என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • நகராட்சி ஊழியர்கள் இணைந்து சாலையோர ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றி வருகின்றனர்.
    • முதலமைச்சர் ரங்கசாமி ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை தற்காலிகமாக கைவிடும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் சாலையோர ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. சில நேரங்களில் விபத்துகளும் அரங்கேறி வருகின்றன. இதையடுத்து பொதுப்பணித்துறை, நகராட்சி ஊழியர்கள் இணைந்து சாலையோர ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றி வருகின்றனர்.

    இந்த நிலையில் புதுச்சேரி ரங்கப்பிள்ளை வீதியில் தலைமை தபால் நிலையம் முன்பு இருந்து ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது அங்கு சாலையோர நடைபாதையை ஆக்கிரமித்து வைத்திருந்த இளநீர் கடை, துணிக்கடையை அகற்ற முயற்சி செய்தனர். இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அப்போது முதலமைச்சர் ரங்கசாமி சட்டசபையில் இருந்து காரில் புறப்பட்டு அந்த வழியாக சென்றார். ரங்கபிள்ளை வீதி சந்திப்பில் வந்த போது வியாபாரிகள் முதலமைச்சர் ரங்கசாமியின் காரை முற்றுகையிட்டனர்.

    அப்போது பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை அப்புறப்படுத்த முயற்சி செய்தனர். ஆனால் முதலமைச்சர் ரங்கசாமி வியாபாரிகளை அழைத்து பேசினார்.

    அப்போது அவர்கள் தாங்கள் பல ஆண்டுகளாக இங்கு வியாபாரம் செய்து வருவதாக கூறினர். தொடர்ந்து வியாபாரம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    இதனை தொடர்ந்து முதலமைச்சர் ரங்கசாமி ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை தற்காலிகமாக கைவிடும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் அவர் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார்.

    இதனை தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஊழியர்கள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை கைவிட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • துணைநிலை ஆளுநர் மாளிக்கைக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்.
    • கடந்த 2 மாதங்களில் 6ஆவது முறையாக இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்.

    புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகைக்கு இ-மெயில் மூலம் மர்ம நபர் விடுத்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது.

    மிரட்டலை தொடர்ந்து காவல்துறை மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். துணைநிலை ஆளுநர் மாளிகைக்கு கடந்த 2 மாதங்களில் 6ஆவது முறையாக இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பெஸ்ட் புதுவை தோல்வியடைந்துவிட்டது.
    • மத்திய நிதி கமிஷனில் புதுவையை சேர்க்கவில்லை.

    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் கைலாஷ்நாதனுக்கும் முதலமைச்சர் ரங்கசாமிக்கும் இடையே மோதல் எற்பட்டிருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறினார்.

    கவர்னர், முதலமைச்சரிடையே எந்த மோதலும் இல்லை என்றும் அரசியல் காழ்புணர்ச்சியால் நாராயணசாமி உள்நோக்கத்தோடு பேசுகிறார் என அமைச்சர் நமச்சிவாயம் பதில் அளித்தார்.

    இந்த நிலையில் மது ஆலைகளுக்கு அனுமதி அளிக்காததால் முதலமைச்சர் ரங்கசாமி கவர்னர் மீது அதிருப்தியில் இருப்பதாக மீண்டும் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறினார்.

    காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    பெஸ்ட் புதுவையை உருவாக்குவோம் என பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார். ஆனால் எதையும் நடைமுறைப்படுத்தவில்லை. எங்கு பார்த்தாலும் ரெஸ்டோ பார் திறக்கப்பட்டுள்ளது. குடித்துவிட்டு கும்மாளம் போடுவதுதான் ஆன்மிகமா? ஒரு புதிய தொழிற்சாலை இல்லை, தரமான சுற்றுலா இல்லை. கலாச்சார சீரழிவுதான் நடக்கிறது.

    பெஸ்ட் புதுவை தோல்வியடைந்துவிட்டது. மத்திய நிதி கமிஷனில் புதுவையை சேர்க்கவில்லை. அனைத்து திட்டங்களும் படிப்படியாக கொண்டு வரப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி கூறுகிறார். ரேஷன்கடைகளை திறக்க முடியவில்லை குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000ம் கிடைக்கவில்லை. மக்களை ஏமாற்ற அவர் நினைக்கிறார்.

