என் மலர்
நீங்கள் தேடியது "புதுச்சேரி மழை"
- தொடர் மழையின் காரணமாக பல ஏக்கர் பரப்பளவில் நடப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
- காராமணி உள்ளிட்ட பயிர் வகைகளை தொடர் மழையின் காரணமாக பயிரிட முடியாமல் விவசாயிகள் உள்ளனர்.
புதுச்சேரி:
தொடர்மழையின் காரணமாக வீடூர் அணை திறக்கப்பட்டதால் புதுச்சேரி சங்கராபரணி ஆற்றில் நீர்வரத்து மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இதன் காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் புதுச்சேரி கூனிச்சம்பட்டு-மணலிப்பட்டு இடையேயான படுகை அணை, செட்டிப்பட்டு படுகை அணை, கைக்கிலப் பட்டு படுகை அணை உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றின் இரு கரையினையும் தொட்ட வாறு மழைநீர் ஆர்ப்பரித்து செல்கிறது.
இந்நிலையில் தொடர் மழையின் காரணமாக பல ஏக்கர் பரப்பளவில் நடப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
சென்ற மழையின் போது பாதிக்கப்பட்ட நெல் பயிர்களில் மழை விட்டதால் சிலர் அறுவடை செய்ய தயாராக இருந்தனர். ஆனால் தற்போது மீண்டும் மழை பெய்வதால் நெல் பயிர்கள் முழுவதும் அழுகி வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் வழக்கமாக கார்த்திகை மாதத்தில் நடப்படும் உளுந்து, காராமணி உள்ளிட்ட பயிர் வகைகளை தொடர் மழையின் காரணமாக பயிரிட முடியாமல் விவசாயிகள் உள்ளனர். கார்த்திகை மாதம் முடிய இன்னும் 2 நாட்களே உள்ளதால் பட்டம் தவறி பயிர் இட்டால் விளைச்சல் கிடைக்காது என்பதால் பயிரிட முடியாமலும் சில விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
- வெள்ள சேதத்தை மதிப்பிட நேற்று முன்தினம் மத்திய குழுவினர் வந்து பார்வையிட்டு சென்றனர்.
- ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 5 நாட்களுக்கு புதுவையில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
புதுச்சேரி:
கடந்த நவம்பர் 30-ந்தேதி புதுச்சேரியை தாக்கிய ஃபெஞ்சல் புயல் கடும் சேதத்தை ஏற்படுத்தியது.
வரலாறு காணாத வகையில் ஒரே நாளில் 50 செ.மீ. மழை கொட்டியது. புதுவை நகர், புறநகர், கிராமபுறங்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது. 500-க்கும் மேற்பட்ட மரங்கள், மின்கம்பங்கள், மின் மாற்றிகள் சாய்ந்தது. துணை மின்நிலையங்களில் வெள்ளம் புகுந்தது.
ஆயிரக்கணக்கான ஹெக்டேர் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியது. அனைத்து கால்வாய்கள், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. 50கி.மீ.க்கும் அதிகமான சாலைகள் சேதமடைந்துள்ளது.
வெள்ள சேதத்தை மதிப்பிட நேற்று முன்தினம் மத்திய குழுவினர் வந்து பார்வையிட்டு சென்றனர். நகர பகுதி ஓரிருநாளில் இயல்பு நிலைக்கு திரும்பியது. ஆனால் கிராமப்புறங்களில் சாத்தனூர், வீடூர் அணை திறப்பால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் மீளவில்லை.
இந்த நிலையில் மீண்டும் வங்க கடலில் ஏற்பட்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 5 நாட்களுக்கு புதுவையில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நேற்றைய தினமே வானம் கருமேகங்களுடன் காணப்பட்டது. ஆனால் மழை பெய்யவில்லை.
இந்த நிலையில் இன்று அதிகாலை மேகங்கள் திரண்டு வானம் இருண்டு காணப்பட்டது. காலை 7.30 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. சுமார் அரைமணி நேரத்துக்கும் மேல் கனமழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்தவண்ணம் உள்ளது.
இதனால் மீண்டும் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது.
