search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுச்சேரியில் சூறை காற்றுடன் புயல் மழை
    X

    புதுச்சேரியில் சூறை காற்றுடன் புயல் மழை

    • புயல் எச்சரிக்கை காரணமாக பாதுகாப்பு கருதி, புதுவை கடற்கரை சாலை நேற்று இரவு முதல் மூடப்பட்டுள்ளது.
    • புயலை எதிர்கொள்ள அரசு துறைகள் உஷார்படுத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

    புதுச்சேரி:

    தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெஞ்சல் புயலாக உருவெடுதுள்ளது.

    இந்த புயல் இன்று மாலையில் புதுவைக்கும், சென்னைக்கும் இடையே மகாபலிபுரம், மரக்காணம் பகுதியில் கரையை கடக்கலாம் எனவும், இதனால் சூறை காற்றுடன் கனமழை பெய்யும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    புயல் காரணமாக புதுவை கடலில் அலைகளின் சீற்றம் அதிகமாக உள்ளது. 6 அடிக்கு மேல் அலைகள் எழும்பின. 4 நாட்களுக்கும் மேலாக மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை நீடிக்கிறது.

    ஆழ்கடல் விசைப் படகுகள் அனைத்தும் தேங்காய்திட்டு துறை முகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மீனவ கிராமங்களில் கடற்கரையில் நிறுத்தப்படும் படகுகள் கிரேன் மூலம் கரைக்கு ஏற்றப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

    புயல் எச்சரிக்கை காரணமாக பாதுகாப்பு கருதி, புதுவை கடற்கரை சாலை நேற்று இரவு முதல் மூடப்பட்டுள்ளது. இன்று காலையில் கடற்கரை சாலையில் நடைபயிற்சிக்காக வந்தவர்களை போலீசார் அனுமதிக்கவில்லை. அவர்களையும், கடற்கரையை சுற்றி பார்க்க வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களையும் தடுத்து நிறுத்தி, போலீசார் திருப்பி அனுப்பினர்.

    பாண்டி மெரீனா கடற்கரை செல்லவும் தடை விதித்த போலீசார் தடுப்புகளை வைத்து பாதையை மூடினர். நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படகு குழாம், ஊசுட்டேரி படகு குழாம் உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் மூடப்பட்டுள்ளது.

    பெஞ்சல் புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் சூறை காற்று வீசுவதோடு, 15 செ.மீ.க்கு மேல் கனமழையும் பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புதுவை மக்கள் அனைவரும் அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைத்து கொள்ளும்படியும் வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

    புதுவையில் புயல் நிலவரம், கரையை கடக்கும் நேரம் குறித்து பொதுமக்கள் பாதுகாப்புக்காக அனைவருக்கும் செல்போனில் ஒரே நேரத்தில் எஸ்.எம்.எஸ் அனுப்பவும் பேரிடர் மேலாண்மை துறை திட்டமிட்டுள்ளது. புயலை எதிர்கொள்ள அரசு துறைகள் உஷார்படுத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

    மேலும் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு எடுத்துள்ளது. தாழ்வான பகுதியில் குடியிருப்போரை தங்க வைக்க புதுவையில் 208 நிவாரண முகாம்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    இதில் 121 முகாம்கள் பொதுமக்கள் தங்குவதற்காக தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது. அங்கு வருபவர்களுக்கு சுத்தமான குடிநீர், கழிப்பறை வசதி, பிரட், பால், உணவு வழங்கப்படுகிறது. புயல் பாதிப்புக்கு ஏற்ப மற்ற நிவாரண முகாம்களை திறக்கப்படும்.

    தாழ்வான பகுதிகள் மற்றும் தண்ணீர் தேங்கும் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் நிவாரண முகாம்களுக்கு வரும்படி வருவாய்த்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

    கடந்த 2 நாட்களில் 13 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக பல்வேறு துறைகள் அடங்கிய பேரிடர் மீட்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    இந்த குழுவில் இடம் பெற்றுள்ள 400 பேர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளில் இரவு, பகலாக செய்து வருகின்றனர். இந்த பணிகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி, கலெக்டர் குலோத்துங்கன் ஆகியோர் ஆய்வு செய்து பல்வேறு ஆலோசனைகளையும், உத்தரவுகளையும் வழங்கியுள்ளனர்.