    உள் கட்டமைப்புகள் மேம்படுத்தவில்லை. முதலமைச்சர், அமைச்சர்கள், ஊழல் செய்வது குறையவில்லை. அமைச்சர்கள் பினாமி பெயரில் சொத்துக்களை வாங்கி குவிக்கின்றனர்.

    மதுபான தொழிற்சாலைகளுக்கு, அனுமதி மற்றும் தனக்கு வேண்டிய அதிகாரிகள் இடமாறுதலுக்கு அனுமதியளிக்காததால் கவர்னர் மீது முதலமைச்சர் அதிருப்தியில் உள்ளார். புதுவையில் மக்கள் விரோத ஆட்சி நடக்கிறது. இந்த அரசை மக்கள் தூக்கி எறிய வேண்டும்.

    இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

    • சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்திருந்ததாலும் சாலையின் இருபுறமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
    • வெயிலில் பொதுமக்கள் காத்திருந்ததை கண்ட முதல்-அமைச்சர் ரங்கசாமி தனது காரை சாலையின் ஓரமாக நிறுத்தும்படி கூறினார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி எளிமையான முதல்-அமைச்சர் என அனைவராலும் போற்றப்படுபவர். முன் அனுமதி இல்லாமல் அவரை எந்த நேரத்திலும் பொதுமக்கள் சந்திக்கலாம்.

    அதோடு பொது மக்களுக்கு இடையூறாக தனது காருக்கு முன்பாக பாதுகாப்பு வாகனம் செல்லக்கூடாது என உத்தரவும் பிறப்பித்துள்ளார்.

    இந்த நிலையில் புதுச்சேரி கதிர்காமம் தொகுதியில் நேற்று ரூ.2 கோடிக்கு மேல் பல்வேறு பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

    சண்முகாபுரம் கலையரங்கம் அருகே கைப்பந்து மைதானம் அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு வந்த போது விடுமுறை தினம் என்பதாலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்திருந்ததாலும் சாலையின் இருபுறமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    அந்த சமயத்தில் முதல்-அமைச்சர் வந்த வாகனம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டது. உடனே போலீசார் முதல்-அமைச்சர் வாகனம் செல்வதற்கு வழி ஏற்படுத்தி தர முயன்றனர்.

    அப்போது, வெயிலில் பொதுமக்கள் காத்திருந்ததை கண்ட முதல்-அமைச்சர் ரங்கசாமி தனது காரை சாலையின் ஓரமாக நிறுத்தும்படி கூறினார். மேலும் அருகில் பாதுகாப்புக்கு இருந்த போலீசாரை அழைத்து பொதுமக்களுக்கு இடையூறின்றி போக்குவரத்தை சீரமைக்குமாறு கூறினார்.

    மேலும் தொடர் நிகழ்ச்சி காரணமாக உணவு சாப்பிட நேரம் இல்லாததால் போக்குவரத்தை சரி செய்யும் வரை, காலை உணவை காரில் அமர்ந்தபடியே முதல்-அமைச்சர் ரங்கசாமி சாப்பிட்டார். இதனை அவ்வழியாக சென்ற பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் பார்த்து வியந்தபடி சென்றனர். 

    • கொள்ளையர்கள் 3 பேரும் 200 பவுனுக்கு மேல் நகைகளை அடகு வைத்து பணம் பெற்றது தெரிய வந்துள்ளது.
    • நகைகளை கர்நாடக போலீசார் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.

    புதுச்சேரி:

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அடுத்தடுத்து வீடுகளில் கொள்ளை சம்பவங்கள் நடந்தது.

