என் மலர்
புதுச்சேரி

பா.ம.க. பொதுக்குழு கூட்டம் கூடியது- ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர்
- அன்றிலிருந்து இன்று வரை கருத்து மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
- பொதுக்குழு கூட்டத்தில் 34 தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி அருகே தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பட்டானூரில் உள்ள சங்கமித்ரா தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று தொடங்கியது.
இந்த பொதுக்குழுவில் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர்கள் கட்சி நிர்வாகிகள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பரில் இதே திருமண மண்டபத்தில் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடந்த பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் இளைஞரணி புதிய தலைவராக ராமதாஸ் மகள் வழி பேரனான முகுந்தனை நியமனம் செய்து டாக்டர் ராமதாஸ் அறிவித்திருந்தார். அப்போது மேடையில் டாக்டர் ராமதாசுக்கும் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் உருவாகியது.
அன்றிலிருந்து இன்று வரை கருத்து மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பா.ம.க.வில் டாக்டர் ராமதாஸ் அணி அன்புமணி அணி என இருவேறு அணிகளாக பிரிந்து ஒருவருக்கொருவர் மாறி மாறி கூட்டங்களை நடத்தி வந்தனர்.
இந்த நிகழ்வு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இடையே சலசலப்பை ஏற்படுத்தி வந்தது. கடந்த 9-ந் தேதி அன்புமணி தலைமையில் மாமல்லபுரத்தில் பொதுக்குழு கூட்டம் நடந்தது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு தந்தைக்கும், மகனுக்கும் கருத்து மோதல் நிகழ்ந்த அதே இடத்தில் மீண்டும் பா.ம.க. பொதுக்குழு கூட்டம் டாக்டர் ராமதாஸ் தலைமையில் இன்று நடந்து வருகிறது.
இதில் நிர்வாகிகள் பொதுக்குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், தொண்டர்கள் என நான்காயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் 34 தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் முக்கியமாக கட்சியின் அனைத்து நிகழ்வுகள் மற்றும் வரும் தேர்தலில் கூட்டணி குறித்தும் கட்சியின் முக்கிய முடிவுகள் எடுக்க டாக்டர் ராமதாசுக்கு மட்டுமே முழு அதிகாரம் கொடுப்பதாகவும், தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இளைஞரணி தலைவர் பதவியும் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
பொதுக்குழு கூட்டத்தையொட்டி பா.ம.க.வினர் வைத்துள்ள வரவேற்பு பேனர்களில் அன்புமணி படம் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






