என் மலர்
புதுச்சேரி
- புதுச்சேரி நகர சேவைக்காக தனியார் பங்களிப்புடன் மொத்தம் 25 எலெக்ட்ரிக் பஸ்கள் வாங்கப்பட்டுள்ளது.
- புதிய பஸ்களை முதலீடு செய்து வாங்குதல், அதனை பராமரித்தல், இயக்குதல் அனைத்தும் தனியார் நிறுவனம் மேற்கொள்கிறது.
புதுச்சேரி:
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுச்சேரி நகர சேவைக்காக தனியார் பங்களிப்புடன் மொத்தம் 25 எலெக்ட்ரிக் பஸ்கள் வாங்கப்பட்டுள்ளது. இதில் 10 'ஏசி' பஸ்களும் அடங்கும்.
இந்த எலெக்ட்ரிக் பஸ்களுக்கு ரூ.4 கோடி மதிப்பில் சார்ஜிங் ஸ்டேஷன் புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில், தாவரவியல் பூங்கா எதிரில் உள்ள நகராட்சி இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய பஸ்களை முதலீடு செய்து வாங்குதல், அதனை பராமரித்தல், இயக்குதல் அனைத்தும் தனியார் நிறுவனம் மேற்கொள்கிறது.
அரசு அதற்கான தொகையை தனியார் நிறுவனத்திற்கு வழங்குகிறது. டிக்கெட் வசூல் செய்யும் பணியை புதுச்சேரி சாலை போக்குவரத்து கழக ஊழியர்கள் செய்கின்றனர்.
இந்த 25 இ-பஸ்களின் சேவை வருகிற 24-ந் தேதி முதல் புதுச்சேரி நகர பகுதியில் இயக்கப்பட உள்ளது.
அன்றே நகராட்சி சார்பில் மகளிர் சுயஉதவி குழு பெண்களுக்கு 38 எலெக்ட்ரிக் ஆட்டோவும் வழங்கப்படவுள்ளது.
- போலி ஆவணங்களை தயார் செய்து மோசடியை அரங்கேற்றி வருவதாக கூறப்படுகிறது.
- சின்னஞ்சிறு மாநிலமான புதுச்சேரியை மையமாக வைத்து பல்வேறு மோசடி செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுச்சேரி:
ஏழை மக்களின் வறுமையை பயன்படுத்தி அவர்களின் கிட்னிக்கு சில லட்சம் கொடுத்து விட்டு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வாயிலாக பல கோடி ரூபாயை சுருட்டிய கும்பல் கடந்த சில வாரங்களுக்கு முன் தமிழகத்தில் சிக்கியது.
இச்சம்பவத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை அதிகாரிகள், ஊழியர்கள், ஏஜெண்டுகளுக்கு தொடர்பு உள்ளதாகவும், தனியார் மருத்துவமனைகளை நடத்தும் அரசியல்வாதிகளும், இதன் பின்புலத்தில் உள்ளதாகவும் புகார் எழுந்தது.
அதை தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் விசைத்தறி தொழிலாளர்களிடம் நடத்தப்பட்ட கிட்னி திருட்டு வெளிச்சத்திற்கு வந்ததால் திருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் 2 தனியார் மருத்துவமனைகளுக்கு, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புதுச்சேரியில் புறநகர் பகுதியில் உள்ள பிரபல மருத்துவமனையில் கிட்னி மாற்று அறுவை சிகிச்சையில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வரும் 'பகீர்' தகவல் தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த கும்பல், தமிழகத்தை போல புதுச்சேரியிலும் கிட்னி தானம் கொடுப்பவர், பெறுபவரின் உறவினர் என போலி ஆவணங்களை தயார் செய்து மோசடியை அரங்கேற்றி வருவதாக கூறப்படுகிறது.
தமிழகத்தை சேர்ந்த மோசடி மற்றும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் சின்னஞ்சிறு மாநிலமான புதுச்சேரியை மையமாக வைத்து பல்வேறு மோசடி செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதில் கிட்னி மோசடி கும்பலும் இணைந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- வெளியூர்களில் வேலை செய்பவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர்.
- தமிழகத்தில் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் ஆர்வத்துடன் தயாராகி வருகின்றனர். தீபாவளி பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட நினைக்கும் வெளியூர்களில் வேலை செய்பவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர்.