கிருஷ்ணா நகர், வெங்கட்டா நகர், ரெயின்போ நகர் பகுதிகளில் ஏற்கனவே பெய்த புயல் மழையில் தேங்கியிருந்த வெள்ளம் வடிந்திருந்த நிலையில் மீண்டும் இன்று பெய்து வரும் மழையால் தண்ணீர் தேங்கி வருகிறது.
இதே போல் தற்காலிக பஸ் நிலையத்திலும் மழை நீர் தேங்கி சேறும் சகதியுமாக காணப்படுகிறது. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.
இதனிடையே புதுவை மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் குலோத்துங்கன் தலைமையில் நடந்தது. சப்-கலெக்டர்கள் சோமசேகர் அப்பாராவ், இசிட்டா ரதி, அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் பொதுப்பணித்துறை மூலம் தேவையான இடங்களில் அதிகளவு மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைக்க வேண்டும். ஜே.சி.பி. எந்திரம், மோட்டார் பம்புகளை தயார்நிலையில் வைக்க வேண்டும். பேரிடர் காலத்தில் அதிகாரிகள் விரைவாக பணியாற்ற வேண்டும்.
தன்னார்வலர்கள் மூலம் பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி உணவு வழங்க வேண்டும். தாழ்வான பகுதிகள் அனைத்தும் அதிகாரிகளின் கண்காணிப்பில் இருக்க வேண்டும். அணைகள் திறக்கப்படும்போது முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டும். தாழ்வான பகுதியில் வசிப்போரை பாதுகாப்பாக தங்க வைக்க வேண்டும்.
தாசில்தார்களுக்கு வயர்லெஸ் வழங்கப்படும். மழைக்காலங்களில் அதிகாரிகள் அதை பயன்படுத்தி ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி கடலோர பகுதியில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் ஆழ்கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனடியாக கரைக்கு வரவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
- புதுச்சேரியில் மழை வெள்ளம் பாதிப்பு காரணமாக, முகாமாக மாற்றப்பட்டுள்ள பள்ளிகளுக்கு விடுமுறை.
- அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை விடுத்து பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
ஃபெஞ்சல் புயலால் புதுச்சேரியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு கடந்த 27-ந்தேதி முதல் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
ஒரு வார கால விடுமுறைக்கு பிறகு இன்று (புதன்கிழமை) பள்ளி மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டது. மாணவர்கள் உற்சாகத்தோடு பள்ளிக்கு வந்தனர்.
அதேநேரத்தில் தண்ணீர் தேங்கிய, முகாம்களாக மாறிய தவளக்குப்பம், காக்காயன்தோப்பு, மூலகுளம், கூனிச்சம்பட்டு, கரையாம்புத்தூர், சின்ன கரையாம்புத்தூர், கடுவனூர், கிருஷ்ணாபுரம், மணமேடு ஆகிய 9 அரசு தொடக்கப்பள்ளிகள், பண்டசோழநல்லூர், மணலிப்பட்டு, பூரணாங்குப்பம், டி.என்.பாளையம், பனையடிக்குப்பம் அரசு நடுநிலை பள்ளிகள், உறுவையாறு, மங்கலம், திருக்கனூர், பனித்திட்டு, அரசு உயர்நிலைப்பள்ளிகள், கரையாம்புத்தூர் அரசு மேல்நிலை பள்ளி, முத்தியால்பேட்டை சின்னாத்தா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கூனிச்சம்பேட் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 21 பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
மேலும் தென்பெண்னை ஆற்றின் வெள்ளநீர் சூழ்ந்துள்ள பாகூர் கொம்யூனில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
இந்நிலையில், புதுச்சேரியில் மழை வெள்ளம் பாதிப்பு காரணமாக, முகாமாக மாற்றப்பட்டுள்ள குறிப்பிட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை (டிச.05) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தவளக்குப்பம், காக்காயன்தோப்பு, கூனிச்சம்பட்டு, கரையாம்புத்தூர், சின்ன கரையாம்புத்தூர், கடுவனூர், கிருஷ்ணாபுரம், மணமேடு, திருக்கனூர், செட்டிபட்டு, பூரணாங்குப்பம், டி.என்.பாளையம், பனையடிக்குப்பம், பனித்திட்டு, நத்தமேடு, பாகூர் கொம்பூனில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை விடுத்து பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
- சங்கராபரணி ஆற்றின் கரையோரம் அமைக்கப்பட்டிருந்த 3 கோழிப்பண்ணைகள் நீரில் மூழ்கியது.
- சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
புதுச்சேரி:
புதுச்சேரியை ஃபெஞ்சல் புயல் தாக்கி கோர தாண்ட வம் ஆடியது.
சூறை காற்றுடன் வரலாறு காணாத வகையில் ஒரே நாளில் 50 செ.மீ. கனமழை பெய்ததால் புதுச்சேரி நகரம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் உள்ள சாலைகள், வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. ஆயிரக்கணக்கான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. மறுநாள் மழை பெய்யாததால் தேங்கிய நீர் நகர பகுதியில் வடிய தொடங்கியது.
நேற்று முதல் நகர பகுதியில் இயல்பு வாழ்க்கை திரும்ப தொடங்கியது. அதே நேரத்தில் கிராமப்பகுதிகளில் வயல்வெளி, வீடுகளில் புகுந்த மழைநீர் வெளியேறவில்லை. இதை வெளியேற்றும் பணி நடந்து வந்தது. இதனிடையே புயல் புதுச்சேரியை கடந்து தமிழகத்தின் அண்டை மாவட்டங்களில் நுழைந்தது. செல்லும் இடமெல்லாம் 50 செ.மீ. மழையை கொட்டியபடி சென்றது.
இதனால் தமிழகத்தில் உள்ள வீடூர், சாத்தனூர் அணைகள் நிரம்பியது. இந்த அணைகளை திறந்துள்ளனர். 2 அணைகளில் இருந்தும் பல ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. வீடூர் அணை வெள்ளம் புதுச்சேரி சங்கராபரணி ஆற்றின் வழியாகவும், சாத்தனூர் அணை வெள்ளம் புதுச்சேரி தென்பெண்ணை ஆற்று வழியாகவும் கடலில் கலக்கும்.
திடீரென 2 அணைகளிலும் பல ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்து விட்டதால் ஆற்றின் இருபுறமும் உள்ள கரையோர கிராமங்களில் நீர் புகுந்தது. தென்பெண்ணை ஆற்றின் வெள்ளத்தால் புதுச்சேரி, கடலூர் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் தண்ணீரில் மூழ்கி தத்தளித்து வருகிறது. மழை நின்றாலும், அணை திறப்பால் புதுச்சேரி கிராம மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகின்றனர்.
தென்பெண்ணையாற்று வெள்ளத்தால் புதுச்சேரியின் பாகூர், இருளஞ்சந்தை, குருவிநத்தம், சோரியாங்குப்பம், கொமந்தான்மேடு, ஆராய்ச்சிக்குப்பம் கிராமங்களை சேர்ந்த 5 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இவர்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம், உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். தீயணைப்பு வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு படை, போலீசார், இளைஞர்கள் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு பாதுகாப்பாக தங்க வைத்தனர்.
மீட்பு பணிகளை செந்தில் குமார் எம்.எல்.ஏ. பார்வையிட்டு உணவு பொருட்களை வழங்கினார். பாகூர் ஏரிக்கு அதிக நீர் வருவதால் உடையும் அபாயம் நிலவுகிறது. புதுச்சேரி- கடலூர் சாலையில் கங்கணாங்குப்பத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, நாகை புறவழிச்சாலை வழியாக திருப்பிவிடப்பட்டது.
பாகூர் பகுதி வெள்ள பாதிப்புகளை கவர்னர் கைலாஷ்நாதன், முதல்-அமைச்சர் ரங்கசாமி, பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், கலெக்டர் குலோத்துங்கன் ஆகியோர் தனித்தனியே ஆய்வு செய்து ஆறுதல் கூறினர்.
