என் மலர்
புதுச்சேரி
- பிளாஸ்டிக் பொருட்களை கட்டுப்படுத்துவது பற்றி அனைத்து மாநிலங்களும் 2024-ம் ஆண்டுக்கான அறிக்கையை சமர்ப்பித்தது.
- 15 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
நாடு முழுவதும் கடந்த 2022-ம் ஆண்டு ஒருமுறை பயன்படுத்தும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த தடை உத்தரவு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் எவ்வாறு அமல்படுத்தப்படுகிறது என்பது குறித்து மத்திய அரசின் சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை அமைச்சகம் 6 மாதத்திற்கு ஒருமுறை ஆய்வு கூட்டம் நடத்தி வருகிறது.
இந்த கூட்டத்தில் அனைத்து மாநில தலைமை செயலாளர்கள், சுற்றுச்சூழல் துறை செயலாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.
கடந்த மாதம் 27-ந்தேதி தேசிய சிறப்பு ஆய்வு கூட்டம் டெல்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை கட்டுப்படுத்துவது பற்றி அனைத்து மாநிலங்களும் 2024-ம் ஆண்டுக்கான அறிக்கையை சமர்ப்பித்தது.
அதில் பிளாஸ்டிக் பறிமுதல் செய்ததில் தேசிய அளவில் புதுச்சேரி மாநிலம் முதலிடமும், பிளாஸ்டிக்கை கட்டுப்படுத்துவதில் 3-வது இடத்தையும் பிடித்துள்ளது. இங்கு கடந்த 2024-ம் ஆண்டில் பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் மற்றும் கடைகளில் 1,305 ஆய்வுகள் நடத்தப்பட்டு, சுமார் 15 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.15 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தேசிய அளவில் டெல்லி முதலிடமும், மராட்டியம் 2-வது இடமும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- கட்டுமரம், நாட்டு படகுகளில் சென்று மீன்பிடித்துக் கொள்ளலாம்.
- அனைத்து மீனவர்களும் மீன்பிடி தடைக்கால உத்தரவை தவறாமல் பின்பற்ற வேண்டும்.
புதுச்சேரி:
புதுச்சேரி மீன்வளத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி அரசு கடந்த 10-ந்தேதி வெளியிட்ட அறிவிப்பின்படி கடல்சார் மீன்வளங்களை பாதுகாத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி கடந்த 15-ந் தேதி முதல் வருகிற ஜூன் மாதம் 14-ந்தேதி வரை 61 நாட்கள் புதுச்சேரி கனக செட்டிகுளம் முதல் மூர்த்தி குப்பம், புதுக்குப்பம் மீனவ கிராமம் வரை இழுவலை கொண்டு விசைப்படகு, எந்திரம் பொருத்திய பைபர் படகில் மீன்பிடிக்க தடை விதிகப்பட்டுள்ளது. ஆனால் கட்டுமரம், நாட்டு படகுகளில் சென்று மீன்பிடித்துக் கொள்ளலாம்.
இந்த நிலையில் தற்போது குறிப்பிட்ட சில மீனவ கிராமத்தில் இருந்து மீனவர்கள் பைபர் படகில் கடலுக்குள் சென்று மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதன் காரணமாக மற்ற மீனவ கிராமங்களிடையே பதற்றம் நிலவுகின்ற சூழல் ஏற்படலாம்.
எனவே அனைத்து மீனவர்களும் மீன்பிடி தடைக்கால உத்தரவை தவறாமல் பின்பற்ற வேண்டும். இந்த தடையை மீறி மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு அரசால் வழங்கப்படும் தடைக்கால நிவாரண தொகை நிறுத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- குற்றவாளிகளை பிடிக்க புதுச்சேரி காவல் துறையில் சிறப்பு படை அமைக்கப்பட்டுள்ளது.
- துப்பு துலக்க பயிற்சி பெற்ற சைபர் கமாண்டோக்களை பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் சமீப காலமாக வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதனால் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் பிரிவை எப்போதும் தயார் நிலையில் இருக்க உத்தர விடப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு மின்னஞ்சல் மூலம் வெடி குண்டு மிரட்டல் வந்தது.
