search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய பட்ஜெட்: அரசியல் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?
    X

    மத்திய பட்ஜெட்: அரசியல் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?

    மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி இன்று தாக்கல் செய்துள்ள பட்ஜெட் குறித்து அரசியல் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்? என்பதை பார்ப்போம்.
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் இன்று நிதி மந்திரி அருண் ஜெட்லி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில், தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்தனர். ஆனால், அதில் எந்த மாற்றமும் செய்யப்படாமல், ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கான வரி 10 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

    இதனால் ஏற்படும் வருவாய் இழப்பை சரிக்கட்டும் வகையில் பணக்காரர்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பணப்பரிமாற்ற கட்டுப்பாடு, பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

    இந்த பட்ஜெட்டை வரவேற்று பிரதமர் மோடி மற்றும் ஆளுங்கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.

    பிரதமர் மோடி: ஏழைகளின் கரங்களை வலுப்படுத்தும் பட்ஜெட். ஊழல் மற்றும் கருப்பு பணத்தை நாட்டிலிருந்து முற்றிலும் அகற்ற இந்த பட்ஜெட் வழிவகை செய்கிறது.

    ராகுல் காந்தி (காங்.): பட்ஜெட்டில் எதிர்பார்த்த அம்சங்கள் இல்லை. அரசியல் கட்சிகளுக்கான நிதியை ஒழுங்குபடுத்துவது தொடர்பான நடவடிக்கைக்கு ஆதரவு அளிப்போம். ரெயில் பாதுகாப்பு அம்சங்கள் மோசமாக உள்ளன. அதுகுறித்து நிதிமந்திரி எதுவும் சொல்லவில்லை. பிரதமர் கூறிய புல்லட் ரெயில் திட்டமும் இல்லை. விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் வேலைவாய்ப்புக்கான திட்டங்கள் இல்லை.

    சுரேஷ் பிரபு (ரெயில்வே மந்திரி): இது புதுமையான பட்ஜெட். இதன் மூலம் புதிய சகாப்தம் ஆரம்பமாகியிருக்கிறது.

    அமித் ஷா: பெண்கள், ஏழைகளுக்கு ஆதரவான பட்ஜெட். அரசியலில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வருவோம் என்று 2014ல் கூறிய வாக்குறுதியை பிரதமர் மோடி நிறைவேற்றியுள்ளார்.

    நிதின் கட்காரி: கிராமப்புற மற்றும் வேளாண்துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அரசியலில் வெளிப்படைத் தன்மையை கொண்டு வரும். நமது பொருளாதாரத்தை முதலிடத்திற்கு கொண்டு வரும்.

    மணிஷ் திவாரி(காங்.): வெறும் வார்த்தை ஜாலம். வேலைவாய்ப்புகளை உருவாக்கும் அம்சங்கள் குறைந்த அளவே உள்ளது. ரெயில்வே துறைக்கு முக்கியத்துவம் இல்லை.

    உத்தவ் தாக்கரே: ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் என்ன? கடந்த ஆண்டின் பட்ஜெட் அறிவிப்புகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டதா?



    Next Story
    ×