search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக மீனவர்கள் பிரச்சினையில் நிரந்தர தீர்வு காண துரித நடவடிக்கை: சுஷ்மா சுவராஜ் அறிவிப்பு
    X

    தமிழக மீனவர்கள் பிரச்சினையில் நிரந்தர தீர்வு காண துரித நடவடிக்கை: சுஷ்மா சுவராஜ் அறிவிப்பு

    தமிழக மீனவர்கள் பிரச்சினையில் நிரந்தர தீர்வு காண்பதற்கு துரித கதியில் நடவடிக்கை எடுத்து வருவதாக பாராளுமன்றத்தில் பேசிய மத்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் கூறினார்.
    புதுடெல்லி:

    தமிழக மீனவர்கள் பிரச்சினையில் நிரந்தர தீர்வு காண்பதற்கு துரித கதியில் நடவடிக்கை எடுத்து வருவதாக பாராளுமன்றத்தில் பேசிய மத்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் கூறினார்.

    தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்கிறபோது அவர்கள் எல்லை தாண்டி வந்து விட்டார்கள் என்றொரு குற்றச்சாட்டை சுமத்தி, அவர்களை தாக்குவதையும், படகுகளை பறித்துக்கொள்வதையும் இலங்கை கடற்படை வழக்கமாக்கிவிட்டது. இதனால் தமிழக மீனவர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விடுகிறது.

    சமீபத்தில் ராமேசுவரம் பகுதி மீனவர் பிரிட்ஜோ, கடலுக்கு மீன் பிடிக்கச்சென்றபோது சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இந்த விவகாரம் குறித்து பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் மத்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் நேற்று தானாக முன்வந்து அறிக்கை அளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்திய மீனவர்கள் (தமிழக மீனவர்கள்) பிரச்சினை பற்றி கடந்த 2 ஆண்டுகளாக இலங்கை அதிபர் சிறிசேனாவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தபோதெல்லாம் எழுப்பி வந்துள்ளார். அதே போன்று கொழும்புக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நான் சென்றிருந்தபோது, மீனவர்கள் பிரச்சினையைப் பற்றி அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி மங்கள சமரவீராவை சந்தித்து விரிவாக விவாதித்தேன்.

    இந்த பிரச்சினையை, இயல்பாகவே மனிதாபிமான அடிப்படையில், மீனவ சமூகத்தின் வாழ்வாதாரம் மற்றும் சமூக பொருளாதார நடைமுறைகள் தொடர்பானவை என்பதால் கவனத்தில் கொண்டிருக்கிறோம்.

    இந்த பிரச்சினையில் நிரந்தர தீர்வு காண்பதற்காக துரித கதியில் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பாராளுமன்ற மக்களவையில் கடந்த 9-ந் தேதி அ.தி.மு.க. உறுப்பினர்கள், தமிழக மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறி எழுப்பிய பிரச்சினை பற்றியும் சுஷ்மா சுவராஜ் பதில் அளித்தார்.

    அப்போது அவர், “இந்திய மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டதில் தனக்கு தொடர்பு இல்லை என்று இலங்கை கடற்படை மறுத்துவிட்டது. மேலும், இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பகுதிக்குள் நுழைந்து விட்டாலும்கூட, கடற்படையின் ரோந்து படகுகள் துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு அதிகாரம் வழங்கப்படவில்லை என்று இலங்கை கடற்படை கூறி விட்டது” என்று கூறினார்.

    Next Story
    ×