search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அஞ்சலி செலுத்திய வீரர்கள்
    X
    அஞ்சலி செலுத்திய வீரர்கள்

    கல்வான் மோதல் முதல் ஆண்டு நினைவு தினம் - உயிர் நீத்த வீரர்களுக்கு நினைவஞ்சலி

    கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன துருப்புகள் இடையிலான மோதலில் வீர மரணம் அடைந்த இந்திய வீரர்களின் துணிச்சலுக்கு ராணுவம் புகழாரம் சூட்டியது.
    புதுடெல்லி:

    இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்ட நெடுங்காலமாக எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது. கடந்த ஆண்டு ஜூன் 15-ம் தேதி கிழக்கு லடாக்கில் கல்வான்-பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய வீரர்களுக்கும், சீன துருப்புகளுக்கும் இடையே கடும் மோதல் நடந்தது.

    சீனா காட்டுமிராண்டித்தனமாக அவிழ்த்து விட்ட கொலை வெறித்தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். நாட்டைக் காப்பதில் நம் வீரர்கள் செய்த உயிர்த்தியாகமும், அவர்களது துணிச்சலும் இன்றளவும் மனித மனங்களை நெகிழ வைப்பதாக அமைந்துள்ளது.

    இந்நிலையில், கல்வான் மோதல் நடைபெற்று நேற்றுடன் ஓராண்டு ஆகி உள்ளது. இதை இந்திய ராணுவம் நினைவு கூர்ந்துள்ளது. இதையொட்டி வெளியிட்ட டுவிட்டர் பதிவில் ராணுவம் கூறி இருப்பதாவது:

    கல்வான் பள்ளத்தாக்கு

    கொடூரமான மோதல்கள் நடந்ததின் முதல் ஆண்டு நிறைவு அடைந்துள்ளது. மிகவும் கடினமான, உயரமான நிலப்பரப்பில் எதிரிகளுடன் சண்டையிடும்போது வீர மரணம் அடைந்த படைவீரர்களின் உயிர்த்தியாகம் மிகவும் உன்னதமானது. அவர்களது துணிச்சல், தேசத்தின் நினைவாக நித்தியமாக பொறிக்கப்பட்டிருக்கும்.

    ராணுவ தளபதி எம்.எம்.நரவனே, ராணுவத்தின் உயர் அதிகாரிகள் அனைவரும் லடாக்கில் கல்வான்- பள்ளத்தாக்கு பகுதியில் தேசத்தின் ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் பாதுகாத்த வேளையில், மிக உன்னதமான உயிர்த்தியாகம் செய்த வீரர்களின் நினைவைப் போற்றினார்கள். அவர்களின் வீரம் என்றென்றும் நினைவில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    கல்வான்-பள்ளத்தாக்கு மோதலில் வீர மரணம் அடைந்த இந்திய வீரர்களுக்கு காஷ்மீரில் லே பகுதியில் உள்ள 14 கார்ப்ஸ் படைப்பிரிவினர் நினைவஞ்சலி செலுத்தினர். வீர மரணம் அடைந்த வீரர்கள் சேவையாற்றிய ‘பயர் அண்ட் பியூரி கார்ப்ஸ்’ படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ஆகாஷ் கவுசிக்கும், லேயில் அமைந்துள்ள போர் நினைவுச்சின்னத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

    கல்வான் மோதலில் கொடூரமான ஆயுதங்களுடன் சண்டையிட்ட சீன துருப்புகளை நமது படை வீரர்கள் துணிச்சலுடன் எதிர்கொண்டனர். இந்த மோதலில் 5 சீன ராணுவத்தினர் பலியாகினர். இதை கடந்த பிப்ரவரி மாதம் சீனா முதன் முறையாக ஒப்புக்கொண்டது நினைவுகூரத்தக்கது.
    Next Story
    ×