search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் ஊழலை ஒழித்து விட முடியாது: ப.சிதம்பரம் பேச்சு
    X

    பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் ஊழலை ஒழித்து விட முடியாது: ப.சிதம்பரம் பேச்சு

    பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் ஊழலை ஒழித்து விட முடியாது என முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
    ஐதராபாத்:

    பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் ஊழலை ஒழித்து விட முடியாது என முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

    கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டு புழக்கத்தை ஒழிக்கும் நோக்கிலும், தீவிரவாதத்துக்கு நிதியுதவியை தடை செய்வதற்காகவும் மத்திய அரசு 1,000, 500 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற்றது. கடந்த நவம்பர் 8-ந் தேதி அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்துக்கு மக்களிடையே ஆதரவும், எதிர்ப்பும் காணப்படுகிறது.

    ஆனால் மத்திய அரசு மேற்கொண்டுள்ள பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் ஊழலை ஒழிக்க முடியாது என முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார். ஐதராபாத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் பங்கேற்று உரையாற்றிய அவர் இது குறித்து கூறியதாவது:-

    கருப்பு பணம் மற்றும் கள்ளநோட்டு புழக்கம், தீவிரவாதத்துக்கு நிதியுதவி அளித்தல் போன்றவற்றுக்கு முற்றுப்புள்ளிவைப்பதற்காக பணமதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதனால் மேற்கண்ட பிரச்சினைகள் முடிவுக்கு வந்து விடும் என்று மக்களும் நினைத்தனர்.

    பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கான நோக்கம் நல்லதுதான். ஆனால் இந்த நோக்கம் எதுவும் நிறைவேறவில்லை. பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் ஊழல் மற்றும் கருப்பு பணத்தை ஒழிக்க முடியாது.

    நாட்டுக்கு எவ்வளவு ரூபாய் நோட்டுகள் தேவை? எவ்வளவு நோட்டுகள் அச்சடிக்க வேண்டும்? என்பது ரிசர்வ் வங்கிக்கான விவகாரமே தவிர, அரசியல்வாதிகளுக்கானது அல்ல. குறிப்பிட்ட மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளை சட்டப்பூர்வமாக மதிப்பிழக்க செய்யும்போது, அது குறித்த அனைத்து அதிகாரங்களையும் ரிசர்வ் வங்கிக்கே வழங்க வேண்டும். இந்த விவகாரத்தில் அரசுக்கு ரிசர்வ் வங்கி பரிந்துரைக்க வேண்டும். அதற்கேற்ப அரசு செயல்பட வேண்டும்.

    ஆனால் இங்கு அரசுதான் ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரைத்து உள்ளது. இது தொடர்பாக அரசிடம் இருந்து வந்த கடிதத்தையும் ரிசர்வ் வங்கி ஆய்வு செய்திருக்க வேண்டும். ஆனால் மறுநாளே ரிசர்வ் வங்கியின் இயக்குனர் குழு கூட்டத்தை கூட்டி முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறினார். 
    Next Story
    ×