இதனிடையே, பண்டிகையை கொண்டாடிவிட்டு மீண்டும் வேலைக்கு திரும்புவோரின் நலனை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் தீபாவளிக்கு மறுநாள்(21-ந்தேதி) ஒரு நாள் மட்டும், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் 25-ந்தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை நாளாக அறிவித்து புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார். இதன்படி புதுச்சேரியில் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், பொதுத்துறை நிறுவனங்களுக்கும் 21-ந்தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- நோணாங்குப்பத்தின் ஆற்றின் இருகரையோரங்களில் இருப்பவர்களுக்கு புதுச்சேரி கலெக்டர் குலோத்துங்கன் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- ஆற்றில் இறங்குவது மீன்பிடிப்பது, விளையாடுவது, நீந்துவது, செல்பி எடுப்பது போன்ற எந்தவிதமான செயல்களிலும் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி:
விழுப்புரம் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் வீடூர் அணையின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருகிறது. நேற்று பிற்பகல் 2 மணி நிலவரப்படி 28 அடியை எட்டியது. மேலும் தொடர்ந்து நீர்மட்டம் உயர்ந்து வருவதால் அணையில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால் சங்கராபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதையொட்டி சங்கராபரணி ஆற்றின் கரையோரம் வசிக்கும் புதுச்சேரியை சேர்ந்த மணலிப்பட்டு, கொடாத்தூர், செட்டிப் பட்டு, கூனிச்சம்பட்டு, சுத்துக்கேணி, கைக்கிலப்பட்டு, தேத்தாம்பாக்கம், குமாரப்பாளையம், வம்புப்பட்டு, செல்லிப்பட்டு, பிள்ளையார்குப்பம், கூடப்பாக்கம் (கோனேரிக்குப்பம்), வில்லியனூர் (ஆரியப்பாளையம், புதுநகர் பிளாட்-2) பொறையாத்தமன் நகர், கோட்டைமேடு, மங்கலம், உறுவையாறு, திருக்காஞ்சி, ஒதியம்பட்டு மற்றும் புதுச்சேரி தாலுகாவில் இருக்கும் என்.ஆர்.நகர், நோணாங்குப்பத்தின் ஆற்றின் இருகரையோரங்களில் இருப்பவர்களுக்கு புதுச்சேரி கலெக்டர் குலோத்துங்கன் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கரையோரத்தில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வருவாய்த்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நேரத்தில் ஆற்றில் இறங்குவது மீன்பிடிப்பது, விளையாடுவது, நீந்துவது, செல்பி எடுப்பது போன்ற எந்தவிதமான செயல்களிலும் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
- புதுச்சேரியில் கடந்த ஆட்சியில் நலிந்து போன கூட்டுறவு சங்கங்களை மேம்படுத்துவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- சர்க்கரை ஆலை, நெசவாளர் கூட்டுறவு சங்கங்களை இயக்குவதில் சிரமம் உள்ளது.
புதுச்சேரி:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் புதுச்சேரி அரசு சார்பில் மானிய விலையில் மளிகை பொருட்கள், பட்டாசுகள் போன்றவை விற்பனை செய்வது வழக்கம். இந்நிலையில் இந்தாண்டு பல்வேறு நிர்வாக கோளாறு காரணமாக மானிய விலையில் மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் தீபாவளி சிறப்பு அங்காடி அமைக்கவில்லை.
தற்போது கான் பெட் நிறுவனம் சார்பில் பட்டாசு விற்பனை சிறப்பு அங்காடி மட்டும் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான திறப்பு விழா தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் நடந்தது. இதில் முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு பட் டாசு சிறப்பு அங்காடியை திறந்து வைத்தார்.
மேலும் இதேபோன்று கூட்டுறவு துறையின் மார்க்கெட் சொசைட்டி சார்பில் சூப்பர் மார்க்கெட் மற்றும் பட்டாசு விற்பனை கடையை முதலமைச்சர் ரங்கசாமி திறந்து வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுச்சேரியில் கடந்த ஆட்சியில் நலிந்து போன கூட்டுறவு சங்கங்களை மேம்படுத்துவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூட்டுறவு அங்காடிக்கு ரூ.1 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. அங்காடியில் மளிகை பொருட்கள், காய்கறிகள் மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனை செய்யப்படுகிறது.
