search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாரதா டேப் விவாகரத்தில் சி.பி.ஐ. விசாரணை: சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவோம் - மம்தா
    X

    நாரதா டேப் விவாகரத்தில் சி.பி.ஐ. விசாரணை: சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவோம் - மம்தா

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் பிரபல தொழிலதிபர்களிடம் பணம் வாங்கிய விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவோம் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநில சட்டசபைக்கு கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது ஆளும் திரிணாமுல் கட்சி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பிரபல தொழிலதிபர்களிடம் பணம் வாங்கியதை மறைந்திருந்து வீடியோவாக பதிவுசெய்த ‘நாரதா’ செய்தி நிறுவனம் அந்த காட்சிகளை அப்போது வெளியிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இல்லாத ஒரு பெயரை சொல்லி நிதி அளிக்க வந்ததுபோல் நடித்தவர்களிடம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 6 மக்களவை எம்.பி.க்கள், 3 மந்திரிகள் மற்றும் கொல்கத்தா நகர மேயர் ஆகியோர் பணம் பெற்றுக்கொண்ட காட்சிகளை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது, எதிர்க்கட்சிகளின் திட்டமிட்ட சதி என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், அம்மாநில முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜி அப்போது குறிப்பிட்டிருந்தார். இவ்விவகாரம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு இன்று கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

    இது தொடர்பான உத்தரவை இன்று காலை பிறப்பித்த கொல்கத்தா ஐகோர்ட் தற்காலிக தலைமை நீதிபதி நிஷிடா மஹட்ரே, விரைவாக விசாரித்து இன்னும் 72 மணி நேரத்துக்குள் முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நிபந்தனை விதித்துள்ளார்.

    இந்நிலையில், கொல்கத்தா ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி இன்று தெரிவித்துள்ளார்.


    இதுதொடர்பாக, கொல்கத்தா நகரில் இன்று செய்தியாளரகளுக்கு பேட்டியளித்த அவர், இந்த விவகாரம் தொடர்பாக கொல்கத்தா போலீசார் உரிய விசாரணை நடத்த ஐகோர்ட் அனுமதிக்காமல் போனதும், விசாரணையை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்ததும் துரதிர்ஷ்டவசமானது என்று குறிப்பிட்டார்.

    உத்தரப்பிரதேசம் மாநில தேர்தல் முடிந்ததும் இந்த வழக்கின் விசாரணை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்படும் என மேற்கு வங்காளம் மாநில பா.ஜ.க. தலைவர் சமீபத்தில் கூறியிருந்தார். இதேபோல், சர்ச்சைக்குரிய அந்த வீடியோவும் பா.ஜ.க. தலைமை நிலையத்தில் இருந்துதான் வெளியிடப்பட்டது.

    இந்த வழக்கு விசாரணை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவிடும் என்பது மாநில பா.ஜ.க. தலைவருக்கு எப்படி முன்கூட்டியே தெரியும்? எனவே, ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் நாங்கள் வழக்கு தொடருவோம் என மம்தா தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×