search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல் கட்ட தேர்தல்: உத்தரபிரதேசத்தில் 73 தொகுதிகளுக்கு நாளை ஓட்டுப்பதிவு
    X

    முதல் கட்ட தேர்தல்: உத்தரபிரதேசத்தில் 73 தொகுதிகளுக்கு நாளை ஓட்டுப்பதிவு

    உத்தரபிரதேச மாநிலத்தில் முதல் கட்ட தேர்தலை சந்திக்கிற 73 தொகுதிகளில் நாளை (சனிக்கிழமை) ஓட்டுப்பதிவு நடக்கிறது. அங்கு பிரசாரம் ஓய்ந்தது.
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலத்தில் முதல் கட்ட தேர்தலை சந்திக்கிற 73 தொகுதிகளில் நாளை (சனிக்கிழமை) ஓட்டுப்பதிவு நடக்கிறது. அங்கு பிரசாரம் ஓய்ந்தது.

    நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேச சட்டசபையில் 403 இடங்கள் உள்ளன. அங்கு நாளை முதல் (11-ந் தேதி) அடுத்த மாதம் 8-ந் தேதிவரை 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக் கிறது. அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி அரசை வீழ்த்தி விட்டு, ஆட்சியை கைப்பற்றியே தீருவது என கங்கணம் கட்டிக்கொண்டு பாரதீய ஜனதா களம் இறங்கி இருக்கிறது. பகுஜன் சமாஜ் கட்சியும் மல்லுக்கட்டுகிறது. இவர்களுக்கு மத்தியில் ஆளும் சமாஜ்வாடி கட்சி-காங்கிரஸ் கட்சி கூட்டணியும் போராடி வருகிறது.

    முதல் கட்டமாக 15 மாவட்டங்களில் உள்ள 73 தொகுதிகளில் நாளை (11-ந் தேதி) தேர்தல் நடக்கிறது. இந்த தொகுதிகள் இன ரீதியில் பதற்றமானவை. 2 கோடியே 59 லட்சம் வாக்காளர்கள் தங்களுடைய ஜனநாயகக்கடமையை நிறைவேற்ற இருக்கிறார்கள். இவர் கள் 836 வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்க உள்ளனர். இந்த முதல் கட்ட தேர்தல், எந்தக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றப்போகிறது என்பதற்கு அச்சாரமாக அமையும். எனவே இது பாரதீய ஜனதா, பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாடி-காங்கிரஸ் கூட்டணி ஆகிய மூன்று தரப்புக்கும் அமில பரிசோதனையாக அமைந்துள்ளது. ராஷ்ட்ரீய லோக்தள தலைவர் அஜித் சிங்கும் 59 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளார். மாநில உயர்கல்வித்துறை மந்திரி சார்தா பிரதாப் சுக்லா, அஜித் சிங்கின் ராஷ்ட்ரீய லோக்தளம் சார்பில் போட்டியிடுவதால், நேற்று மந்திரிசபையில் இருந்து நீக்கப்பட்டார். சுக்லாவின் சரோஜினி நகர் தொகுதி, சமாஜ்வாடி கட்சியில் முலாயம் சிங்கின் நெருங்கிய உறவினர் அனுராக் யாதவுக்கு தரப்பட்டுள்ளது.

    இந்த தேர்தலில் 25 பிரபல வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் பாரதீய ஜனதா சார்பில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கின் மகன் பங்கஜ் சிங் (நொய்டா தொகுதி), தேசிய செய்தி தொடர்பாளர் ஸ்ரீகாந்த் சர்மா (மதுரா) முன்னாள் முதல்-மந்திரி கல்யாண்சிங்கின் பேரன் சந்தீப் சிங் (அட்ராலி), ஹூக்கும்சிங் எம்.பி.யின் மகள் மிரிகங்கா சிங் (கைரானா) குறிப்பிடத்தக்கவர்கள்.

    காங்கிரஸ் சட்டசபை கட்சி தலைவர் பிரதீப் மாதூர் (மதுரா), பீகார் முன்னாள் முதல்-மந்திரி லாலுபிரசாத் யாதவின் மருமகன் ராகுல் யாதவ் (சிகந்திராபாத்- சமாஜ்வாடி) உள்ளிட்டவர்களும் பிரபல வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெறுகின்றனர்.

    பாரதீய ஜனதாவுக்காக பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும், பகுஜன் சமாஜ் கட்சிக்காக மாயாவதியும், சமாஜ்வாடி-காங்கிரஸ் கூட்டணிக்காக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாடி கட்சி தலைவரும், முதல்-மந்திரியுமான அகிலேஷ் யாதவ், அவரது மனைவி டிம்பிள் யாதவ், ஜெயா பச்சன் ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு, இனமோதல்கள், உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் ஒழிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் பிரசாரத்தில் எதிரொலித்தன. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவரது மகள் பிரியங்கா காந்தி, சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் முலாயம் சிங் ஆகியோர் பிரசாரத்தில் ஈடுபடவில்லை.

    பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே மீரட், அலிகாரில் நடந்த பிரசார கூட்டங்களில் பங்கேற்று ஓட்டு சேகரித்த நிலையில், நேற்று காசியாபாத்தில் பிரசாரம் செய்தார்.

    இதேபோன்று அகிலேஷ் யாதவ், அவரது மனைவி டிம்பிள் யாதவ், மாயாவதி ஆகியோரும், வேட்பாளர்களும் நேற்று இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர். மாலை 6 மணிக்கு பிரசாரம் ஓய்ந்தது.

    முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 73 தொகுதிகளில் நாளை (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது. மாலை 5 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிகிறது. ஓட்டுப்பதிவுக்காக மின்னணு ஓட்டு எந்திரங்கள் மற்றும் உபகரணங்களை சம்மந்தப்பட்ட தொகுதிகளுக்கு கொண்டு செல்லும்பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. மேலும், தேர்தல் நடைபெறும் தொகுதிகள் இன ரீதியில் பதற்றமானவை என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 
    Next Story
    ×