search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சட்டவிரோத பணப் பரிமாற்றம் - ஜார்கண்ட் மாநில முன்னாள் மந்திரிக்கு 7 ஆண்டு சிறை
    X

    சட்டவிரோத பணப் பரிமாற்றம் - ஜார்கண்ட் மாநில முன்னாள் மந்திரிக்கு 7 ஆண்டு சிறை

    சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்த வழக்கில் ஜார்கண்ட் மாநில முன்னாள் மந்திரிக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
    ராஞ்சி:

    சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்த வழக்கில் ஜார்கண்ட் மாநில முன்னாள் மந்திரிக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

    ஜார்கண்ட் மாநிலத்தில் முன்னாள் முதல்-மந்திரி மதுகோடா தலைமையிலான மந்திரி சபையில் 2006-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை சுற்றுலாத்துறை மந்திரியாக பதவி வகித்தவர், ஹரி நாராயண் ராய். இவர், முன்னாள் முதல்-மந்திரிகளான அர்ஜூன் முண்டா மற்றும் சிபுசோரன் ஆகியோருடைய மந்திரி சபையிலும் இடம் பெற்றவர் ஆவார்.

    இவர், 3 கோடியே 72 லட்சம் ரூபாயை சட்டவிரோதமாக தனது மனைவி மற்றும் சிலருக்கு பரிமாற்றம் செய்ததாக மத்திய அமலாக்கத்துறை 2009-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இவர் மீது வழக்கு பதிவு செய்தது. இதையடுத்து அமலாக்கத்துறை பலரை கைது செய்ததுடன் பரிமாற்றம் செய்யப்பட்ட பணத்தையும் முடக்கியது.

    ராஞ்சியில் உள்ள அமலாக்கத்துறை சிறப்பு கோர்ட்டில் கடந்த 6 வருடங்களாக இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது. கடந்த 16-ந்தேதி வழக்கின் இறுதி வாதங்கள் நிறைவடைந்தன. இந்த வழக்கில் நேற்று முன்தினம் சிறப்பு கோர்ட்டு நீதிபதி பி.கே.திவாரி தீர்ப்பு கூறினார். அப்போது, ஹரி நாராயண் ராய் குற்றவாளி என்று அறிவித்த நீதிபதி அவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்தார்.

    இது தவிர ரூ.5 லட்சம் அபராதமும் அவருக்கு விதிக்கப்பட்டது. அபராதத்தை கட்டத் தவறினால், மேலும் 18 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்கவேண்டும் என்றும் தனது தீர்ப்பில் நீதிபதி கூறி உள்ளார்.

    இதுபற்றி அமலாக்கத்துறை இயக்குனர் கர்னால்சிங் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக 2002-ம் ஆண்டு இயற்றப்பட்டு 2005-ம் ஆண்டு இணைக்கப்பட்ட சட்ட விரோத பணபரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் இந்த வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

    இந்த சட்டம் இயற்றப்பட்டு நடைமுறைக்கு வந்த பிறகு இதன் அடிப்படையில் ஒருவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு இருப்பது இதுவே முதல் முறை ஆகும். எனவே இது வரலாற்று சிறப்பு மிக்கதொரு தீர்ப்பாகும்.

    நாட்டுக்கும், சமூகத்திற்கும் எதிராக சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்வோர் மீது அமலாக்கத்துறை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×