search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: பா.ஜ.க. வேட்பாளராக கங்கை அமரன் அறிவிப்பு
    X

    ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: பா.ஜ.க. வேட்பாளராக கங்கை அமரன் அறிவிப்பு

    சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க. சார்பில் இசையமைப்பாளர் கங்கை அமரன் போட்டியிடுவார் என கட்சி தலைமை அறிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    தேசிய கட்சியான பா.ஜனதா தமிழகத்தின் ஒவ்வொரு இடைத்தேர்தலிலும் வேட்பாளரை நிறுத்த தவறுவது இல்லை. அவ்வகையில் சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் யாரை வேட்பாளராக நிறுத்தலாம்? என்று கடந்த சில தினங்களாக தீவிர பரிசீலனை நடந்தது.

    ஆர்.கே. நகர் தொகுதிக்கு தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், நடிகை கவுதமி, இசை அமைப்பாளர் கங்கை அமரன் ஆகியோரின் பெயர்கள் அடிபட்டது. முதலில் நடிகை கவுதமி தான் சிறப்பான தேர்வு என பா.ஜனதா கருதியது. அவரை கட்சியில் இணைத்துக்கொண்டு போட்டியிட செய்யலாம் என்று பா.ஜனதா மூத்த நிர்வாகிகள் சிலர் விரும்பினர்.

    இதுதொடர்பாக பா.ஜனதாவை சேர்ந்த மூத்த நிர்வாகி ஒருவர் கவுதமியிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது. ஆனால் அதற்கு கவுதமி தரப்பில் இருந்து ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவது குறித்து அதிகாரபூர்வமான தகவல்கள் எதுவும் வரவில்லை.

    இதனால் கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது பா.ஜனதாவில் இணைந்த பிரபல இசை அமைப்பாளரான கங்கை அமரனை நிறுத்த பா.ஜனதா முடிவு எடுத்துள்ளது. தேர்தலில் போட்டியிடுவதற்கு கங்கை அமரனும் இசைவு தெரிவித்தார்.

    இந்த நிலையில் ஆர்.கே.நகர் நிலவரத்தை ஆராய்ந்த பா.ஜ.க. மேலிடம், கங்கை அமரனை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. இதனை பா.ஜ.க. தேர்தல் குழு செயலாளர் ஜே.பி.நட்டா டெல்லியில் இன்று மாலை அறிவித்தார். இதேபோல் மற்ற மாநிலங்களில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள தொகுதிகளுக்கான பா.ஜ.க. வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கேரள மாநிலம் மலப்புரம் மக்களவைத் தொகுதி வேட்பாளராக ஸ்ரீபிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

    ஆர்.கே.நகர் தொகுதியில் பூத் வாரியாக ஆய்வு நடத்தி, மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து பா.ஜனதா அறிக்கை தயாரித்து அதன் அடிப்படையில் பிரச்சாரம் செய்ய வியூகம் வகுத்துள்ளது.
    Next Story
    ×