    போலீசாரின் அதிரடி விசாரணையில், புதுச்சேரி முதலியார்பேட்டை பகுதியை சேர்ந்த ரகுராமன், அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த நட்சத்திரம் மற்றும் ஜெயசந்திரன் உள்ளிட்ட 3 பேர் இக்கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதில் ரகுராமன் உள்ளிட்ட 2 பேர் நேரடியாக கொள்ளையில் ஈடுபடுவதும், நட்சத்திரம் நகைகளை விற்க உதவி செய்து வந்துள்ளார். மேலும் கொள்ளையடித்த நகைகளை புதுச்சேரியில் உள்ள ஒரு வட்டி கடையில் அடகு வைத்து பணம் பெற்றது விசாரணையில் தெரியவந்தது.

    தீவிர விசாரணைக்குப் பின் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். ஒருவர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், ரகுராமன், ஜெயச்சந்திரன் ஆகிய 2 பேரையும் பெங்களூரு போலீசார் புதுச்சேரி அழைத்து வந்தனர்.

    புதுச்சேரி பாரதி வீதியில் உள்ள அடகு கடையில் கர்நாடக போலீசார் சோதனை நடத்தி கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது கொள்ளையர்கள் 3 பேரும் 200 பவுனுக்கு மேல் நகைகளை அடகு வைத்து பணம் பெற்றது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அந்த நகைகளை கர்நாடக போலீசார் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.

    கர்நாடக போலீசார் புதுச்சேரி அடகு கடையில் திடீர் சோதனை நடத்தியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • நாடு முழுவதும் சுமார் ரூ.100 கோடி வரை பல மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஏமாந்துள்ளனர்.
    • வழக்கில் தொடர்புடைய 4 பேரை புதுவை சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி லாஸ்பேட்டை சேர்ந்த பி.எஸ்.என்.எல் ஓய்வு பெற்ற ஊழியர் அசோகன். இவரை 2023-ம் ஆண்டு தொடர்பு கொண்ட மர்ம நபர் கிரிட்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறியதை நம்பி, ஆஷ்பே என்ற இணையதள பக்கத்தில் ரூ.92 லட்சம் முதலீடு செய்தார். அதன் மூலம் லாபத்தை சேர்த்து ரூ.2.5 கோடி மதிப்பிலான கிரிப்டோ கரன்சி இருந்தது.

    அதை விற்று பணமாக தனது வங்கி கணக்குக்கு மாற்ற அசோகன் முயற்சித்த போது, இணையதள பக்கம் முடக்கப்பட்டது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் அசோகன் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

    விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    கோவையில் தலைமை இடமாகக் கொண்டு சினிமா நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வால் உட்பட பிரபலங்கள் மூலம் 2021-ம் ஆண்டு பிரமாண்ட தொடக்க விழா நடந்துள்ளது. அடுத்த 3 மாதங்களுக்குப் பிறகு மகாபலிபுரம் சொகுசு ஓட்டலில் ஆஷ்பேவில் முதலீடு செய்த 100 நபர்களுக்கு ரூ.10 லட்சம் முதல் ஒரு கோடி வரவிலான கார்களின் முதலீடுகளுக்கு ஏற்ப பரிசாக வழங்கினர்.

    அடுத்த சில நாட்களில் மும்பை கப்பல் ஒன்றில் மிகப்பெரிய விழா ஏற்பாடு நடத்தி அதில் ஆயிரகணக்கான மக்கள் பங்கேற்க செய்து ஆஷ்பேவின் முதலீடு செய்ய நிதி திரட்டி உள்ளனர். ஆஷ்பேவில் முதலீடு செய்யும் பணத்துக்கு கிரிப்டோ கரன்சி என்ற பெயரில் டி.சி. எக்ஸ் காயின் கொடுத்து முதலீடு பணத்தை தங்களின் வங்கி கணக்குக்கு மாற்றி உள்ளனர்.

    ஆஷ்பே மூலம் பெற்ற டிசி எக்ஸ் காயின்களை விற்க முடியாமல் முதலீட்டாளர்கள் திணறிய போது ஆஷ்பே என்ற இணையதளம் பக்கம் திடீரென முடக்கப்பட்டது.

    பின்பு தொடர் விசாரணையில் புதுச்சேரியை சேர்ந்த 10-க்கு மேற்பட்டோர் இந்த ஆஷ்பேவில் முதலீடு செய்து ரூ.3 1/2 கோடி வரை இழந்தது தெரிய வந்தது. இதுபோல் நாடு முழுவதும் சுமார் ரூ.100 கோடி வரை பல மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஏமாந்துள்ளனர்.

