search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட் தாக்கல்
    X

    பாராளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட் தாக்கல்

    பாராளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதில் தனி நபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதில் தனி நபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. பாராளுமன்றத்தின் இரு அவைகளின் (மக்களவை, மேல்-சபை) கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆங்கிலத்தில் உரை ஆற்றினார். அவரது உரையில் அரசின் நலத் திட்டங்கள் இடம் பெற்றிருந்தன.

    உரையைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் இருந்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விடைபெற்றார். அவரை பிரதமர் நரேந்திர மோடி, பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி அனந்த குமார் வழியனுப்பி வைத்தனர்.

    அதைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில், மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கும், விபத்துகளில், இயற்கை பேரிடர்களில் பலியானவர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

    அதைத் தொடர்ந்து 2016-17 நிதி ஆண்டுக்கான பொருளாதார ஆய்வு அறிக்கையை நிதி மந்திரி அருண் ஜெட்லி தாக்கல் செய்தார்.

    தொடர்ந்து ரூ.1,000, ரூ.500 நோட்டுகளை ஒழித்து வாபஸ் பெறுவது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்தை பாராளுமன்றத்திலும், மேல்-சபையிலும் பாராளுமன்ற விவகாரங்கள் துறையின் ராஜாங்க மந்திரி எஸ்.எஸ்.அலுவாலியா தாக்கல் செய்தார்.

    இதே போன்று, எதிரி சொத்து (திருத்தம் மற்றும் சரி பார்த்தல்) அவசர சட்டம், சம்பள பட்டுவாடா (திருத்தம்) அவசர சட்டம் ஆகியவற்றையும் பாராளுமன்றத்தில் அவர் தாக்கல் செய்தார்.

    மேல்-சபையில் இந்த அவசர சட்டங்களை பாராளுமன்ற விவகாரங்கள் துறையின் மற்றொரு ராஜாங்க மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி தாக்கல் செய்தார்.

    முன்னதாக பாராளுமன்றத்துக்கு வந்தபோது, பிரதமர் நரேந்திர மோடி நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், “பாராளுமன்ற நடவடிக்கைகளில் இடையூறு ஏற்படாது என்பதை உறுதி செய்கிற வகையில், அரசு சார்பில் அனைத்து கட்சிகளுடனும் விவாதிக்கப்பட்டது. சமூக நலன்கள் பற்றி விரிவான விவாதங்கள் நடத்தப்பட வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

    அவர், “பட்ஜெட் முதன் முதலாக பிப்ரவரி 1-ந் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. சமூக நலனுக்காக அனைத்து தரப்பினரும் பாராளுமன்றத்தில் ஒன்றுபட்டு வருவார்கள் என நான் நம்புகிறேன்” என குறிப்பிட்டார்.

    மேலும் அவர், “இன்று (நேற்று) புதிய பாரம்பரியம் தொடங்குகிறது. முதலில், பட்ஜெட் கிட்டத்தட்ட ஒரு மாத காலம் முன்கூட்டியே தாக்கல் ஆகிறது. இரண்டாவது, பொது பட்ஜெட்டுடன் ரெயில்வே பட்ஜெட் இணைக்கப்படுகிறது. இவற்றின் மீதும் விவாதங்கள் நடத்தப்படும். அவை ஆக்கப்பூர்வமானவையாக அமைந்து, நல்ல பலன்களைத் தரும்” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

    முன்பெல்லாம் பட்ஜெட் மாலை நேரத்தில் தாக்கல் செய்யப்பட்டு வந்ததையும், அந்த வழக்கம் வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத் தில் காலைக்கு மாற்றப்பட்டதையும் அவர் நினைவுகூர்ந்தார்.

    தகவல், ஒலிபரப்புத்துறை மந்திரி வெங்கையா நாயுடு நிருபர்களிடம் பேசுகையில், “பட்ஜெட் கூட்டத்தொடரின் முக்கியத்துவத்தை அனைத்து கட்சிகளும் உணர்வார்கள்; அவர்கள் அர்த்தமுள்ள வகையில், ஆக்கப்பூர்வமாக பங்கேற்க தயாராவார்கள் என்று நான் நம்புகிறேன்” என்று கூறினார்.

    தொடர்ந்து அவர் பேசும்போது, “உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் ஒழிப்பு உள்ளிட்ட எந்தவொரு பிரச்சினையிலும் விவாதம் நடத்த அரசு தயாராக உள்ளது. மறைப்பதற்கு அல்லது கவலைப்படுவதற்கு அரசிடம் ஒன்றும் இல்லை” என்று அவர் குறிப்பிட்டார்.

    இன்று காலை பாராளுமன்றத்தில் நிதி மந்திரி அருண் ஜெட்லி, 2017-18 நிதி ஆண்டுக் கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

    பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிற முக்கிய அம்சங்கள்:-

    * தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு தற்போதைய ரூ.2½ லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயரக்கூடும்.

    * வீட்டுக்கடன் தொகையை திரும்ப செலுத்துதல், வட்டி திரும்ப செலுத்துதல் ஆகியவற்றில் வரிக்கழிவு வழங்குவதற்கான உச்சவரம்பு உயர்த்தப்படலாம்.

    * ரொக்க பணமில்லா பரிமாற்றத்தை ஊக்குவிக்கிற வகையில் பொதுமக்களுக்கு புதிய சலுகைகள் அறிவிக்கப்படலாம்.

    * பங்குச்சந்தையில் இருந்து வருகிற மூலதன ஆதாயங்கள் மீது வரி விதிக்கப்படலாம்.

    * ஓய்வூதியதாரர்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படலாம். இதன்மூலம் வருமான வரித்துறையினரின் பணிச்சுமையும் குறையும்.

    * சேவை வரிவிகிதம் மாற்றி அமைக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.

    * ராணுவத்துக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படும்.

    * மூத்த குடிமக்கள், பெண்களுக்கு சலுகை தரும் அறிவிப்புகள் வெளியாகலாம்.

    * புதிய ரெயில்கள், பயணிகளுக்கான வசதிகள் அறிவிக்கப்படலாம். பயணிகள் கட்டணம், சரக்கு கட்டணம் சற்றே உயர்த்தப்படலாம். 
    Next Story
    ×