search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அருணாச்சல பிரதேச முதல்-மந்திரி சஸ்பெண்டு: புதிய முதல்வராக டக்கம் பாரியோ தேர்வாகிறார்
    X

    அருணாச்சல பிரதேச முதல்-மந்திரி சஸ்பெண்டு: புதிய முதல்வராக டக்கம் பாரியோ தேர்வாகிறார்

    அருணாச்சல பிரதேச முதல்-மந்திரி அதிரடியாக சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். புதிய முதல்- மந்திரியாக டக்கம்பாரியோ தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அந்த கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

    இட்டாநகர்:

    வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேச சட்டசபை பல்வேறு அரசியல் திருப்பங்களை கொண்டுள்ளது.

    60 தொகுதிகளை கொண்ட அந்த மாநிலத்துக்கு அருணாச்சல் மக்கள் கட்சியை சேர்ந்த பெமாகாண்டு தற்போது முதல்-மந்திரியாக உள்ளார்.

    சுப்ரீம் கோர்ட்டு தலையீட்டால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெமாகாண்டு கடந்த ஜூலை 17-ந்தேதி முதல்-மந்திரியாக பொறுப் பேற்றுள்ளார். செப்டம்பர் 16-ந்தேதி வரை அந்த கட்சியில் இருந்தார்.

    தனது ஆதரவு எம். எல். ஏ.க்களுடன் அவர் அருணாச்சல் மக்கள் கட்சியுடன் இணைந்து தொடர்ந்து முதல்வராக பணியாற்றினார். அருணாச்சல் மக்கள் கட்சி பா.ஜனதா கூட்டணியில் இருக்கிறது.

    இந்த நிலையில் கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாக முதல்-மந்திரி பெமாகாண்டு கட்சியில் இருந்து அதிரடியாக சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

    அவரோடு துணை முதல்- மந்திரி சவ்னாமேயன் மற்றும் 5 எம்.எல்.ஏ.க்களும் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.

    கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் முதல்- மந்திரி பெமாகாண்டு மற்றும் 6 எம்.எல்.ஏ,க்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தற்காலிகமாக சஸ்பெண்டு செய்வதாகவும், அவர்கள் நடத்தும் கூட்டங்களில் கட்சியினர் பங்கேற்ககூடாது என்றும் அருணாச்சல் மக்கள் கட்சி தலைவர் கபியா பென்ஜியா உத்தரவிட்டுள்ளார்.

    மேலும் தங்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுக்கு சட்டசபையில் தனி இடம் ஒதுக்க வேண்டும் என்றும் அவர் மாநில சட்ட சபை தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    நாட்டின் இளம் வயது முதல்வர் என்ற பெருமை பெற்ற பெமாகாண்டு அந்த பதவியில் தொடர்ந்து நீடிப்பது கேள்விகுறியே. ஒழுங்கு நடவடிக்கையின் அடுத்தக்கட்டமாக அவரை முதல்-மந்திரி பதவியில் இருந்து விலக்கப்படுகிறார்.

    இதற்கிடையே அருணாச்சல பிரதேச புதிய முதல்- மந்திரியாக டக்கம்பாரியோ தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அந்த கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

    டக்கம்பாரியோ தற்போது மந்திரியாக உள்ளார். அவர் அம்மாநிலத்தின் பணக்கார எம்.எல்.ஏ. ஆவார். தேர்தலின்போது அவரின் சொத்து மதிப்பு ரூ.187 கோடி என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    Next Story
    ×