்பாட்டு துறை சார்பில் அனுசரிக்கப்பட்டது.
இதில் கவர்னர் கைலாஷ்நாதன் கலந்துகொண்டு, பிரிவினையின்போது நடந்த கலவரத்தின் புகைப்பட கண்காட்சியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் சுதந்திரத்துக்கு பாடுபட்ட தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். அப்போது அவரை தியாகிகள் சந்தித்து, தங்களுக்கு வழங்கப்படும் ரூ.12 ஆயிரம் உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். தங்களது வாரிசுகளுக்கு அரசு வேலைவாய்ப்பு, கல்வி போன்றவற்றில் 5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதனை கேட்ட கவர்னர் கைலாஷ்நாதன் மாதந்தோறும் வழங்கப்படும் உதவித்தொகையை ரூ.15 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் உங்களுக்கு உயர்த்திய உதவித்தொகை வழங்கப்படும் என்றார்.
- பெண்ணின் தந்தை திருக்கனூர் போலீஸ் நிலையத்தில் முறையிட்டார்.
- அதிர்ச்சியடைந்த போலீசார் உடனே அவரை மீட்டு புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி அருகே உள்ள கூனிச்சம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கீர்த்திவாசன் (வயது30). இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இருவரும் செல்போனில் பேசி காதலை வளர்த்து வந்தனர். நாளடைவில் கீர்த்திவாசனின் நடவடிக்கை பிடிக்காததால் அந்த பெண் அவருடன் பேசுவதை நிறுத்திக் கொண்டார்.
இதற்கிடையே அந்த பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த கீர்த்திவாசன் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார். மேலும் ஆத்திரமடைந்த கீர்த்திவாசன் அப்பெண்ணின் புகைப்படத்தை வாட்ஸ்-அப்பில் அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதுபற்றி அப்பெண் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். உடனே அந்த பெண்ணின் தந்தை திருக்கனூர் போலீஸ் நிலையத்தில் முறையிட்டார்.
இதையடுத்து கீர்த்திவாசனை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது காதலியை தன்னுடன் சேர்த்து வைக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என கூறி மிரட்டினார்.
இதனிடையே போலீசார் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும்போதே கீர்த்திவாசன் தான் மறைத்து வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) எடுத்து குடித்து விட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அதிர்ச்சியடைந்த போலீசார் உடனே அவரை மீட்டு புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே கீர்த்திவாசன் கவலைக்கிடமாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.
- புதுச்சேரியில் பா.ஜ.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- சபாநாயகர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
மயிலாப்பூரில் கடந்த 8-ந்தேதி அன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து பங்கேற்று பேசினார். அப்போது அவர், கடவுள் ராமரி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக புகார் கூறப்பட்டது.
வைரமுத்து பேசியதாவது:- சீதையை இழந்த ராமர், புத்திசுவாதீனத்தை இழந்தார். புத்திசுவாதீனம் இல்லாதவர் செய்யும் குற்றம், குற்றம் கிடையாது என்று IPC கூறுகிறது. IPC-யில் கூறப்பட்டதை அன்றே கூறினார் கம்பர். ராமர் குற்றம் செய்திருந்தாலும் குற்றவாளி அல்ல என்று கம்பர் கூறுகிறார் என்றார்.
வைரமுத்துவின் இந்த பேச்சு சர்ச்சையான நிலையில் அவருக்கு எதிராக புதுச்சேரியில் பா.ஜ.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சபாநாயகர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
- ஊழியர்கள் கூட்டுப் போராட்டக் குழு மூலம் 4 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்தது.
- தொழிற்சங்கத்தினர் முதலமைச்சர் ரங்கசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
புதுச்சேரி:
புதுவை பி.ஆர்.டி.சி.யில் 15 ஆண்டுகளுக்கு மேலாகப் பணிபுரியும் ஒப்பந்த ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரியும், நிரந்தர ஊழியர்கள் 7-வது ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்த வலியுறுத்தியும் கடந்த 28-ந் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுச்சேரி அரசு போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தால் இன்று 12-வது நாளாக பஸ்கள் ஓடவில்லை. இதனால் புதுச்சேரியை சுற்றி உள்ள கிராம மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதற்கிடையே, ஊழியர்கள் கூட்டுப் போராட்டக் குழு மூலம் 4 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்தது.
இதில் ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்த நிர்வாகம் முன் வந்தது. இதனை எழுத்து பூர்வமாக உறுதிமொழியாக அளிக்கும் வரை போராட்டம் தொடரும் என, போராட்ட குழு தெரிவித்தனர்.
இந்த நிலையில், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்கள், போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பாவிட்டால் எஸ்மா சட்டம் பாயும் என பி.ஆர்.டி.சி. நிர்வாகம் எச்சரித்தது.
இந்த நிலையில் புதுவை சட்டமன்றத்தில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், எதிர்க்கட்சி தலைவர் சிவா, நேரு எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலையில் தொழிற்சங்கத்தினர் முதலமைச்சர் ரங்கசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில் ஒப்பந்த ஊழியர்களுக்கான சம்பளத்தை ரூ.10 ஆயிரம் உயர்த்துவதாகவும், நிரந்தர ஊழியர்களுக்கு அகவிலைப்படியை படிப்படியாக உயர்த்தி தருவதாகவும் உறுதி அளித்தார்.
இதனையடுத்து தொழிற்சங்கத்தினர் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.
இன்று மாலை முதல் பஸ்களை இயக்குவதாக கூறி முதலமைச்சர் ரங்கசாமியிடம் தெரிவித்து சென்றனர். முதலமைச்சர் ரங்கசாமியிடம் பேச்சுவார்த்தையில் பி.ஆர்.டி.சி மேலாண் இயக்குனர் சிவக்குமார் இருந்தார்.