அதனை தொடர்ந்து அடுத்த நாள் புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு துணைத்தூதரகத்துக்கு இதே போல் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. விரிவான சோதனைக்கு பின்னர் வெடிகுண்டு ஏதும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
இதற்கிடையே இந்த மாத தொடக்கத்தில் புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு இதேபோன்ற மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. இதே போல் கடந்த 14-ந் தேதி மர்ம நபர்கள் கவர்னர் மாளிகைக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக இ-மெயில் மூலம் மிரட்டல் விடுத்தனர்.
இதனை தொடர்ந்து வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் மோப்பநாய் பிரிவினர் கவர்னர் மாளிகையில் தீவிர சோதனை நடத்தினர். அவை போலி மின்னஞ்சல் என்பது தெரியவந்தது.
இந்த 4 மிரட்டல் மின்னஞ்சல்களிலும் மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பமாக கொண்டு வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர்கள் மிரட்டியுள்ளனர். ஜிப்மர் ஆஸ்பத்திரி, பிரெஞ்சு துணைத்தூதரகம், மாவட்ட கலெக்டர் அலுவலங்களுக்கு நேரடியாக மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
கவர்னர் மாளிகைக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக நேரடியாக மிரட்டுவதற்கு பதிலாக முதலமைச்சர் மற்றும் டி.ஜி.பி. அலுவலகங்களுக்கு மிரட்டலை அனுப்பியிருத்தனர்.
ஆனால் இந்த 4 சம்பவங்களிலும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர்கள் டார்க் நெட்டை பயன் படுத்தியதால் மர்ம நபர்களை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
கவர்னர் மாளிகைக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரத்தை சீரியசாக எடுத்துக்கொண்ட போலீசார் மத்திய அரசின் நிறுவனங்களில் தொடர்பில் உள்ளனர்.
மேலும் விசாரணை விரிவானதாகவும் ஒருங்கிணைத்த முறையிலும் இருக்க வேண்டும் என்பதால் மத்திய சைபர் கிரைம் ஒருங்கிணைத்த மையத்தின் உதவியை புதுச்சேரி போலீசார் நாடியுள்ளனர்.
மர்ம நபர்களை கண்டுபிடிக்க உதவி செய்யுமாறு புதுச்சேரி காவல்துறை இ-மெயில் மூலம் கடிதம் எழுதியுள்ளது.
இந்த விவகாரத்தில் மின்னஞ்சலை அனுப்பியவர்கள் எல்லை தாண்டிய (வெளிநாடு) அதிகார வரம்பைக் கொண்ட கருவிகளை பயன்படுத்தியுள்ளனர்.
எனவே வெளிநாட்டில் இருந்து மிரட்டல் வந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். குற்றவாளிகளை பிடிக்க புதுச்சேரி காவல் துறையில் சிறப்பு படை அமைக்கப்பட்டுள்ளது. இதில் துப்பு துலக்க பயிற்சி பெற்ற சைபர் கமாண்டோக்களை பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
- விலை அதிகபட்சம் ரூ.1.20 லட்சம் கொண்டதாக இருக்க வேண்டும்.
- தொகை கட்டண ரசீது சமர்பித்தவுடன் திருப்பி அளிக்கப்படும்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் இ கவர்னன்ஸ் முறை அறிமுகப்படுத்தப்பட்டும் முழுமையாக அமலாகவில்லை.
இதற்கான உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டியுள்ளது.
இந்த நிலையில் புதுச்சேரி அரசு தலைமை செயலாளர் சரத் சவுக்கான் அனைத்து துறைகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அரசு அதிகாரிகள் தங்கள் பொறுப்புகளை திறம்பட நிர்வகிக்கவும், கோப்புகளுக்கு விரைவாக அனுமதி வழங்க உயர் செயல்திறன் கொண்ட சாதனங்கள் வைத்திருப்பது அவசியம். இந்த சாதனங்களை வாங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. தகுதி வாய்ந்த நிர்வாக அதிகாரியின் அனுமதி பெற்று அரசு அதிகாரிகள் தங்கள் விருப்பப்படி டெஸ்க்டாப், லேப்-டாப், ஐபோன், ஐபேட், ஸ்மார்ட்போன் வாங்கி கொள்ளலாம்.
