என் மலர்
புதுச்சேரி

புதுச்சேரியில் விடிய விடிய பெய்த தொடர் மழை- தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது
- இன்று மகாபலிபுரம் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- கனமழை எச்சரிக்கை காரணமாக இன்று அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
புதுச்சேரி:
வங்க கடலில் ஏற்பட்ட டிட்வா புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு நிலை பகுதியாக மாறியுள்ளது.
டிட்வா புயலால் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. வானம் மேகமூட்டத்துடன் எப்போது வேண்டுமானாலும் மழை கொட்டலாம் என்ற நிலையில் இருந்தது. அதேநேரத்தில் நேற்று முன்தினம் மழையே இல்லை. ஆனால் குளிர்ந்த காற்று, இருண்ட சூழலும் தொடர்ந்தது.
இந்த நிலையில் நேற்றைய தினம் காலையிலிருந்து லேசான மழை பெய்தது. டிட்வா புயல் எச்சரிக்கையால் சனி மற்றும் திங்கட்கிழமை அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
நேற்றைய தினம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை. புதுச்சேரியில் நேற்று அவ்வப்போது சாரல் மழை பெய்து வந்தது.
இந்த நிலையில் இன்று மகாபலிபுரம் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வலு குறைந்திருந்தாலும், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் சூறை காற்றுடன் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் திடீரென இடி, மின்னலுடன் மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் மழை பெய்ததால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியது. தொடர்ந்து இரவு முழுவதும் விட்டு, விட்டு மழை பெய்தது.
இன்று அதிகாலை முதல் மழை நீடிக்கிறது. வானம் சூழ்ந்து இருண்டு காணப்படுகிறது. கனமழை எச்சரிக்கை காரணமாக இன்று அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. கல்லூரிகள் வழக்கம்போல இயங்குகிறது.






