search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜாமீன் இல்லை: திரிணாமுல் காங். எம்.பி. சுதீப் பண்டோபாத்யாய்க்கு 6 நாட்கள் சி.பி.ஐ. காவல்
    X

    ஜாமீன் இல்லை: திரிணாமுல் காங். எம்.பி. சுதீப் பண்டோபாத்யாய்க்கு 6 நாட்கள் சி.பி.ஐ. காவல்

    நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சுதீப் பண்டோபாத்யாயை 6 நாட்கள் சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரணை நடத்த கோர்ட் அனுமதி அளித்தது.
    கொல்கத்தா:

    சாரதா நிதி நிறுவன மோசடி போன்று ரோஸ் வேலி நிதி நிறுவனத்திலும் பல கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளது. இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பல்வேறு தலைவர்களுக்கு இந்த மோசடியில் தொடர்பு உள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது.

    இந்நிலையில், ரோஸ் வேலி நிதிநிறுவன மோசடி தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுதீப் பண்டோபாத்யாய் கைது செய்யப்பட்டார். கொல்கத்தாவில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பிறகு அவரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.

    திரிணாமுல் காங்கிரசின் மற்றொரு எம்.பி.யான தபஸ் பால் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிபிஐ விசாரணைக் காவலில் உள்ள நிலையில் சுதீப்பும் கைது செய்யப்பட்டதால் அக்கட்சியின் தொண்டர்கள் சி.பி.ஐ.க்கு எதிராகவும், பா.ஜ.க.வுக்கு எதிராகவும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில், கைது செய்யப்பட்ட சுதீப் பண்டோபாத்யாய் இன்று புவனேஸ்வரில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரது சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதேசமயம் அவரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற வேண்டியுள்ளதால் விசாரணைக் காவலுக்கு அனுப்ப வேண்டும் என சி.பி.ஐ. கோரிக்கை விடுத்தது.

    இதையடுத்து சுதீப்பின் ஜாமீன் மனுவை ரத்து செய்த நீதிமன்றம், 6 நாட்கள் அவரை சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தது.
    Next Story
    ×