    இந்த வழக்கில் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி மற்றும் தியாகராஜன் தலைமையிலான குழு கோயம்புத்தூர் சென்று அங்கு பதுங்கி இருந்த ஜெயின் மற்றும் அரவிந்த்குமார், கர்நாடகா மாநிலம் தும்கூரில் மறைந்திருந்த தாமோதரன் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    வழக்கில் மூளையாக செயல்பட்ட பாபு, நூர் முகமது, சந்தானம், நித்தியப்பன் உட்பட 5 பேரை தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்த நிலையில் மோசடிக்கு மூளையாக செயல்பட்ட கிரிப்டோ கரன்சி நிர்வாக இயக்குனர் பாபு என்ற சையது உஸ்மானை கோவையில் புதுவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

    அவரிடமிருந்து ரூ.1 1/2 கோடி மதிப்புள்ள சொகுசு காரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். வழக்கில் தொடர்புடைய 4 பேரை புதுவை சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

    • புதுச்சேரியில் அனைத்து அரசு பள்ளிகளும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்துக்கு மாறியுள்ளன.
    • காரைக்காலில் 476 மாணவர்கள், 540 மாணவிகள் என மொத்தம் ஆயிரத்து 16 பேர் தேர்வு எழுதினர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் தமிழ்நாடு பாடத்திட்டத்தின் கீழ் கடந்த மார்ச் மாதம் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்தது.

    புதுச்சேரியில் அனைத்து அரசு பள்ளிகளும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்துக்கு மாறியுள்ளன. இதனால் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் தமிழ்நாடு பாடத்திட்டத்தின்படி 10-ம் வகுப்பு தேர்வை நடத்தினர்.

    இந்த தேர்வில் புதுச்சேரி, காரைக்காலை சேர்ந்த 4 ஆயிரத்து 290 மாணவர்கள், 3 ஆயிரத்து 977 மாணவிகள் என மொத்தம் 8 ஆயிரத்து 267 மாணவர்கள் தேர்வு எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.

    இதில் தனியார் பள்ளிகளில் படித்த 4 ஆயிரத்து 109 மாணவர்கள், 3 ஆயிரத்து 902 மாணவிகள் என மொத்தம் 8 ஆயிரத்து 11 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். புதுச்சேரி, காரைக்காலில் தேர்ச்சி சதவீதம் 96.90 சதவீதமாகும்.

    புதுச்சேரியில் மட்டும் 3 ஆயிரத்து 814 மாணவர்கள், 3 ஆயிரத்து 437 மாணவிகள் என 7ஆயிரத்து 251 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 3 ஆயிரத்து 674 மாணவர்கள், 3 ஆயிரத்து 386 மாணவிகள் என மொத்தம் 7 ஆயிரத்து 60 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் தேர்ச்சி சதவீதம் 97.37 ஆகும்.

    காரைக்கால் மாவட்டத்தில் 476 மாணவர்கள், 540 மாணவிகள் என மொத்தம் ஆயிரத்து 16 பேர் தேர்வு எழுதினர். இதில் 435 மாணவர்கள், 516 மாணவிகள் என 951 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் தேர்ச்சி சதவீதம் 93.60 ஆகும்.

    • புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து கேட்டு மத்திய அரசை வலியுறுத்தி வருகிற 27-ந்தேதி டெல்லியில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
    • பேனாவை வாங்கிய முதல்-அமைச்சர் ரங்கசாமி வித்தியாசமாக இருந்ததை பார்த்து, எந்த ஊர் பேனா? என கேட்டார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து கோரி சட்டசபையில் 16 முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து மத்திய அரசால் வழங்கப்படவில்லை.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் வேண்டும் என்றால் மாநில அந்தஸ்து பெற வேண்டும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி அரசு நிகழ்ச்சிகளிலும் வலியுறுத்தி வருகிறார்.