சர்க்கரை ஆலை, நெசவாளர் கூட்டுறவு சங்கங்களை இயக்குவதில் சிரமம் உள்ளது. சர்க்கரை ஆலையை தனியார் பங்களிப்புடன் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பாண்லே நிறுவனத்திற்கு 2024-25 ஆண்டில் 102 கூட்டுறவு சங்கங்களின் மூலம் பால் வழங்கிய 7,500 பயனாளிகளுக்கு ஊக்கத்தொகை தீபாவளி பண்டிகைக்கு முன்பு வழங்கப்படும். அதாவது, மொத்த மதிப்பில் ரூபாய்க்கு 5 பைசா வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும். இதனால் பாண்லே நிறுவனத்திற்கு ரூ.3 கோடி கூடுதலாக செலவாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ராகவேந்திரா நகர் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- நடேசன் நகர் கிழக்கு, மேற்கு, பாவாணர் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபடும்.
புதுச்சேரி:
புதுவை பொதுப் பணித்துறை சுகாதாரக் கோட்ட செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது
புதுவை எல்லைப் பிள்ளைச் சாவடியில் உள்ள ராகவேந்திரா நகர் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால் நாளை மறுநாள் (புதன்கிழமை) மதியம் 12 மணி முதல் 2 மணிவரை ராகவேந்திரா நகர், மாரியம்மன் நகர், பூமியான்பேட்டை, கோடிசாமி நகர், நடேசன் நகர் கிழக்கு, மேற்கு, பாவாணர் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சராசரியை விட அதிகமாக இருக்கும்.
- தென்மேற்கு பருவமழை சீசனில் கூட இயல்பைவிட அதிகமாக மழை பெய்துள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் ஆண்டு தோறும் சராசரியாக 1, 330 மி.மீ. மழை பதிவாகும்.
தென்மேற்கு பருவமழை காலத்தைவிட வடகிழக்கு பருவமழை காலத்தில் மழை பதிவு அதிகமாக இருக்கும். நடப்பு ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பதிவாகியுள்ளது. மொத்தமாக 575.3 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. கூடுதலாக 173.4 மி.மீ. மழை பெய்துள்ளது.
தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்த காலத்திலும் இயல்பை விட அதிகமாக மழை பெய்யும் என புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார்.
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சராசரியை விட அதிகமாக இருக்கும். தென்மேற்கு பருவமழை சீசனில் கூட இயல்பைவிட அதிகமாக மழை பெய்துள்ளது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கியவுடன் கன மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும். 2 முதல் 3 புயல்கள் தாக்ககூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- இந்திய மாணவர் சங்கத்தினர் கடந்த 9-ந்தேதி துணை வேந்தர் பிரகாஷ் பாபுவை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
- தரணிக்கரசு நியமிக்கப்படுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி பல்கலைக் கழகத்தின் காரைக்கால் கிளையில் படிக்கும் மாணவி ஒருவர் தனக்கு பேராசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை தருவதாக அழுத ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதற்கிடையே, புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்திலும் மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக புகார் எழுந்தது.
பல்கலைக்கழகத்தில் எழும் பாலியல் குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், சம்மந்தப்பட்ட பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பாலியல் புகார்களை விசாரிக்கும் கமிட்டியை அமைத்திட வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் கடந்த 9-ந்தேதி துணை வேந்தர் பிரகாஷ் பாபுவை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
மாணவர்களின் போராட்டம் நள்ளிரவு நீடித்ததால், காலாப்பட்டு போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை தடியடி நடத்தி 24 மாணவ-மாணவிகளை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
இச்சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசியல் கட்சியினர் மாணவர்கள் மீதான தடியடிக்கு கண்டனம் தெரிவித்தனர். அதன் பின்னர் கைது செய்யப்பட்ட மாணவ-மாணவிகள் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் எதிரொலியாக பாலியல் குற்றச்சாட்டிற்கு உள்ளான பேராசிரியர் மாதவைய்யா, பல்கலைக்கழக காரைக்கால் வளாக தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக தரணிக்கரசு நியமிக்கப்படுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
- எஸ்.எஸ் நகர் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் நாளை அப்பகுதியில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
- மதியம் 12 மணி முதல் 2 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
புதுச்சேரி:
புதுவை பொதுப்பணித்துறை சுகாதாரகோட்ட செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுவை வில்லியனுார் எஸ்.எஸ் நகர் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் நாளை (வியாழக்கிழமை) மதியம் 12 முதல் 2 மணி அப்பகுதியில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இதுபோல் 10-ந் தேதி ஆரியப்பாளையம், 11-ந் தேதி கூடப்பாக்கம், 13-ந் தேதி கூடப்பாக்கம் பேட், ஆகிய பகுதிகளில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அந்த பகுதிகளில் மேற்கண்ட தேதியில் மதியம் 12 மணி முதல் 2 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- புதுச்சேரியில் இந்திய ரிசர்வ் பட்டாலியன் படை 1 யூனிட் செயல்பட்டு வருகிறது.
