search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    மும்பையில் பரிதாபம்: குடிநீர் குழாய் சீரமைப்பு பணிக்காக தோண்டப்பட்ட குழியில் விழுந்து இரு சிறுவர்கள் பலி

    மும்பையில் குழாய் பழுதுபார்க்கும் பணிக்காக தோண்டப்பட்ட குழியில் விழுந்து இரண்டு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    மும்பை, ஆன்டாப் ஹில் பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் குழாய் சீரமைப்பு பணி நடைபெற்று வந்துள்ளது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக குழி தோண்டப்பட்டு அதில் தண்ணீர் நிரப்பி வைத்திருந்ததாக தெரிகிறது. இந்நிலையில், அவ்வழியாக வந்த அதே பகுதியை சேர்ந்த 5-ம் வகுப்பு படிக்கும் சிறுவர்கள் இரண்டு பேர் தண்ணீர் மூழ்கிய பள்ளத்தில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

    இதுகுறித்து சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில், "எங்களது பிள்ளைகள் எப்படி அந்த வழியே சென்றனர் என்று எங்களுக்கு தெரியவில்லை. போலீசார் வீடு தேடிவந்து சொன்னே பிறகே எங்களுக்கு விஷயம் தெரியவந்தது. சீரமைப்பு பணி முடிந்த பிறகு சம்பந்தப்பட்ட பணியாளர்கள் குழியை மூடியிருக்க வேண்டும். அதை திறந்து வைக்கப்பட்டதால் எங்கள் குழந்தைகள் அதில் விழுந்துள்ளனர்" என்று குற்றம்சாட்டி உள்ளனர்.

    இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

    குடிநீர் குழாய் சீரமைப்பு பணி நடந்து வருவதால் குழி தோண்டப்பட்டு தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது. அவ்வழியாக சென்ற சிறுவர்கள் குழிக்குள் குதித்தார்களா? அல்லது தவறுதலாக விழுந்துவிட்டனரா? என்பது குறித்து இன்னும் தெளிவாக தெரியவில்லை.

    குடிநீர் குழாய் சீரமைப்பு பணிகளில் அலட்சியம் காட்டினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×