சங்கராபரணி ஆற்றின் வெள்ளப்பெருக்கால் மணலிப்பட்டு, கூனிச்சம் பட்டு கிராமங்களுக்கு இடையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. கொடுக்கூர், திருவக்கரை செல்லும் சாலையிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
சங்கராபரணி ஆற்றின் கரையோரம் அமைக்கப்பட்டிருந்த 3 கோழிப்பண்ணைகள் நீரில் மூழ்கியது. சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
அணைகள் திறப்பு குறித்து புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
52 ஆண்டுக்கு பின் தென்பெண்ணை ஆற்றில் 2 லட்சம் கன அடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாத்தனூர் அணையிலிருந்து வினாடிக்கு 76 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்தாலும், பெண்ணையாறு நீர்பிடிப்பு பகுதியிலிருந்து மேலும் ஒரு லட்சத்து 24 ஆயிரம் கன அடி தண்ணீர் என மொத்தமாக வினாடிக்கு 2 லட்சம் கனஅடி தண்ணீர் பெண்ணையாறில் வருகிறது.
இதனால், புதுச்சேரி கிராமப்புற பகுதியான கொமந்தான்மேடு, பெரிய ஆராய்ச்சிக்குப்பம், மணமேடு, கரையாம்புத்தூர், கடுவனூர், பாகூர், பரிக்கல் பட்டு, சோரியாங்குப்பம், குருவிநத்தம், ஆகிய பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது.
இக்கிராமங்களில் தாழ்வான பகுதியில் உள்ள மக்களை அரசுக்கு சொந்தமான கட்டடங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நீர் பிடிப்பு பகுதிகளில் தற்போது மழை குறைந்து இருப்பதால் ஆற்றில் செல்லும் தண்ணீர் குறைய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஃபெஞ்சல் புயல் முன்னெச்சரிக்கையாக கடந்த 27-ந்தேதி முதல் புதுச்சேரி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், இன்று 3-ந்தேதி பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்தார்.
பின்னர் முதல்-அமைச்சருடன் அவர் தீவிர ஆலோசனை நடத்தினார். வீடூர், சாத்தனூர், அணைகள் திறப்பால் கிராமப்புற பகுதிகளில் வெள்ளப்பெருக்கு அதிகமாக காணப்படுவதால் பாதுகாப்பு கருதி, புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று 3-ந்தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக முதல்-அமைச்சர் ரங்கசாமி, கல்வி அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் அறிவித்தனர்.
- புயல் எச்சரிக்கை காரணமாக பாதுகாப்பு கருதி, புதுவை கடற்கரை சாலை நேற்று இரவு முதல் மூடப்பட்டுள்ளது.
- புயலை எதிர்கொள்ள அரசு துறைகள் உஷார்படுத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
புதுச்சேரி:
தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெஞ்சல் புயலாக உருவெடுதுள்ளது.
இந்த புயல் இன்று மாலையில் புதுவைக்கும், சென்னைக்கும் இடையே மகாபலிபுரம், மரக்காணம் பகுதியில் கரையை கடக்கலாம் எனவும், இதனால் சூறை காற்றுடன் கனமழை பெய்யும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
புயல் காரணமாக புதுவை கடலில் அலைகளின் சீற்றம் அதிகமாக உள்ளது. 6 அடிக்கு மேல் அலைகள் எழும்பின. 4 நாட்களுக்கும் மேலாக மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை நீடிக்கிறது.
ஆழ்கடல் விசைப் படகுகள் அனைத்தும் தேங்காய்திட்டு துறை முகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மீனவ கிராமங்களில் கடற்கரையில் நிறுத்தப்படும் படகுகள் கிரேன் மூலம் கரைக்கு ஏற்றப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
புயல் எச்சரிக்கை காரணமாக பாதுகாப்பு கருதி, புதுவை கடற்கரை சாலை நேற்று இரவு முதல் மூடப்பட்டுள்ளது. இன்று காலையில் கடற்கரை சாலையில் நடைபயிற்சிக்காக வந்தவர்களை போலீசார் அனுமதிக்கவில்லை. அவர்களையும், கடற்கரையை சுற்றி பார்க்க வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களையும் தடுத்து நிறுத்தி, போலீசார் திருப்பி அனுப்பினர்.
பாண்டி மெரீனா கடற்கரை செல்லவும் தடை விதித்த போலீசார் தடுப்புகளை வைத்து பாதையை மூடினர். நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படகு குழாம், ஊசுட்டேரி படகு குழாம் உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் மூடப்பட்டுள்ளது.
