search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேரறிவாளன் மறு ஆய்வு மனு தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
    X

    பேரறிவாளன் மறு ஆய்வு மனு தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

    மத்திய அரசின் ஒப்புதலை மாநில அரசு பெறவேண்டும் என்ற அம்சத்தை மறு ஆய்வு செய்யக்கோரி தமிழக அரசு மற்றும் பேரறிவாளன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யப்போவதாக தமிழக அரசு அறிவித்தது. இதை எதிர்த்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு, சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்ட வழக்குகளில் ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளை மாநில அரசு விடுதலை செய்ய முடியாது. மத்திய அரசின் ஒப்புதலை பெற்றே விடுவிக்க முடியும் என்று தீர்ப்பு வழங்கியது.

    மத்திய அரசின் ஒப்புதலை மாநில அரசு பெறவேண்டும் என்ற அம்சத்தை மறுஆய்வு செய்யக்கோரி தமிழக அரசு சார்பிலும், பேரறிவாளன் சார்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    இவை போன்ற மறு ஆய்வு மனுக்கள் திறந்த அமர்வுகளில் அல்லாது நீதிபதிகள் அறையில் நடைபெறும். அப்போது இரு தரப்பு வக்கீல்களும் அனுமதிக்கப்படாமல் நீதிபதிகள் மட்டுமே இந்த மறுஆய்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வார்கள்.

    இந்த மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், எஸ்.ஏ.போப்டே, ஏ.எம்.சப்ரே, யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்பாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

    விசாரணைக்கு பின்பு தமிழக அரசு மற்றும் பேரறிவாளன் ஆகியோரின் மறு ஆய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
    Next Story
    ×