search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    காஷ்மீர் எல்லையில் அத்துமீறல்- பாக். ராணுவம் சுட்டதில் 2 பேர் பலி

    காஷ்மீர் மாநிலத்தின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள எல்லைகளில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்திய ராணுவ வீரர் மற்றும் பெண் ஒருவர் பலியாயினர்.
    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் மாநிலத்தின் வடக்குப் பகுதியில் உள்ள பாரமுல்லா மாவட்டத்தில் ஊரி மற்றும் பந்திப்பூர் செக்டார்களில் இரவு 11 மணிக்கு பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டது.

    இந்திய எல்லையில் உள்ள கிராமங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பீரங்கி தாக்குதல் நடத்தினார்கள். கை எறி குண்டுகளையும் வீசினார்கள்.

    இந்திய ராணுவம் உடனடியாக பதிலடி தாக்குதலில் ஈடுபட்டது. இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சிறிய ரக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினார்கள்.

    எல்லையில் உள்ள இந்திய ராணுவ நிலைகளை தகர்க்கும் வகையில் அவர்களது தாக்குதல் இருந்தது. உடனடியாக ஊரி செக்டாருக்கு கூடுதல் ராணுவ வீரர்கள் விரைந்தனர்.

    ஊரி செக்டார் எல்லையில் இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. சுமார் 1 மணிநேரம் சண்டை நீடித்தது. பாகிஸ்தானின் பீரங்கி தாக்குதலில் இந்திய ராணுவத்தின் இளநிலை அதிகாரி ஒருவர் படுகாயம் அடைந்தார். ஒரு பெண் மீதும் பீரங்கி குண்டுகள் தாக்கியது.

    அவர்கள் இருவருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். ஸ்ரீநகரில் உள்ள ராணுவ செய்தித்தொடர்பாளர் இதை உறுதி செய்தார்.

    ஊரி செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. சமீப காலமாக ஊரியில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குவது அதிகரித்துள்ளது.

    இதையடுத்து ஊரி செக்டாரில் கண்காணிப்பு பணியையும் ரோந்து பணியையும் அதிகப்படுத்தி இருப்பதாக காஷ்மீர் போலீஸ் டி.ஜி.பி. தில்பக் சிங் தெரிவித்தார்.
    Next Story
    ×