search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதி மந்திரி ஜெட்லி
    X

    பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதி மந்திரி ஜெட்லி

    பாராளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி அருண் ஜெட்லி தாக்கல் செய்தார். இதில், பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. பாராளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரை ஆற்றினார். இதையடுத்து, மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கும், விபத்துகளில், இயற்கை பேரிடர்களில் பலியானவர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதன்பின்னர் 2016-17 நிதி ஆண்டுக்கான பொருளாதார ஆய்வு அறிக்கையை நிதி மந்திரி அருண் ஜெட்லி தாக்கல் செய்தார்.

    இதுதவிர ரூ.1,000, ரூ.500 நோட்டுகளை ஒழித்து வாபஸ் பெறுவது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டம், எதிரி சொத்து (திருத்தம் மற்றும் சரி பார்த்தல்) அவசர சட்டம், சம்பள பட்டுவாடா (திருத்தம்) அவசர சட்டம் ஆகியவை தாக்கல் செய்யப்பட்டன.

    கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதற்காக நிதியமைச்சகத்தில் இருந்து காலை 9 மணியளவில் பட்ஜெட் ஆவணங்களுடன் புறப்பட்ட அருண் ஜெட்லி, நிதியமைச்சக அதிகாரிகளுடன் குடியரசு தலைவர் மாளிகைக்கு சென்றார். குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து, பட்ஜெட் தாக்கலுக்கு ஒப்புதல் பெற்றார். பின்னர், பாராளுமன்றத்திற்கு வந்து சபாநாயகரிடமும் ஒப்புதல் பெற்றார்.

    காங்கிரஸ் எம்.பி. அகமது காலமானதால் பட்ஜெட்டை ஒத்திவைக்க வேண்டும் என்று பல்வேறு தலைவர்கள் வலியுறுத்தினர். ஆனால், அகமது மறைவு கவலை அளிப்பதாகவும், அதேசமயம் பட்ஜெட் திட்டமிட்டபடி தாக்கல் செய்யப்படும் எனவும் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார். மேலும், பட்ஜெட்டை நிர்ணயிக்கப்பட்ட தேதியில் தாக்கல் செய்வது அரசியலமைப்பு கடமை என்பதை மனதில் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

    இதையடுத்து பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் முடிந்ததும், பாராளுமன்றக் கூட்டம் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் காங்கிரஸ் உறுப்பினர் இ.அகமது மறைவுக்கு அவையில் இரங்கல் தெரிவித்து மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    அதன்பின்னர் நிதி மந்திரி அருண் ஜெட்லி, காலை 11.10 மணிக்கு 2017-18 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். முதல் முறையாக பொது பட்ஜெட்டுடன் ரெயில்வே பட்ஜெட்டும் இணைத்து ஒரே பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது. இதில், பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
    Next Story
    ×