இவற்றின் விலை அதிகபட்சம் ரூ.1.20 லட்சம் கொண்டதாக இருக்க வேண்டும். அதிகாரிகளே சாதனங்களை வாங்க வேண்டும். இதற்கான தொகை கட்டண ரசீது சமர்பித்தவுடன் திருப்பி அளிக்கப்படும். சாதனம் வாங்கிய முதல் 4 ஆண்டு அரசு சாதனமாக இருக்கும். அதில் உள்ள தகவல்கள் அதிகாரியின் முழு பொறுப்பாகும். சைபர் கிரைம் வழிகாட்டுதல்களை அதிகாரிகள் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
- புதுச்சேரி முழுவதும் பரவலாக மிதமான மழை பெய்தது.
புதுச்சேரி:
புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்தே கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
புதுச்சேரியில் தினமும் சராசரியாக 96 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி வருகிறது. இரவு நேரங்களிலும் வெப்பச்சலனம் காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் தூக்கம் இழந்து தவிக்கும் நிலை உள்ளது.
வெயிலின் தாக்கத்தை சமாளிக்க பொதுமக்கள் இளநீர், நுங்கு, தர்பூசணி, கிர்ணி, பழச்சாறு உள்ளிட்டவற்றை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். இதனால் அவற்றின் விற்பனை அதிகரித்து வருகிறது.
இதற்கிடையே புதுச்சேரியில் நேற்று அதிகபட்சமாக 96.26 டிகிரி பாரன்ஹீட பதிவானது. இந்நிலையில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, அதே பகுதியில் வலுவிழந்தது. இருப்பினும், அதே மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிநிலவுகிறது.
இதன் காரணமாக, 11-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி நேற்று இரவு 9 மணியளவில் புதுச்சேரி முழுவதும் பரவலாக மிதமான மழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிச்சியான சூழல் நிலவியது. திடீரென பெய்த மழையால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியில் மழையில் நனைந்தபடியே சென்றனர்.
- போலீசார் சிறுமியிடம் நடந்தவற்றை வாக்குமூலமாக வீடியோவில் பதிவு செய்தனர்.
- சிறுமியின் தந்தையை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
புதுச்சேரி:
புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியில் நேற்று முன்தினம் இரவு புதுவை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது லாஸ்பேட்டை மெயின் ரோடு பிள்ளையார்கோவில் அருகே நள்ளிரவில் 17வயது சிறுமி ஒருவர் தனியாக வேகமாக நடந்து சென்று கொண்டிருந்தார்.
இதைக்கண்ட இன்ஸ்பெக்டர் சாந்தி தனது வாகனத்தை நிறுத்தி சிறுமியிடம் விசாரணை நடத்தினார். அப்போது சிறுமி அதிர்ச்சிகரமான தகவலை கூறினார்.
அந்த சிறுமி பிளஸ்-2 படித்து வருவதாகவும், விடுமுறை முடிந்து வீட்டில் இருந்து வந்த அவருக்கு அவரது தந்தை கடந்த 10 நாட்களாக பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக தெரிவித்தார். இதனால் புகார் அளிக்க லாஸ்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு நள்ளிரவில் நடத்து வந்ததாக தெரிவித்தார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த இன்ஸ்பெக்டர் சாந்தி பாதிக்கப்பட்ட சிறுமியை மீட்டு தனியார் காப்பகத்தில் இரவு தங்க வைத்தார்.
நேற்று காலை இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் சிறுமியிடம் நடந்தவற்றை வாக்குமூலமாக வீடியோவில் பதிவு செய்தனர்.
பின்னர் சிறுமியின் தந்தையை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது மகள் என்றும் பாராமல் அவர் 10 நாட்களாக பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.
- விக்கி என்ற ராஜகணபதியை கடந்த மாதம் நில மோசடி வழக்கில் போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர்.
- மோசடி வழக்கு தொடர்பாக விக்கியை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பிரந்தியத்தை சேர்ந்தவர் சகாயமேரி. இவருக்கு காரைக்கால் கோட்டுச்சேரியை சேர்ந்த நீலமேகன் மற்றும் திருநாள்ளாரை சேர்ந்த காயத்ரி ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் நர்சிங் வேலை வாங்கி தர புதுச்சேரியில் ஆள் இருப்பதாக நீலமேகன் மற்றும் காயத்திரி ஆகியோர் சகாயமேரியிடம் கூறியுள்ளனர்.
