search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீடுகள் பற்றி எரிந்த காட்சி
    X
    வீடுகள் பற்றி எரிந்த காட்சி

    அசாம்-மிசோரம் எல்லையில் பயங்கர மோதல்: உள்துறை செயலாளர் தலைமையில் இன்று ஆலோசனை

    அசாம், மிசோரம் மாநில எல்லையை ஒட்டிய பகுதியில் ஏற்பட்ட பயங்கர மோதலில் பலர் காயமடைந்தனர்.
    சில்சார்:

    மிசோரம் மாநிலம், 164.6 கி.மீ. நீள எல்லையை அசாம் மாநிலத்துடன் பகிர்ந்து கொள்கிறது. இரு மாநிலங்கள் இடையே எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. 1995-ம் ஆண்டில் இருந்து பேச்சுவார்த்தைகள் நடந்தபோதும் குறிப்பிடத்தக்க பலன் எதுவும் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் அசாம்-மிசோரம் எல்லையில் (மிசோரமின் கொலாசிப் மாவட்டம் மற்றும் அசாமின் சச்சார் மாவட்டம் அடங்கிய பகுதி) இரு மாநில மக்களிடையே சனிக்கிழமை மோதல் ஏற்பட்டது. அசாம் உரிமை கொண்டாடும் பகுதியில் மிசோரம் அரசு சார்பில் கொரோனா பரிசோதனை மையம் அமைத்ததால் இந்த மோதல் உருவானதாக கூறப்படுகிறது.

    கற்களாலும், தடிகளாலும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் பலர் காயம் அடைந்தனர். குடிசைகள் தீவைத்து எரிக்கப்பட்டன. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து ஏராளமான பாதுகாப்பு படையினர் அங்கு சென்று நிலைமையை கட்டுப்படுத்தினர். மிசோரம் அரசு, ரிசர்வ் படையினரை நிறுத்தி உள்ளது.

    இரு மாநில அரசுகள் சார்பிலும் பிரதமர் அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு நிலைமை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. எல்லை பிரச்சனையை தீர்க்க கூட்டு முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என அசாம் முதல்வர், மிசோரம் முதல்வரிடம் கேட்டுக்கொண்டார். பதற்றத்தை தணிக்க இரு மாநிலங்களிலும் தனித்தனியாகவும் உயர்மட்ட அளவில் ஆலோசனை நடத்தப்பட்டது. 

    இந்நிலையில்,  எல்லையில் உள்ள நிலைமையை ஆய்வு செய்வதற்காக, மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா தலைமையில் இன்று கூட்டம் நடைபெறுகிறது. இதில் இரு மாநிலங்களின் மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
    Next Story
    ×