    புதுவையில் கடற்கரையை புயல் நெருங்கி வருவதை எச்சரிக்கும் வகையில் 7-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புதுவையில் இன்றுடன் தொடர்ந்து 4-வது நாளாக அரசு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதுவைக்கு ஏற்கனவே ஒரு தேசிய பேரிடர் மீட்பு குழு வரவழைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கூடுதலாக மேலும் ஒரு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் அரக்கோணத்திலிருந்து புதுவைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் புதுவை போலீசார், வருவாய்த் துறையினருடன் இணைந்து மீட்பு நடவடிக்கையில் இறங்க தயார் நிலையில் உள்ளனர்.

    புயலை எதிர்கொள்ள நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து, பொதுப்பணித்துறை ஊழியர்கள் தயாராக உள்ளனர். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மருத்துவர்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவசர தொலைபேசி எண்களான 112 மற்றும் 1077, வாட்ஸ்அப் எண் 94889 81070 ஆகியவற்றில் பொதுமக்கள் புயல் பாதிப்பு, மரங்கள் விழுதல், மின்சாரம் துண்டிப்பு உட்பட பிரச்சனைகள் குறித்து 24 மணி நேரமும் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    புதுவை அரசின் மீன்வளத்துறை சார்பில் 50 படகுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கினால் அதை வெளியேற்ற 60 மோட்டார்களை பொதுப்பணித்துறை தயார் நிலையில் வைத்துள்ளனர். காவல்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, மின்துறை அதிகாரிகள், பிற அரசு துறை ஊழியர்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளனர்.

    குடிமைப்பொருள் வழங்கல் துறை மூலம் ஆயிரக்கணக்கான பிரட் பாக்கெட், பால் விநியோகம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சூறை காற்றால் அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்க நகரம் முழுவதும் வைக்கப்பட்டிருந்த பேனர்களை அதிகாரிகள் அப்புறப்படுத்தியுள்ளனர்.

    பல திரைப்படங்களில் இடம்பெற்ற புதுவை பழைய துறைமுக பாலம் 2022-ம் ஆண்டு இடிந்தது. புயலின் கடல் அலைகள் சீற்றத்தால் இந்த பாலம் முழுமையாக இடிந்து விழும் நிலை உருவாகியுள்ளது. புதுவை கடற்கரை சாலைக்கு நாளை காலை 10 மணி வரை பொதுமக்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

    சீனியர் போலீஸ் சூப்பிரெண்டு கலைவாணன் தலைமையில் போலீசார் கடற்கரை சாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். புதுவை முழுவதும் முக்கிய சந்திப்புகளில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். பொதுமக்களுக்கு தேவையான உதவிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பாதுகாப்பு பணியில் இவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    இந்த நிலையில் புதுவையில் இன்று அதிகாலை முதல் காற்றின் வேகம் படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. சூறை காற்றுடன் மழை பெய்ய தொடங்கியுள்ளது. வானம் இருண்டு கருமேகங்களுடன் திரண்டு காணப்படுகிறது. புயல் எச்சரிக்கை, பள்ளிகள், அரசு அலுவலகங்கள் விடுமுறையால் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் முடங்கினர்.

    இதனால் சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு இருள் சூழ்ந்து இருந்ததால் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரியவிட்ட படி வாகன ஓட்டிகள் சென்றனர். சூறைகாற்று கடும் குளிருடன் வீசுவதால், ஸ்வெட்டர், ஜெர்கின் போன்றவற்றை பொது மக்கள் அணிந்திருந்தனர்.

    புயல் எச்சரிக்கை காரணமாக பல பகுதியில் பொதுமக்கள் மெழுகுவர்த்தி, உணவுப் பொருட்களை வாங்கி வைத்தனர். வீடுகளில் தண்ணீரையும் சேமித்து வைத்துள்ளனர். மின்சாரம் தடைபடலாம் என்பதால் விளக்குகள், செல்போன்களுக்கு சார்ஜ் ஏற்றி வைத்துள்ளனர்.

    புதுவையை எப்போது புயல் கடக்கும்? பாதிப்புகள் ஏதும் ஏற்படுமா? என வானிலை மையத்தின் அறிவிப்புகளை தொடர்ந்து மக்கள் கவனித்து வருகின்றனர். அடுத்தடுத்து வரும் புயல் எச்சரிக்கை அறிவிப்புகள் புதுவை மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

    Next Story
    ×