- கரூர் சம்பவத்துக்குப் பிறகு அந்தக் கட்சியே கட்சி நிகழ்ச்சிகளை ஒத்தி வைத்துள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி காவல்துறை சார்பில் நடந்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது:-
புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. மேலும், சுற்றுலா பயணிகள் வருவதற்காகப் பயன்படுத்தும் வாகனங்களை நிறுத்துவதற்கான இடத்தை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளோம். மேலும் ஒரு சில சாலைகளில் ஆக்கிரமிப்பு இருக்கிறது.
பொதுப்பணித்துறை, உள்ளாட்சி துறை, போக்கு வரத்துத்துறையுடன் கலந்து பேசி ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், நகரப் பகுதி முழுவதும் சுற்றுலா வரும் 4 சக்கர வாகனங்களுக்கு அனுமதி இல்லாமல் அரசு பஸ்சில் பயணம் செய்யும் வசதியை அறிமுகம் செய்யலாமா என்றும் யோசித்து வருகிறோம்.
இது தொடர்பாக முதலமைச்சர் ரங்கசாமியுடன் விரைவில் ஆலோசனை நடத்திய பிறகு முடிவு எடுக்கப்படும். புதுச்சேரியில் இந்திய ரிசர்வ் பட்டாலியன் படை 1 யூனிட் செயல்பட்டு வருகிறது. இதை அதிகப்படுத்தும் நோக்கத்தில் மேலும் ஒரு பட்டாலியன் படையைத் தொடங்க அனுமதி அளிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதியுள்ளோம்.
ஏற்கெனவே புதுச்சேரியில் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. மேலும் ஒரு சிலர் மீது குண்டர் சட்டத்தைப் பயன்படுத்த மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்திருக்கிறோம். அவருக்குதான் அதில் முடிவு எடுக்கும் அதிகாரம் இருக்கிறது.
த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் புதுச்சேரியில் புகலிடமாக இருப்பதாகத் தகவல் எதுவும் இல்லை. மேலும் அந்தக் கட்சி ஏற்கெனவே ரோடு ஷோ நடத்த அனுமதி கேட்டிருந்தது. இப்போது கரூர் சம்பவத்துக்குப் பிறகு அந்தக் கட்சியே கட்சி நிகழ்ச்சிகளை ஒத்தி வைத்துள்ளது. மீண்டும் அனுமதி கேட்டால் அப்போது முடிவு எடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மீனவர்களால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் ஜூவாலலைதீன் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.
- 4 மீன்பிடி படகுகள் உள்ளூர் மீனவர்களால் அதே துறைமுகத்தில் பிடித்து வைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி மீனவர்களின் 4 படகுகளை விடுவிக்க கோரி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஜூவாலலைதீன் துறைமுகத்தில், புதுச்சேரி மாநிலம் காரைக்கால் கீழாகா சாகுடி பகுதியை சேர்ந்த கலைமணி மற்றும் முத்துதமிழ்செல்வன் ஆகியோருக்கு சொந்தமான படகுகள், உள்ளூர் மீனவர்களால் சிறைபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு ஜூவாலலைதீன் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.
அதேபோல் காரைக்கால் கிளிஞ்சல் மேடு பகுதியை சேர்ந்த பாலதண்டாயுதத்துக்கு சொந்தமான 2 படகுகள் என மொத்தம் 4 மீன்பிடி படகுகள் உள்ளூர் மீனவர்களால் அதே துறைமுகத்தில் பிடித்து வைக்கப்பட்டுள்ளது. எனவே பறிமுதல் செய்யப்பட்டுள்ள படகுகளை விரைந்து விடுவிப்பதற்கு ஆந்திர அரசு அதிகாரிகளுடன் பேசி உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நேற்று ஆயுத பூஜை, இன்று விஜயதசமி பண்டிகையை ஒட்டி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- அக்டோபர் 25ஆம் தேதியை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகம் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் அனைத்திற்கும் நாளை (அக்டோபர் 03) அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நேற்று ஆயுத பூஜை, இன்று விஜயதசமி பண்டிகையை ஒட்டி விடுமுறை என்பதால் நாளையும் புதுச்சேரியில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக அக்டோபர் 25ஆம் தேதியை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.






