search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொளத்தூர் சட்டசபை தொகுதி தேர்தல் வழக்கு: மு.க.ஸ்டாலின் மனு தள்ளுபடி
    X

    கொளத்தூர் சட்டசபை தொகுதி தேர்தல் வழக்கு: மு.க.ஸ்டாலின் மனு தள்ளுபடி

    கொளத்தூர் சட்டசபை தொகுதி தேர்தல் தொடர்பான வழக்கில் மு.க.ஸ்டாலின் மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
    புதுடெல்லி:

    2011-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், சென்னை கொளத்தூர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் சைதை துரைசாமியும், தி.மு.க. சார்பில் மு.க.ஸ்டாலினும் போட்டியிட்டனர். இதில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றார். அவருடைய வெற்றியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் சைதை துரைசாமி தேர்தல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் மீதான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அதில், “சென்னை ஐகோர்ட்டில் வழக்கின் மனுதாரர் (சைதை துரைசாமி) தாக்கல் செய்த வீடியோ பிரதிகள் தொடர்பான மனுவை ஐகோர்ட்டு பரிசீலனைக்கு ஏற்றுக்கொண்டு கடந்த ஆண்டு மார்ச் 6-ந் தேதி இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இது தேர்தல் விதிமுறைகளுக்கு புறம்பானது. எனவே, சென்னை ஐகோர்ட்டின் இடைக்கால உத்தரவுக்கு தடை விதிக்கவேண்டும். இந்த மனுவின் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் முடிவடையும் வரை சென்னை ஐகோர்ட்டில் நடந்து வரும் விசாரணைக்கு தடை விதிக்கவேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.

    இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஜே.செல்லமேஸ்வர், அபய் மனோகர் சப்ரே, அமிதவ ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, சைதை துரைசாமி தரப்பில் வக்கீல் ஜெயந்த் முத்ராஜ் ஆஜரானார். ஸ்டாலின் தரப்பில் வக்கீல்கள் விடுதலை, ஆதி நாராயணராவ் ஆகியோர் ஆஜராயினர்.

    விசாரணை தொடங்கியதும் நீதிபதிகள் கூறுகையில், “இந்த வழக்கில் ஏற்கனவே சாட்சி விசாரிக்கப்பட்டு தேவையான சட்டபூர்வ சான்றிதழும் தாக்கல் செய்யப்பட்டு அவை ஐகோர்ட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டு அங்கு இறுதி விசாரணையும் நடைபெற உள்ளது. எனவே, ஐகோர்ட்டு உத்தரவில் நாங்கள் தலையிடுவதற்கு முகாந்திரம் ஏதும் இல்லை. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இருப்பினும் மனுதாரர் ஐகோர்ட்டில் இறுதி விசாரணையின்போது தங்கள் தரப்பு ஆட்சேபனைகளை சட்டத்தின் வரையறைக்கு உட்பட்டு தெரிவிக்கலாம்” என்று குறிப்பிட்டனர்.

    Next Story
    ×