search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீடிக்கிறது கம்பளா தடை: ஜல்லிக்கட்டு தீர்ப்புக்காக காத்திருக்கும் கர்நாடக உயர்நீதிமன்றம்
    X

    நீடிக்கிறது கம்பளா தடை: ஜல்லிக்கட்டு தீர்ப்புக்காக காத்திருக்கும் கர்நாடக உயர்நீதிமன்றம்

    கர்நாடக மாநிலத்தின் பாரம்பரிய எருமை பந்தயத்திற்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடை தொடரும் என்றும், ஜல்லிக்கட்டு தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு முடிவு செய்வதாகவும் கர்நாடக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
    பெங்களூர்:

    தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தீவிரமடைந்த நிலையில், சட்டமன்றத்தில் இதுதொடர்பாக சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதேபோன்று, கர்நாடக மாநிலத்தில் கடலோர மாவட்டங்களில் பாரம்பரிய கம்பளா போட்டிக்கும் (எருமை பந்தயம்) தடையை நீக்க அவசர சட்டம் கொண்டு வர வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றுவருகிறது.

    இந்நிலையில், கம்பளா தொடர்பான வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்குகளில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருப்பதாகவும், அந்த தீர்ப்புக்குப் பிறகே கம்பளா குறித்து முடிவு செய்யப்படும் என்றும் தலைமை நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார். அத்துடன் இவ்வழக்கின் விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தார். அதுவரையில் கம்பளா மீதான இடைக்கால தடை நீடிக்கும்.

    ஜல்லிக்கட்டுக்கு தமிழகத்தில் நிரந்தர சட்டம் இயற்றப்பட்டதையடுத்து மத்திய அரசு பிறப்பித்த அசர சட்ட ஆணையை வாபஸ் பெறுவதாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதேசமயம், தமிழக அரசின் சட்டத்தினை எதிர்த்து உச்ச நீதிமன்றதில் பல்வேறு அமைப்புகள் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த வழக்குகள் அனைத்தும் நாளை விசாரணைக்கு வருகிறது.

    நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, ஜல்லிக்கட்டு தொடர்பான அனைத்து மனுக்களையும் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

    நீதிமன்ற தீர்ப்பால் அதிருப்தி அடைந்த கம்பளா கமிட்டி, மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது. அநேகமாக நாளை முதல் இந்த போராட்டம் நடைபெறலாம் என தெரிகிறது.

    மேலும், மாநில அரசுதான் தங்களுக்கு ஒரே நம்பிக்கை என்றும், மாநில அரசு கம்பளா நடத்துவதற்கான அவசர சட்டத்தை பிறப்பிக்க வேண்டும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் கம்பளா கமிட்டி தலைவர் அசோக் பாய் தெரிவித்தார்.
    Next Story
    ×