பெஞ்சல் புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் சூறை காற்று வீசுவதோடு, 15 செ.மீ.க்கு மேல் கனமழையும் பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புதுவை மக்கள் அனைவரும் அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைத்து கொள்ளும்படியும் வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
புதுவையில் புயல் நிலவரம், கரையை கடக்கும் நேரம் குறித்து பொதுமக்கள் பாதுகாப்புக்காக அனைவருக்கும் செல்போனில் ஒரே நேரத்தில் எஸ்.எம்.எஸ் அனுப்பவும் பேரிடர் மேலாண்மை துறை திட்டமிட்டுள்ளது. புயலை எதிர்கொள்ள அரசு துறைகள் உஷார்படுத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
மேலும் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு எடுத்துள்ளது. தாழ்வான பகுதியில் குடியிருப்போரை தங்க வைக்க புதுவையில் 208 நிவாரண முகாம்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதில் 121 முகாம்கள் பொதுமக்கள் தங்குவதற்காக தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது. அங்கு வருபவர்களுக்கு சுத்தமான குடிநீர், கழிப்பறை வசதி, பிரட், பால், உணவு வழங்கப்படுகிறது. புயல் பாதிப்புக்கு ஏற்ப மற்ற நிவாரண முகாம்களை திறக்கப்படும்.
தாழ்வான பகுதிகள் மற்றும் தண்ணீர் தேங்கும் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் நிவாரண முகாம்களுக்கு வரும்படி வருவாய்த்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
கடந்த 2 நாட்களில் 13 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக பல்வேறு துறைகள் அடங்கிய பேரிடர் மீட்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த குழுவில் இடம் பெற்றுள்ள 400 பேர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளில் இரவு, பகலாக செய்து வருகின்றனர். இந்த பணிகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி, கலெக்டர் குலோத்துங்கன் ஆகியோர் ஆய்வு செய்து பல்வேறு ஆலோசனைகளையும், உத்தரவுகளையும் வழங்கியுள்ளனர்.
புதுவையில் கடற்கரையை புயல் நெருங்கி வருவதை எச்சரிக்கும் வகையில் 7-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புதுவையில் இன்றுடன் தொடர்ந்து 4-வது நாளாக அரசு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுவைக்கு ஏற்கனவே ஒரு தேசிய பேரிடர் மீட்பு குழு வரவழைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கூடுதலாக மேலும் ஒரு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் அரக்கோணத்திலிருந்து புதுவைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் புதுவை போலீசார், வருவாய்த் துறையினருடன் இணைந்து மீட்பு நடவடிக்கையில் இறங்க தயார் நிலையில் உள்ளனர்.
புயலை எதிர்கொள்ள நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து, பொதுப்பணித்துறை ஊழியர்கள் தயாராக உள்ளனர். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மருத்துவர்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவசர தொலைபேசி எண்களான 112 மற்றும் 1077, வாட்ஸ்அப் எண் 94889 81070 ஆகியவற்றில் பொதுமக்கள் புயல் பாதிப்பு, மரங்கள் விழுதல், மின்சாரம் துண்டிப்பு உட்பட பிரச்சனைகள் குறித்து 24 மணி நேரமும் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புதுவை அரசின் மீன்வளத்துறை சார்பில் 50 படகுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கினால் அதை வெளியேற்ற 60 மோட்டார்களை பொதுப்பணித்துறை தயார் நிலையில் வைத்துள்ளனர். காவல்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, மின்துறை அதிகாரிகள், பிற அரசு துறை ஊழியர்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளனர்.
குடிமைப்பொருள் வழங்கல் துறை மூலம் ஆயிரக்கணக்கான பிரட் பாக்கெட், பால் விநியோகம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சூறை காற்றால் அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்க நகரம் முழுவதும் வைக்கப்பட்டிருந்த பேனர்களை அதிகாரிகள் அப்புறப்படுத்தியுள்ளனர்.
