search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை: முலாயம்சிங் யாதவ்
    X

    பாராளுமன்ற தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை: முலாயம்சிங் யாதவ்

    உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சி இன்னும் வலுவாக இருப்பதாகவும், பாராளுமன்ற தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை என்றும் முலாயம்சிங் யாதவ் தெரிவித்தார்.
    லக்னோ:

    உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. ஆளும் கட்சியாக இருந்த சமாஜ்வாடி, காங்கரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டும் படுதோல்வியை சந்தித்தது. அதேபோல மாநிலத்தின் மற்றொரு பெரிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியும் கடும் சரிவை சந்தித்தது.

    ஆனாலும் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகளுக்கு விழுந்த ஓட்டுக்களை மொத்தமாக கூட்டி கணக்கிட்டு பார்த்தால் பாரதிய ஜனதாவை விட இந்த கட்சிகளுக்கு அதிக ஓட்டுகள் கிடைத்திருந்தன.

    இதனால் பாரதிய ஜனதாவுக்கு எதிராக மற்ற கட்சிகளும் ஒன்றாக இணைந்திருந்தால் இந்த கட்சிகளே வெற்றி பெற்று இருக்கும் என்றும் கூறப்பட்டது.

    இன்னும் 2 ஆண்டில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதில் பாரதிய ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று மாயாவதி கூறியிருந்தார்.

    இதுபற்றி அகிலேஷ் யாதவிடம் கேட்டபோது, அவரும் பாரதிய ஜனதாவுக்கு எதிராக மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்க தயார் என்று கூறினார். அதாவது பகுஜன் சமாஜூடன் கூட்டணி அமைப்பதற்கு அவர் சம்மதம் தெரிவிப்பது போல அவரது பேட்டி இருந்தது.



    இதுதொடர்பாக கட்சியின் நிறுவத் தலைவர் முலாயம்சிங் யாதவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி இன்னும் வலுவாக இருக்கிறது. எங்களால் பாரதிய ஜனதாவை தோற்கடிக்க முடியும். எனவே பாராளுமன்ற தேர்தலில் மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தான் பாரதிய ஜனதாவை வீழ்த்த முடியும் என்ற நிலை ஏற்படவில்லை. கூட்டணி இல்லாமலேயே தேர்தலை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

    உத்தரபிரதேசத்தில் எங்கள் கட்சி தோற்றதற்கு பத்திரிக்கைகள் தான் முக்கிய காரணம். எங்கள் குடும்பத்தில் நடந்த சில சிறிய வி‌ஷயங்களை பெரிதுபடுத்தி செய்திகளாக்கி விட்டார்கள். அதே நேரத்தில் மக்களை ஏமாற்றும் செயலை பாரதிய ஜனதா செய்தது.

    மோடியை பற்றி பொய் தகவல்களை கூறி பெரிய அளவில் விளம்பரப்படுத்தினார்கள். இதன் மூலம் மக்கள் ஏமாற்றப்பட்டு விட்டனர். எனவே தான் பாரதிய ஜனதா வெற்றி பெற்றது. அதே நிலை தொடர்ந்து நீடிக்கும் என்று சொல்ல முடியாது.

    அகிலேஷ்யாதவ் ஆட்சியில் ஏராளமான நல்ல திட்டங்களை செயல்படுத்தினார். ஆனால் அதை பத்திரிக்கைகள் பெரிதுபடுத்தவில்லை. மற்ற கட்சிகள் ஆட்சியில் இருந்தால் அதை பெரிதுபடுத்துவார்கள். எங்களை அவர்கள் புறக்கணித்துவிட்டார்கள்.

    நான் இப்போது கட்சி தலைவராக இல்லை என்றபோதிலும் அதனால் கட்சிக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஜெயப்பிரகாஷ் நாரயாணன், ராம்மனோகர் லோகியா போன்றவர்கள் எல்லாம் எந்த கட்சிக்கும் தலைவர்களாக இருந்தவர்கள் அல்ல. ஆனாலும் அவர்கள் மாபெரும் தலைவர்களாக இருந்தார்கள். அதேபோல நானும் இருக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×