search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைப்பற்றப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகள்.
    X
    கைப்பற்றப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகள்.

    ரூ.30 லட்சம் பழைய ரூபாய் நோட்டுகளுடன் கேரள கும்பல் கைது

    கேரளாவில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகளுடன் 3 பேர் கொண்ட கும்பலை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் அமரவிளை சோதனைச் சாவடியில் டி.எஸ்.பி. ஹரிக்குமார் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது அந்த வழியாக ஒரு கார் வேகமாக வந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரின் டிக்கியில் கட்டுக் கட்டாக ரூபாய் நோட்டுகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவை அனைத்தும் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளாகும். மொத்தம் ரூ.30 லட்சத்திற்கு பழைய ரூபாய் நோட்டுகள் இருந்தது தெரியவந்தது.

    உடனே போலீசார் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் காரில் வந்த 3 பேரையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் பெயர் சோபன் (வயது 52), இவர் கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை பகுதியில் தபால் நிலையத்தில் ஊழியராக பணியாற்றி வருபவர். மற்றும் அவரது கூட்டாளிகள் பாப்பன கோடு பகுதியை சேர்ந்த விமல்ராய் (வயது 41), வெள்ளிவிளாகத்தை சேர்ந்த ரஞ்சித் (30) என்பது தெரிய வந்தது.



    இந்த 3 பேரும் கேரளாவில் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை பலரிடம் இருந்து சேகரித்துள்ளனர். 1000 ரூபாய் நோட்டுக்கு ரூ.100-ம், 500 ரூபாய் நோட்டுக்கு ரூ.50-ம் கொடுத்து இந்த பணத்தை அவர்கள் வாங்கி உள்ளனர்.

    அதன்பிறகு அந்த பணத்தை காரில் கடத்திச் சென்று குமரி மாவட்ட எல்லையான களியக்காவிளையில் வைத்து சென்னையை சேர்ந்த ஒரு கும்பலிடம் இந்த ரூபாய் நோட்டுகளை ஒப்படைக்க திட்டமிட்டு இருந்தனர். மேலும் இந்த பணத்திற்கு அவர்களுக்கு கமி‌ஷனும் சென்னை கும்பல் வழங்கும்.

    இந்த தகவல்கள் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. கேரள கும்பல் போலீசில் சிக்கிய தகவல் கிடைத்ததும் பணத்தை பெற்றுச் செல்வதற்காக களியக்காவிளையில் காரில் காத்திருந்த சென்னை கும்பல் தப்பிச்சென்று விட்டது.

    சென்னை கும்பலை சேர்ந்த ஒருவரின் செல்போன் நம்பரை கேரள கும்பலிடம் இருந்து போலீசார் கைப்பற்றி உள்ளனர். அந்த செல்போன் நம்பர் மூலம் சென்னை கும்பலை மடக்கிப்பிடிக்க போலீசார் நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.
    Next Story
    ×