என் மலர்
புதுச்சேரி

3 மணி நேரத்தில் புதுச்சேரியில் 10 செ.மீ. கொட்டி தீர்த்த கனமழை
- தாழ்வான குடியிருப்பு பகுதிகளிலும் மழை நீர் சூழ்ந்ததால் பொதுமக்களும் கடுமையான சிரமத்திற்கு ஆளாகினார்கள்.
- ஒரு சில இடங்களில் மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் கோடை காலத்திற்கு பின்னும், வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
குறிப்பாக கடந்த மாதம் மட்டும் 10 நாட்களுக்கும் மேலாக 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தி வந்தது. இதனால் மக்கள் மிகுந்த அவதிகுள்ளாகி வந்தனர்.
இந்த நிலையில் மேற்கு திசை காற்றின் காரணமாக புதுச்சேரியில் வருகிற 7-ந்தேதி வரை மிதமான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
அதன்படி புதுச்சேரியில் நேற்று இரவு 8.30 மணிக்கு மேல் கனமழை பெய்யத் தொடங்கியது.
சுமார் 3 மணி நேரம் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதேபோல் நெட்டப்பாக்கம், திருக்கனுார், பாகூர், வில்லியனுார் பகுதிகளில் நள்ளிரவு வரை இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
தொடர்ந்து பெய்த கனமழையால் ஏற்பட்ட போக்குவரத்து ஸ்தம்பிப்பால் இந்திரா காந்தி சிக்னல் சந்திப்பில் வாகனங்கள் வரிசையாக நின்றன.
3 மணி நேரத்திற்கு மேலாக கனமழை வெளுத்து வாங்கியதால் சாலையின் இரு புறங்களிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது, இதனால் வாகன ஓட்டிகள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகியதுடன் சாலை ஓரங்களில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் மழைநீரில் மூழ்கியது.
தாழ்வான குடியிருப்பு பகுதிகளிலும் மழை நீர் சூழ்ந்ததால் பொதுமக்களும் கடுமையான சிரமத்திற்கு ஆளாகினார்கள். நகர பகுதியான முத்தியால்பேட்டை, முதலியார் பேட்டை, உப்பளம், ராஜ்பவன், கிருஷ்ணா நகர், பூமியான் பேட்டை, கடற்கரை சாலை, பஸ் நிலையம், விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினார்கள்.
கிராமப்புறங்களான பாகூர், வில்லியனூர், திருக்கனூர், திருபுவனை, கரையாம் புத்தூர், மண்ணாடிபட்டு உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்ததால் பொதுமக்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகினார்கள். தொடர்ந்து பெய்த கனமழையால் நகரம் மற்றும் கிராமப்புறங்களில் ஒரு சில இடங்களில் மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது.
இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளானர்கள். நேற்று இரவு 3 மணி நேரம் பெய்த மழையில் 10 செ.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.