பல திரைப்படங்களில் இடம்பெற்ற புதுவை பழைய துறைமுக பாலம் 2022-ம் ஆண்டு இடிந்தது. புயலின் கடல் அலைகள் சீற்றத்தால் இந்த பாலம் முழுமையாக இடிந்து விழும் நிலை உருவாகியுள்ளது. புதுவை கடற்கரை சாலைக்கு நாளை காலை 10 மணி வரை பொதுமக்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
சீனியர் போலீஸ் சூப்பிரெண்டு கலைவாணன் தலைமையில் போலீசார் கடற்கரை சாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். புதுவை முழுவதும் முக்கிய சந்திப்புகளில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். பொதுமக்களுக்கு தேவையான உதவிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பாதுகாப்பு பணியில் இவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இந்த நிலையில் புதுவையில் இன்று அதிகாலை முதல் காற்றின் வேகம் படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. சூறை காற்றுடன் மழை பெய்ய தொடங்கியுள்ளது. வானம் இருண்டு கருமேகங்களுடன் திரண்டு காணப்படுகிறது. புயல் எச்சரிக்கை, பள்ளிகள், அரசு அலுவலகங்கள் விடுமுறையால் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் முடங்கினர்.
இதனால் சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு இருள் சூழ்ந்து இருந்ததால் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரியவிட்ட படி வாகன ஓட்டிகள் சென்றனர். சூறைகாற்று கடும் குளிருடன் வீசுவதால், ஸ்வெட்டர், ஜெர்கின் போன்றவற்றை பொது மக்கள் அணிந்திருந்தனர்.
புயல் எச்சரிக்கை காரணமாக பல பகுதியில் பொதுமக்கள் மெழுகுவர்த்தி, உணவுப் பொருட்களை வாங்கி வைத்தனர். வீடுகளில் தண்ணீரையும் சேமித்து வைத்துள்ளனர். மின்சாரம் தடைபடலாம் என்பதால் விளக்குகள், செல்போன்களுக்கு சார்ஜ் ஏற்றி வைத்துள்ளனர்.
புதுவையை எப்போது புயல் கடக்கும்? பாதிப்புகள் ஏதும் ஏற்படுமா? என வானிலை மையத்தின் அறிவிப்புகளை தொடர்ந்து மக்கள் கவனித்து வருகின்றனர். அடுத்தடுத்து வரும் புயல் எச்சரிக்கை அறிவிப்புகள் புதுவை மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
- கனமழை எச்சரிக்கை காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
- மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.
புதுச்சேரி:
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.
இதனால் தமிழகத்தின் வட மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகம், தெற்கு ஆந்திரா கடற்கரை பகுதியில் புதுச்சேரி-நெல்லூர் இடையே நாளை அதிகாலை கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனால் இன்று புதுச்சேரிக்கு கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மழையை எதிர்கொள்ள அரசு துறைகள் அனைத்தும் முடுக்கி விடப்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்படும் மக்களை தங்க வைக்க நிவாரண முகாம்கள், உணவு ஆகியவற்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மழை பாதிப்புகளை உடனுக்குடன் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளது. அரசு துறைகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் தலா 30 பேர் கொண்ட 2 தேசிய பேரிடர் மீட்புக்குழு தயார் நிலையில் உள்ளது. நேற்று மதியம் 12 மணி முதல் புதுச்சேரியில் மழை பெய்ய தொடங்கியது.
இந்த மழை இரவு வரை தொடர்ந்தது. தொடர் மழையால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீடுகளுக்குள் முடங்கினர். பள்ளி, கல்லூரிகளுக்கு 2-வது நாளாக இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து வெறிச்சோடியது.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் மழை காரணமாக வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பண்டிகைக்காக சாலையோரங்களில் கடைகளை வைக்க முடியாமல் வியாபாரிகள் அவதிப்படுகின்றனர்.
கனமழை எச்சரிக்கை காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. கடலில் அலைகள் சீற்றத்துடன் காணப்படுகிறது.
இந்நிலையில் இன்று அதிகாலை முதல் புதுச்சேரியில் மழை இல்லை. ஆனால் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. எப்போது வேண்டுமனாலும் மழை பெய்யலாம் என்ற சூழல் நிலவுகிறது.
புதுவை துறைமுகத்தில் 3-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.
- பாகூர், காலாப்பட்டு, தவளக்குப்பம், அரியாங்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை தொடர்கிறது.
- ஏற்கனவே மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், கேரளா மற்றும் லட்சத்தீவுகளில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் தொடந்து மிதமான மழை பெய்து வருகிறது. பாகூர், காலாப்பட்டு, தவளக்குப்பம், அரியாங்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை தொடர்கிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மழை காரணமாக புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்திற்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.