என் மலர்
புதுச்சேரி

கையில் மாதா கொடியுடன் விநாயகர் சிலையை தலையில் சுமந்து வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்
- பாதயாத்திரை குழு இன்று காரைக்காலுக்கு வந்தது.
- சமத்துவம், சகோதரத்துவம் வேண்டி விநாயகர் சிலையை தலையில் சுமந்து வேளாங்கண்ணி செல்கிறேன்.
புதுச்சேரி:
புதுச்சேரி வாணரப்பேட்டையை சேர்ந்த ராஜ்குமார் தலைமையில் ஒரு குழு வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை செல்கிறது.
இந்த குழு கடந்த 23-ந்தேதி புதுச்சேரி இருதய ஆண்டவர் ஆலயத்தில் தொடங்கி வேளாங்கண்ணி நோக்கி பாதயாத்திரையாக புறப்பட்டனர். இந்த நிலையில் பாதயாத்திரை குழு இன்று காரைக்காலுக்கு வந்தது.
அங்கு சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலையை வாங்கிய ராஜ்குமார் சிலையை தலையில் சுமந்தபடி கையில் வேளாங்கண்ணி கொடியுடன் பாத யாத்திரையை தொடர்ந்தார்.
கடந்த 23-ந்தேதி வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக புதுச்சேரியில் இருந்து புறப்பட்டோம். இன்று காரைக்கால் வந்தடைந்தோம். கோட்டுச்சேரி விநாயகர் கோவிலில் சாமி கும்பிட்டு, சதுர்த்திக்கு விநாயகர் சிலை வாங்கினோம். பாதயாத்திரை செல்வதால் விநாயகர் சிலை வாங்கி வீட்டில் சதுர்த்தி கொண்டாட இயலாது.
சமத்துவம், சகோதரத்துவம் வேண்டி விநாயகர் சிலையை தலையில் சுமந்து வேளாங்கண்ணி செல்கிறேன். காரைக்காலில் இருந்து வேளாங்கண்ணி வரை விநாயகர் சிலையுடன் செல்வேன். வேளாங்கண்ணி கடலில் விநாயகர் சிலையை 3-ம் நாளில் கரைப்போம் என்றார்.






