search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதி கோவில்
    X
    திருப்பதி கோவில்

    1 மணி நேரத்தில் முடிந்த இலவச தரிசன டோக்கன்

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று இலவச தரிசன டோக்கன் வழங்கும் பணி தொடங்கிய ஒரு மணி நேரத்தில் டோக்கன்கள் அனைத்தும் முடிவடைந்தது.
    திருமலை:

    திருப்பதியில் நிறுத்தப்பட்டிருந்த இலவச தரிசனம் மீண்டும் இன்று முதல் தொடங்கியது. இதற்காக அலிபிரியில் உள்ள ஸ்ரீதேவி காம்ப்ளக்ஸில் இலவச நேர ஒதுக்கீடு தரிசன டோக்கன்கள் நேற்று முதல் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தரிசனத்திற்கு ஒரு நாள் முன்னதாக டோக்கன் வாங்க வேண்டும்.

    தினமும் காலை 5 மணி முதல் தினசரி 3 ஆயிரம் இலவச நேர ஒதுக்கீடு தரிசன டோக்கன்கள் வழங்கப்படுகிறது.

    ஒரு நாளைக்கு முன் வழங்கப்படும் தரிசன டோக்கன்களை பெற்ற பக்தர்கள் மட்டுமே அலிபிரி சோதனைச்சாவடியில் திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுவர்.

    முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் தரிசன டோக்கன்கள் வழங்கப்படுகிறது. 3 ஆயிரம் டோக்கன்கள் வழங்கப்பட்ட பின் அவை வழங்குவது நிறுத்தப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    நேற்று டிக்கெட் வழங்கும் பணி தொடங்கிய ஒரு மணி நேரத்தில் தரிசன டோக்கன்கள் அனைத்தும் முடிவடைந்தது. இன்று காலை டிக்கெட் வாங்க பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சமூக இடைவெளியுடன் அவர்கள் வரிசையில் நின்றனர். ஆனால் ஒரு மணி நேரத்தில் டிக்கெட்டுகள் அனைத்தும் முடிந்தது. இதனால் டிக்கெட் கிடைக்காமல் ஏராளமான பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். 3 ஆயிரம் இலவச தரிசனம் வழங்கப்படுவதை 6 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    நேற்று இலவச தரிசன டோக்கன் பெற்ற பக்தர்கள் இன்று காலை தரிசனத்திற்கு சென்றனர். அவர்கள் 2 மணி நேரத்தில் தரிசனம் முடிந்து திரும்பினர்.

    இலவச தரிசனம் மீண்டும் தொடங்கியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. கூட்ட நெரிசல், தள்ளுமுள்ளு இல்லாமல் விரைவாக ஏழுமலையானை வழிபட முடிகிறது என்று பக்தர்கள் தெரிவித்தனர்.

    திருப்பதியில் நேற்று 17,080 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 6,423 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.1.39 கோடி உண்டியல் வசூலாகியுள்ளது.
    Next Story
    ×