இதையடுத்து அவர்கள் புதுச்சேரி பா.ஜ.க, பிரமுகரான அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த விக்கி என்ற ராஜகணபதி (வயது35) என்பவரை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இதனை நம்பி சகாயமேரி மற்றும் மயிலாடுதுறையை சேர்ந்த ஜெயக்கொடி ஆகியோர் இணைந்து நர்சிங் வேலைக்காக விக்கியிடம் ரூ.16.65 லட்சத்தை கொடுத்துள்ளனர்.
ஆனால் பணம் கொடுத்து பல நாட்கள் ஆகியும் வேலை பற்றி எந்த தகவலும் கிடைக்காததால், ஜெயக்கொடி விக்கியிடம் கேட்டுள்ளார். சில நாட்களில் வந்துவிடும் என விக்கி கூறி வந்துள்ளார்.
இதையடுத்து விக்கி, அவர்களுக்கு ஜிப்மர் ஆவணங்கள், ஜிப்மர் ஐ.டி. கார்டு, ஜிப்மர் பணி ஆணை, சம்பளம் தொகை விவரங்கள் உட்பட்ட ஜிப்மர் இயக்குநரின் கையெழுத்திட்டு கொடுத்துள்ளார்.
இதனை ஜெயக்கொடி மற்றும் சகாயமேரி ஆகியோர் ஜிப்மர் இயக்குனரிடம் காண்பித்த போது அது போலியான ஆவணங்கள் என்று தெரிவித்தார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் பின்னர் இதுகுறித்து ஜெயக்கொடி கோரிமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் விக்கி என்ற ராஜகணபதி. கோட்டுச்சேரி நீலமேகன் மற்றும் திருநள்ளாறை சேர்ந்த காயத்ரி ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே விக்கி என்ற ராஜகணபதியை கடந்த மாதம் நில மோசடி வழக்கில் போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர்.
இதை தொடர்ந்து மோசடி வழக்கு தொடர்பாக விக்கியை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
- புதுச்சேரியில் இளைஞர் தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி தொடக்க விழா நடைபெற்றது.
- பொதுவாக விளையாட்டு வீரர்கள் அரசியலில் வெற்றி பெறுவார்கள்.
புதுச்சேரி:
புதுச்சேரி உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் நேற்று 40வது இளைஞர் தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்க வந்த இந்திய கூடைப்பந்து கூட்டமைப்பின் தலைவரும், த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மை பொதுசெயலாளருமான ஆதவ் அர்ஜுனா, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிவுடன் இணைந்து கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* பொதுவாக விளையாட்டில் அரசியல் இருக்கக்கூடாது. அரசியலை விளையாட்டாக பார்க்கக்கூடாது
* புதுச்சேரி முதலமைச்சர் மிகவும் எளிமையாக இருக்கிறார். பொதுவாக விளையாட்டு வீரர்கள் அரசியலில் வெற்றி பெறுவார்கள். உதாரணமாக, அமெரிக்காவில் பராக் ஒபாமா கூடைப்பந்து வீரர். அவர் தினமும் தன்னுடைய விளையாட்டை விளையாடுவார்.
* நிர்வாகத்தில் எளிமையாகவும், எளிதில் தொடர்பு கொள்ளக்கூடியவராகவும் இருக்கக்கூடிய தலைவராக சிறு வயதில் இருந்தே பார்த்துக்கொண்டிருக்கிறேன். அவருடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது மிகவும் மகிழ்ச்சி.
* த.வெ.க. பற்றிய கேள்விக்கு no அரசியல் என்று கூறினார்.
- மாணவிகள் இருவரையும் அழைத்து சென்று தனியாக விசாரணை நடத்தினர்.
- பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக ராஜூ, மணிமாறன் ஆகிய 2 பேரையும் போசார் நேற்று கைது செய்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி நகரப்பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவிகள் 2 பேர், கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயமாகினர். இது குறித்த புகாரின்பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவிகளை தேடினர்.
