புதுச்சேரி நகர பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் 3 பேர் பலி: பொதுமக்கள் பீதி

கோவிந்தசாலை பகுதியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்த போது அந்த பகுதி மக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.உயிரிழப்பு ஏற்பட்ட கோவிந்தசாலை பகுதிக்கு, முத்தரையர்பாளையத்தில் இருந்து குடிநீர் வழங்கப்படுகிறது.
புதுச்சேரி நகர பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் 3 பேர் பலி: பொதுமக்கள் பீதி
Published on

புதுச்சேரி:

புதுச்சேரி நகர பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதாக அந்த பகுதி மக்கள் குற்றச்சாட்டு கூறி வந்தனர்.

கடந்த மாதம் 5-ந்தேதி உருளையன்பேட்டை தொகுதி கோவிந்தசாலை முடக்கு மாரியம்மன் கோவில் வீதியில் குடிநீரை குடித்த 20-க்கும் மேற்பட்டவர்களுக்கு வாந்தி, வயிற்று போக்கு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

நேற்று முன்தினம் மீண்டும் மேலும் பலருக்கும் வாந்தி, வயிற்று போக்கு ஏற்பட்டது. அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதில் வயிற்று போக்கால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்லும் வழியில் கோவிந்தசாலை பகத்சிங் வீதி பூசைமுத்து (வயது43), காமராஜ் வீதி மூதாட்டி பார்வதி(65), பாரதிபுரம் மெயின்ரோடு கோவிந்தசாமி(70) ஆகியோர் இறந்தனர்.

கடந்த 3 நாட்களாக வாந்தி மற்றும் வயிற்று போக்கால் பாதிக்கப்பட்டு, அரசு பொது மருத்துவமனையில் 31 பேரும், கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் 40 பேரும் அனுமதிக்கப்பட்டனர்.

வயிற்று போக்கால் 3 பேர் இறந்த சம்பவத்தால் உருளையன்பேட்டை மற்றும் நெல்லித்தோப்பு தொகுதி மக்கள் பீதியடைந்தனர்.

கோவிந்தசாலை பகுதியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்த போது அந்த பகுதி மக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு மாதமாக குடிநீரில் கழிவு நீர் கலந்து வருகிறது. ஒரு சில நாட்கள் தண்ணீர் நன்றாக வருகிறது. அடுத்த சில நாட்கள் கழிவு நீர் கலந்து வருகிறது. குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் கலந்து வருகிறது.

இதுகுறித்து பல முறை நகராட்சி, பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இப்போது நடந்த உயிரிழப்பிற்கு காரணம் அதிகாரிகளின் அலட்சியமே என குற்றம் சாட்டினர்.

உயிரிழப்பு ஏற்பட்ட கோவிந்தசாலை பகுதிக்கு, முத்தரையர்பாளையத்தில் இருந்து குடிநீர் வழங்கப்படுகிறது. இதில் ஏதேனும் கழிவு நீர் கலந்துள்ளதா என பொதுப்பணித்துறை அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து மேலும் அந்த பகுதியில் விநியோகம் செய்யப்பட்ட குடிநீரை பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.

பாதிக்கப்பட்ட பகுதியில் குளோரின் கலந்த குடிநீர் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே குடிநீரில் 0.2 பி.பி.எம்., குளோரின் கலந்து வழங்கப்படும் நிலையில், தற்போது 0.4 பி.பி.எம்., ஆக அதிகரித்து வழங்கப்படுகிறது. அதேபோல் பாதிக்கப்பட்ட பகுதிகளில், பிளீச்சிங் பவுடர் தெளிப்பது போன்ற தூய்மை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

குடிநீர் குழாயை முழுவதுமாக ஆய்வு செய்துவிட்டோம். கழிவு நீர் கலந்ததாக தெரியவில்லை. இருப்பினும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் ஆய்விற்காக சேகரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவுகள் சில தினங்களில் கிடைக்கும். அதன்பிறகே, வாந்தி, வயிற்று போக்குக்கு காரணம் தெரியவரும். பொதுப்பணித்துறையின் பறக்கும் படையினர் வீடு, வீடாக சென்று குடிநீர் துர்நாற்றத்துடன் வருகிறதா என்றும், துர்நாற்றம் வந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தி வருகின்றனர்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே சுகாதாரத்துறை சார்பில் வாந்தி, பேதி ஏற்பட்ட கோவிந்த சாலை பகுதியில் டாக்டர்கள் முகாமிட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com