    இந்த நிலையில் உருளையன்பேட்டை தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு தலைமையில் பொது நல அமைப்புகள் புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து கேட்டு மத்திய அரசை வலியுறுத்தி வருகிற 27-ந்தேதி டெல்லியில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

    இதற்கு முன்பு புதுச்சேரி, காரைக்கால் மாவட்ட மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி ஒரு லட்சம் கையெழுத்துகளை பெற்று மத்திய அரசிடம் வழங்க முடிவு செய்துள்ளனர்.

    இதற்கான கையெழுத்து இயக்கத்தை சட்டசபையில் நேரு எம்.எல்.ஏ. தொடங்கினார்.

    முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் முதல் கையெழுத்து பெற பொதுநல அமைப்பினருடன் சட்டசபையில் வந்து சந்தித்தார். முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் அரசு கோப்புகளில் கையெழுத்திடும் பச்சை மை பேனா மட்டுமே இருந்தது.

    இதனால் அங்கு இருந்தவர்களிடம் நீல மை பேனா தரும்படி கேட்டார். அருகில் இருந்த வக்கீல் ராம் முனுசாமி தனது பேனாவை முதல்-அமைச்சரிடம் கொடுத்தார். பேனாவை வாங்கிய முதல்-அமைச்சர் ரங்கசாமி வித்தியாசமாக இருந்ததை பார்த்து, எந்த ஊர் பேனா? என கேட்டார்.

    அது ஜெர்மன் நாட்டு பேனா என்றும், விலை ரூ. 1 லட்சத்து 33 ஆயிரத்து 600 என்றும் அவர் தெரிவித்தார். முதல்-அமைச்சர் ரங்கசாமி ஒரு லட்சம் கையெழுத்து இயக்கத்துக்கு ரூ. 1¼ லட்சம் மதிப்புள்ள பேனாவா? என சிரித்த படியே கூறி முதல் கையெழுத்திட்டார். 

    • மாநிலத்தின் தேர்ச்சி சதவீத விபரத்தை தொகுத்து மாலை வெளியிடுவதாக கல்வித்துறை கூறியது.
    • இரவு 7.40 மணிக்கு நடுரோட்டில் வைத்து தேர்வு முடிவுகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி வெளியிட்டார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அரசு பள்ளிகள் கடந்த 2024-25-ம் கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்திற்கு மாற்றப்பட்டது.

    இதனால் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் முதல் முறையாக பொதுத்தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகளை பெற்றோர் உட்பட அனைத்து தரப்பினரும் ஆவலுடன் எதிர்பார்த்தனர். மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் நேற்று காலை அடுத்தடுத்து பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவுகளை வெளியிட்டது.

    தேர்வு முடிவுகளை மாணவர்கள் தனிப்பட்ட முறையில் தெரிந்து கொண்டனர். அதே வேளையில் மாநிலத்தின் தேர்ச்சி சதவீத விபரத்தை தொகுத்து மாலை வெளியிடுவதாக கல்வித்துறை கூறியது. நீண்ட இழுபறிக்கு பின் இந்திரா நகர் அரசு கல்லூரி ஆண்டு விழா முடித்துவிட்டு வெளியே வந்த முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் தேர்வு முடிவுகளை கல்வித்துறை அதிகாரிகள் வழங்கினர்.

    இதனையடுத்து இரவு 7.40 மணிக்கு நடுரோட்டில் வைத்து தேர்வு முடிவுகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி வெளியிட்டார். பல்வேறு தரப்பினரும் ஆவலுடன் எதிர்பார்த்த சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவை 8 மணி நேரத்துக்கு பிறகு இரவில், அதுவும் நடுரோட்டில் வைத்து வெளியிட்ட சம்பவம் கல்விதுறையின் செயல்பாட்டை கேள்விகுறியாக்கி உள்ளது.

    • மீனவர்களுக்கான திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்படும்.
    • சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    புதுச்சேரியில் தேசிய ஜனநாயக ஆட்சி பொறுப்பேற்றது முதல் பல திட்டங்களை வரிசையாக அறிவித்து ஒவ்வொன்றாக செயல்படுத்தி வருகிறோம். அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் இந்த அரசு செயல்படுத்தும்.

