search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ‘இரட்டை இலை’ எங்களுக்கே சொந்தம்: சசிகலா - ஓ.பி.எஸ். அணி காரசார விவாதம்
    X

    ‘இரட்டை இலை’ எங்களுக்கே சொந்தம்: சசிகலா - ஓ.பி.எஸ். அணி காரசார விவாதம்

    ‘இரட்டை இலை’ தங்களுக்கு சொந்தம் என்று சசிகலா மற்றும் ஓ.பி.எஸ். தரப்பினர் டெல்லியில் தேர்தல் கமிஷன் அதிகாரிகளிடம் இன்று விளக்கம் அளித்தனர்.
    புதுடெல்லி:

    ஜெயலலிதா மரணத்தைத் தொடர்ந்து சசிகலா அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என அ.தி.மு.க. இரண்டாக பிளவுபட்டுள்ளது.

    ஆட்சியையும், கட்சியையும் கைப்பற்ற இரு அணிகளுக்கும் இடையே பலத்த போட்டி ஏற்பட்டது. அதில் சசிகலா அணியின் கை ஓங்கியது.



    அ.தி.மு.க.வில் உள்ள 134 எம்.எல்.ஏக்களில் 122 பேர் சசிகலா அணிக்கு ஆதரவாக உள்ளனர். மொத்தம் உள்ள 50 எம்.பி.க்களில் 38 எம்.பி.க்கள் அந்த அணியில் இடம் பெற்றுள்ளனர்.

    அதுபோல பொதுக்குழு - செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்களில் பெரும்பாலானவர்கள் சசிகலாவுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். இதனால் தற்போது அ.தி.மு.க.வின் ஆட்சியும், கட்சியும் சசிகலா அணியிடம் உள்ளது.

    இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டது கட்சி சட்ட விதிகளின்படி செல்லாது என்றும் எனவே அவரது நியமனத்தை ரத்து செய்வதோடு, அவர் வெளியிட்ட அறிவிப்புகளையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தேர்தல் கமி‌ஷனில் மனு கொடுக்கப்பட்டது.



    இதற்கிடையே ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்திருப்பதால் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே தர வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் அணியினர் மீண்டும் ஒரு மனு கொடுத்தனர். இதனால் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இதுபற்றி விசாரணை நடத்த இரு தரப்பினரையும் இன்று (புதன்கிழமை) டெல்லிக்கு வந்து தேர்தல் கமி‌ஷனின் முழு பெஞ்ச் முன்பு ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டது. அதை ஏற்று இரு அணியினரும் நேற்றே டெல்லி விரைந்தனர்.

    சசிகலா அணி சார்பில் துணை சபாநாயகர் தம்பி துரை, எம்.பி.க்கள் வேணுகோபால், நவநீதகிருஷ்ணன், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், விஜயபாஸ்கர், உதயகுமார், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், வக்கீல் இன்பதுரை எம்.எல்.ஏ. ஆகியோர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.

    அதுபோல ஓ.பன்னீர் செல்வம் அணியில் மூத்த தலைவர்கள் அனைவரும் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.



    காலை 10.30 மணிக்கு விசாரணை தொடங்கியது. சசிகலா அணி சார்பில் மூத்த வக்கீல்கள் மோகன் பராசரன், சல்மான் குர்ஷித், அரிமா சுந்தரம் ஆகியோர் ஆஜரானார்கள்.

    ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் மூத்த வக்கீல்கள் சி.எஸ்.வைத்தியநாதன், குரு கிருஷ்ணகுமார், மனோஜ் பாண்டியன் ஆகியோர் ஆஜரானார்கள்.

    இவர்களுடன் மைத்ரேயன் எம்.பி. உள்ளிட்ட எம்.பி.க்களும் தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு சென்றிருந்தனர்.

    விசாரணை தொடங்கியதும் முதலில் ஓ.பன்னீர்செல்வம் அணி தரப்பு வக்கீல்களுக்கு வாதம் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர்கள் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரி வாதம் செய்தனர். மக்கள் பிரதிநிதித்துவ சட்ட விதிகளை அவர்கள் சுட்டி காட்டினர்.

    மேலும் தேர்தலில் போட்டியிட முடியாதபடி தண்டனை பெற்றுள்ள சசிகலா, தேர்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளருக்கு எப்படி அங்கீகாரம் அளித்து கையெழுத்திட முடியும் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினார்கள். 12.15 மணி வரை அவர்களது வாதம் நீடித்தது.

    12.30 மணிக்கு சசிகலா தரப்பு வக்கீல்கள் வாதாட அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் அ.தி.மு.க.வில் பெரும்பாலான நிர்வாகிகள் தங்கள் அணியில் இருப்பதாக குறிப்பிட்டனர். இன்று பிற்பகல் வரை அவர்களது வாதம் நீடிக்கும்.

    இரு தரப்பு வக்கீல்களும் இரட்டை இலை சின்னம் தங்களுக்கே சொந்தம் என்று வாதாடினார்கள். அவர்களிடம் தலைமை தேர்தல் கமி‌ஷனர் நசீம் ஜைதி, தேர்தல் அதிகாரிகள் அச்சல் குமார் ஜோதி, ஓம் பிரகாஷ் ராவத் ஆகியோர் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள்.



    அதற்கு இரு தரப்பு வக்கீல்களும் பதில் அளித் தனர். அதோடு இரட்டை இலை சின்னம் தங்களுக்கே சொந்தம் என்று உரிமை கோருவதற்கான ஆவணங்களையும், ஆதாரங்களையும் கொடுத்தனர். இரு தரப்பினரும் இன்று கூடுதல் ஆவணங்களை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

    ஓ.பன்னீர்செல்வம் அணியினர், கட்சி சட்ட விதிகளை சுட்டி காட்டி வாதம் செய்ததால் காரசாரமாக இருந்தது. அதற்கு சசிகலா தரப்பினர் தங்களுக்கு இருக்கும் பெரும்பான்மை பலத்தை எடுத்து கூறி வாதம் செய்தனர்.

    இரு அணி வக்கீல்களும் நீண்ட நேரம் வாதம் செய்தனர். அவற்றை தேர்தல் கமி‌ஷனின் விசாரணை பெஞ்ச் அதிகாரிகள் பதிவு செய்து கொண்டனர். அதன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் தீர்ப்பை வெளியிட உள்ளது.

    எனவே இரட்டை இலை சின்னம் எந்த அணிக்கு கிடைக்கும் என்பது இன்றே தெரிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பு காணப்படுகிறது.
    Next Story
    ×