இதற்கிடையே அன்றைய தினம் இரவே 2 மாணவிகளும் வீட்டிற்கு வந்தனர். அப்போது அவர்கள் இருவரும் சோர்வாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அந்த மாணவிகள் இருவரையும் அழைத்து சென்று தனியாக விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
அதாவது, மாணவிகள் இருவரையும் புதுச்சேரி முத்தியால்பேட்டை அடுத்துள்ள குருசுக்குப்பத்தைச் சேர்ந்த மீன்வியாபாரி ராஜூ என்ற புஷ்பராஜ் (வயது 25), வைத்திக்குப்பத்தைச் சேர்ந்த ஏ.சி. மெக்கானிக் மணி என்ற மணிமாறன் (27) ஆகியோர் காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி இருக்கிறார்கள். மாணவிகளும் அந்த ஆசை வார்த்தையை நம்பி அவர்களுடன் பழகி இருக்கிறார்கள். கடந்த 2-ந்தேதி இருவரையும் கடற்கரை பகுதிக்கு தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அன்று இரவு வெகுநேரமான பின்னர் மாணவிகள் வீடு திரும்பிய தகவல் வெளியானது.
போலீசார் மாணவிகள் 2 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அப்போது 10-க்கும் மேற்பட்டோர் அந்த 2 மாணவிகளிடம் தனித்தனியாக பழகி ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்து சீரழித்த அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து போலீசார் மாணவிகள் இருவரையும் மருத்துவ பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர் மாணவிகள் இருவரும் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக ராஜூ, மணிமாறன் ஆகிய 2 பேரையும் போசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும் மாணவிகளிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக 4 பேரை போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் 2 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக 14 பேர் போலீசாரால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
- வீட்டிற்கு தேவையான பொருட்களை கொத்தனாரிடம் வாங்கி கொடுத்துவிட்டு வீட்டிற்கு வந்தார்.
- புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி:
வில்லியனூர் அடுத்த திருக்காஞ்சி கற்பக வினாயகர் சிட்டியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி மீனா(வயது36).
இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ரமேஷ் திருக்காஞ்சி பகுதியில் வீடு ஒன்று வாங்கி அதனை சரிசெய்து வருகிறார். அந்த வீட்டிற்கு தேவையான பொருட்களை கொத்தனாரிடம் வாங்கி கொடுத்துவிட்டு வீட்டிற்கு வந்தார்.
அப்போது மீனா சமையல் செய்யாமல் இருந்தார். அதனை தொடர்ந்து ரமேஷ் மதியம் 1 மணியளவில் வில்லியனூருக்கு சென்று பிரியாணி வாங்கி வருவதாக கூறிவிட்டு சென்றவர், பிற்பகல் 3 மணிக்கு மேல் பிரியாணியுடன் வந்தார். இதனால் மீனா கோபித்துக் கொண்டு சாப்பிடாமல் இருந்தார்.
ரமேஷ் வெளியே சென்று மாலை வீட்டிற்கு வந்தபோது மின் விசிறியில் புடவையில் மீனா தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அவரை மீட்டு வில்லியனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- பாராளுமன்றத்தில் தமிழில் கேள்வி எழுப்பும் உரிமையைப் பெற்றுத் தந்து முதன்முதலில் பாராளுமன்றத்தில் தமிழில் உரையாற்றிய பெருமைக்குரியவர் குமரி அனந்தன்.
- தந்தி விண்ணப்பங்கள், மணியார்டர் போன்றவற்றில் தமிழ் இடம் பெற போராடி தமிழ் மொழிக்கான உரிமைகளைப் பெற்றுத் தந்தவர்.
தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் காலமானார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
இலக்கியச் செல்வர் என்று அனைவராலும் போற்றப்பட்ட முதுபெரும் அரசியல் தலைவரும் புதுச்சேரியின் முன்னாள் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் தந்தையுமான குமரி அனந்தன் அவர்கள் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாக உள்ளது.
சிறந்த தேசப் பற்றாளராக விளங்கிய அவர், நான்கு முறை தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை பாராளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். தமிழ்மொழி தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ்க் கலாச்சாரத்தின்மீது ஆழ்ந்த பற்று கொண்டு தமிழ் மொழிக்காகவும், தமிழர் நலனிற்காகவும் பல அரும்பணிகளை ஆற்றிய அவர், தமிழில் மிகச்சிறந்த பேச்சாளராகவும் திகழ்ந்தவர்.