    அதன்படி சமீபத்தில் அறிவித்த மீனவர்களுக்கான திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்படும். ரேசன் கார்டிற்கு அரிசி வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் கோதுமையும் வழங்கப்படும்.

    புதுச்சேரிக்கு வருகை தந்த மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா மரியாதை நிமித்தமாக என்னை சந்தித்தார். அப்போது அவரிடம் மாநில அரசுக்கு நிதி, நிர்வாக விவகாரங்களில் மத்திய அரசின் உதவியை கோரினேன். என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் கொள்கையான மாநில அந்தஸ்து விவகாரத்தை எங்கள் அரசு தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம்.

    இப்பொழுதும் வலியுறுத்தினேன். தொடர்ந்து வலியுறுத்துவோம். இது தொடர்பாக சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். நம்பிக்கைத் தான் வாழ்க்கை. அதே நம்பிக்கையில் தான் மாநில அந்தஸ்திற்கு மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். கிடைக்கும் என நம்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தும் படி மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
    • புதுச்சேரி விமான நிலையத்திற்கும் எச்சரிக்கை வந்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு, ஐதராபாத் நகரங்களுக்கு தினந்தோறும் விமானம் இயக்கப்பட்டு வருகிறது.

    தினமும் காலை 11.10 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்படும் விமானம் மதியம் 12.25 மணிக்கு புதுச்சேரி வந்தடைகிறது.

    மதியம் 12.45 மணிக்கு புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு மதியம் 2.30 மணிக்கு ஐதராபாத் சென்றடைகிறது. அங்கிருந்து 3.05 மணிக்கு புறப்பட்டு, மாலை 4.50 மணிக்கு புதுச்சேரி வந்தடைகிறது.

    புதுவையில் இருந்து 5.10 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 6.35 மணிக்கு பெங்களூரு சென்றடைகிறது. இதில் 74 பேர் பயணம் செய்ய முடியும். இதற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.

    இந்த நிலையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதட்டம் நீடிக்கும் நிலையில் நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தும் படி மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதே போல் புதுச்சேரி விமான நிலையத்திற்கும் எச்சரிக்கை வந்துள்ளது.

    மத்திய அரசு விடுத்துள்ள எச்சரிக்கையை தொடர்ந்து புதுச்சேரி விமான நிலையத்திற்கு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று போலீஸ் டி.ஜி.பி.யிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் புதுச்சேரி விமான நிலையத்திற்கு 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய போலீசார் கொண்ட கூடுதல் பாதுகாப்பு போடப்படுகிறது.

    • நள்ளிரவில் பரிவதவர்த்தினிக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
    • பரிவதவர்த்தினி புதுச்சேரி தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.

    மேலசொக்கநாதபுரம்:

    புதுச்சேரி மாநிலம் தவளைக்குப்பம் தானம்பாளையம் பகுதியை சேர்ந்த இளங்கோ-பரிமளம் தம்பதியின் மகள் பரிவதவர்த்தினி (வயது 15), மகன் விஷ்வா உள்பட 8 பேர் கொண்ட குழுவினர் மூணாறுக்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் காலனி செல்லும் ரோட்டில் தனியார் விடுதியில் தங்கியிருந்தனர். இரவு நேரத்தில் அங்குள்ள ஒரு ஓட்டலில் அவர்கள் உணவு சாப்பிட்டு விட்டு தூங்கச் சென்றனர். அப்போது நள்ளிரவு 11.30 மணியளவில் பரிவதவர்த்தினிக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

    ஆனால் பெற்றோர் இதனை பெரிதுபடுத்தாமல் தைலம் தடவிவிட்டு தூங்கி விட்டனர். காலையில் எழுந்து பார்த்தபோது பரிவதவர்த்தினி பேச்சு மூச்சற்ற நிலையில் இருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவரை அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இறந்த பரிவதவர்த்தினி புதுச்சேரி தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். தேர்வு எழுதிவிட்டு விடுமுறைக்காக தனது குடும்பத்துடன் மூணாறுக்கு சுற்றுலா வந்தபோது உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து மூணாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×