search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பீகார் படகு விபத்து: பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு - குடும்பத்தாருக்கு தலா ரூ.6 லட்சம் இழப்பீடு
    X

    பீகார் படகு விபத்து: பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு - குடும்பத்தாருக்கு தலா ரூ.6 லட்சம் இழப்பீடு

    பீகார் மாநிலத்தில் படகு விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 6 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் நேற்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தலைநகர் பாட்னா அருகே பிரமாண்டமான பட்டம் பறக்க விடும் விழா நடந்தது. சுமார் 75 ஆயிரம் பேர் அந்த விழாவில் கலந்து கொண்டனர்.

    பட்டம் பறக்க விடும் விழாவுக்காக பாட்னா அருகில் உள்ள மக்கள் படகுகள் மூலம் காவிரி நதியின் கரையை கடந்து வந்திருந்தனர். அதிக அளவில் மக்கள் திரண்டதால் மாநில அரசே இலவசமாக படகு சேவையை இயக்கியது

    மாலை திருவிழா முடிந்ததும் குளிர் அதிகமாக காணப்பட்டது. இதனால் குளிரில் நடுங்கியவர்கள் போட்டி போட்டு முந்தி கொண்டு படகுகளில் ஏறினார்கள். சீக்கிரம் வீடு திரும்ப வேண்டும் என்பதற்காக படகுகளில் அளவுக்கு அதிகமானவர்கள் ஏறினார்கள்.

    மாலை 5.45 மணிக்கு புறப்பட்ட ஒரு படகில் சுமார் 50 பேர் ஏறி அமர்ந்தனர். அந்த படகில் 25 பேர் தான் பயணம் செய்ய முடியும் என்ற நிலையில் அதிகமானவர்கள் ஏறியதால் படகு தள்ளாடியது.

    கங்கை ஆற்றின் நடுப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது தண்ணீரின் திடீர் வேகத்தால் படகு அங்கும் இங்குமாக ஆடியது. அதிக பாரம் காரணமாக திடீரென படகு கவிழ்ந்தது. படகில் இருந்த சுமார் 50 பேரும் தண்ணீரில் மூழ்கினார்கள்.

    நீச்சல் தெரிந்தவர்கள் மட்டும் நீச்சலடித்து கரை திரும்பினார்கள். மற்றவர்கள் தண்ணீரில் மூழ்கி பலியானார்கள். சிலர் கங்கை ஆற்றின் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

    இதுபற்றி தெரிய வந்ததும் மீட்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. தேசிய பேரிடர் மீட்புக் குழுவின் 3 படைகளும், மாநில பேரிடர் மீட்புக் குழுவினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். படகு கவிழ்ந்த என்.ஐ.டி. கேட் பகுதி முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

    இன்று (ஞாயிறு) காலை வரை 24 பேர் உடல்கள் மீட்கப்பட்டன. நேற்றிரவு கடும் குளிர் காணப்பட்டதால் மீட்புப்பணிகள் தடைப்பட்டன.

    இன்று காலை முதல் மீண்டும் மீட்புப்பணிகள் நடந்தன. எனவே பலி எண்ணிக்கை உயரும் என்று தெரிகிறது.

    படகு விபத்து தகவல் அறிந்ததும் முதல்-அமைச்சர் நிதிஷ்குமார் உயர் அதிகாரிகளை சம்பவ இடத்துக்கு செல்ல உத்தரவிட்டார். விபத்து குறித்து உயர்மட்ட குழு விசாரணைக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார். படகு விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

    படகு விபத்தில் 24 பேர் பலியான தகவல் அறிந்ததும் பிரதமர் மோடி அதிர்ச்சி அடைந்தார். பலியானவர்கள் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து அவர் டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார்.

    மேலும் பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 2 லட்சமும் காயம் அடைந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

    படகு உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் மாஜிஸ்திரேட் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்.

    பொங்கல் தினத்தன்று பீகாரில் நடந்த விபத்து பாட்னா அருகில் உள்ள மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×