பாராளுமன்றத்தில் தமிழில் கேள்வி எழுப்பும் உரிமையைப் பெற்றுத் தந்து முதன்முதலில் பாராளுமன்றத்தில் தமிழில் உரையாற்றிய பெருமைக்குரிய குமரி அனந்தன், விமானங்களில் தமிழில் அறிவிப்பு வெளியிடவும், தந்தி விண்ணப்பங்கள், மணியார்டர் போன்றவற்றில் தமிழ் இடம் பெறவும் போராடி தமிழ் மொழிக்கான உரிமைகளைப் பெற்றுத் தந்தவர்.
தமிழுக்குத் தொண்டாற்றி பெரும் தமிழ்ப்பற்றாளராக விளங்கிய தகைசால் தமிழர் குமரி அனந்தன் அவர்களின் மறைவு, தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய இழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் அவரைச் சார்ந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- புதுச்சேரியில் அரசின் பெரும்பாலான பஸ்கள் இயங்கவில்லை.
- புதுவையை பொறுத்தவரை தனியார் பஸ்களே அதிகம்.
புதுச்சேரி:
புதுச்சேரி அரசின் சார்பு நிறுவனமான சாலை போக்குவரத்து கழகத்தின் (பி.ஆர்.டி.சி.) சார்பில் நகரம், கிராமம், வெளிமாநில பகுதிகளான சென்னை, பெங்களூரு, குமுளி, கடலூர், நாகர்கோவில், மாகி, திருப்பதி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
அரசு போக்குவரத்து கழகத்தில் சுமார் 40 ஊழியர்கள் மட்டும்தான் நிரந்தர பணியாளர்களாக உள்ளனர். டிரைவர், கண்டக்டர், பணிமனை ஊழியர்கள் என சுமார் 130-க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த ஊழியர்களாக உள்ளனர். இவர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி தொடர்ந்து பல ஆண்டாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.
அவ்வப்போது பணி நிரந்தரம் கோரி போராட்டமும் நடத்திவந்தனர். அரசு சார்பில் உறுதிமொழி அளித்தவுடன் போராட்டம் கைவிடப்படும்.
இந்த நிலையில் பணி நிரந்தரம் செய்யக்கோரி இன்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக ஒப்பந்த ஊழியர்கள் அறிவித்திருந்தனர். இதற்காக சங்கத்தின் சார்பில் வேலைநிறுத்த நோட்டீசை நிர்வாகத்திடம் வழங்கியிருந்தனர்.
இதன்படி இன்று காலை ஒப்பந்த ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இதனால் புதுச்சேரியில் அரசின் பெரும்பாலான பஸ்கள் இயங்கவில்லை. புதுச்சேரி நகரம், கிராமப்புறங்களுக்கு இடையே இயக்கப்படும் பஸ்கள் முழுமையாக ஓடவில்லை. காலை நேரத்தில் சென்னைக்கு மட்டும் நிரந்தர பணியாளர்கள் மூலம் பஸ்கள் இயக்கப்பட்டது.
நிரந்தர பணியாளர்கள் எண்ணிக்கையில் குறைவாகவும், ஷிப்ட் முறையில் பணியாற்றுவதாலும் அனைத்து பஸ்களையும் இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. புதுவையை பொறுத்தவரை தனியார் பஸ்களே அதிகம். தமிழக அரசின் பஸ்கள் புதுவையில் இருந்தும், அண்டை மாவட்டங்களில் இருந்தும் புதுச்சேரி வழியாக இயக்கப்படுகிறது.
இதனால் பயணிகள் பெரும் அவதிக்கு ஆளாகவில்லை. இருப்பினும் புதுச்சேரியின் கிராமப்புற பகுதிகளில் தனியார் பஸ்கள் செல்லாத பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்கள் இயங்காததால் உட்புற கிராமப்புற மக்கள் புதுச்சேரிக்கு வந்து செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகினர்.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஒப்பந்த ஊழியர்கள் புதிய பஸ்நிலையம் பின்புறம் உள்ள பணி மனை முன்பு திரண்டு பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.






