search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    235 தொகுதிக்கான போட்டி வேட்பாளர் பட்டியலை அகிலேஷ் யாதவ் வெளியிட்டதை படத்தில் காணலாம்.
    X
    235 தொகுதிக்கான போட்டி வேட்பாளர் பட்டியலை அகிலேஷ் யாதவ் வெளியிட்டதை படத்தில் காணலாம்.

    உ.பி.யில் உச்சக்கட்ட மோதல்: அகிலேஷ் யாதவ், சிவபால் யாதவ் தனித்தனியாக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

    உத்தரபிரதேச மாநிலத்தில் ஆளும் கட்சியான சமாஜ்வாடி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் மற்றும் சிவபால் யாதவ் தனித்தனியாக வெளியிட்டதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநில சட்டசபைக்கு இன்னும் 3 அல்லது 4 மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.

    அடுத்த மாதம் தேர்தல் அட்டவணை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தேர்தலில் ஆளும் சமாஜ் வாடி, பகுஜன் சமாஜ், பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே நான்கு முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது.

    உத்தரபிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்பதில் இந்த நான்கு கட்சிகளும் வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் குதித்துள்ளன. ஆட்சியைப் பிடிப்பதற்காக 6 மாதங்களுக்கு முன்பே பிரசாரங்களும் தொடங்கி விட்டன.

    ஷீலாதீட்சித்தை முதல்- மந்திரி வேட்பாளராக அறிவித்து காங்கிரஸ் கட்சி முதலில் பிரசாரத்தை தீவிரப்படுத்தியது. பா.ஜ.க. முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்யாமலே மூத்த தலைவர்களை களத்தில் இறக்கி விட்டுள்ளது. பிரதமர் மோடியும் 3 தடவை உத்தரபிரதேசத்துக்கு சென்று வந்து விட்டார்.

    இந்த நிலையில் முலாயம் சிங் யாதவின் ஆளும் சமாஜ் வாடி கட்சியில் அதிகார மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. முலாயம் சிங்கின் மகனும், முதல்- மந்திரியுமான அகிலேஷ் யாதவுக்கும், முலாயம்சிங்கின் தம்பியும், மாநில சமாஜ்வாடி தலைவருமான சிவபால் யாதவுக்கும் அதிகார மோதல் ஏற்பட்டுள்ளது.

    கட்சியில் தங்கள் செல்வாக்கை நிலை நிறுத்துவதற்காக அகிலேஷ், சிவபால் இருவரும் மொத்தம் உள்ள 403 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்து பட்டியல் கொடுத்தனர். அந்த இரு பட்டியல்களையும் ஆய்வு செய்த சமாஜ்வாடி நிறுவனர் முலாயம்சிங் யாதவ் 325 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை நேற்று முன்தினம் வெளியிட்டார்.

    அந்த 325 வேட்பாளர்களில் தனது ஆதரவாளர்களுக்கு டிக்கெட் கொடுக்காமல் புறக்கணிக்கப்பட்டிருப்பதை கண்டு அகிலேஷ் கடும் ஆவேசம் அடைந்தார். முலாயம்சிங்கை சந்தித்து அவர் தனது அதிருப்தியை வெளியிட்டார்.

    இதையடுத்து நேற்று அவர் தனது ஆதரவாளர்களை சந்தித்து பேசினார். அகிலேஷ் தீவிரமாக எதிர்ப்பு தெரிவித்த அன்சாரிக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது பற்றி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அப்போது புதிய வேட்பாளர் பட்டியலை வெளியிட அகிலேஷ் முடிவு செய்தார்.

    அதன்படி முழுக்க முழுக்க தனது ஆதரவாளர்களைக் கொண்ட புதிய வேட்பாளர் பட்டியலை அகிலேஷ் தயாரித்தார். அதில் 235 போட்டி வேட்பாளர்கள் இடம் பெற்றிருந்தனர். அந்த போட்டி வேட்பாளர் பட்டியலை அகிலேஷ் நேற்று வெளியிட்டார்.

    இதை அறிந்ததும் முலாயம்சிங்கும், சிவபால் யாதவும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அகிலேசின் போட்டி வேட்பாளர்கள் அறிவிப்பால் சமாஜ்வாடி தொண்டர்கள் மத்தியிலும் கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது சமாஜ்வாடியின் வெற்றி வாய்ப்பை பாதிக்கும் என்று அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

    இந்த நிலையில் அகிலேஷ் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் அதிரடியை சிவபால் யாதவ் மேற்கொண்டார். அவர் 68 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.

    மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் 325 இடங்களுக்கான வேட்பாளர்களை முலாயம் அறிவித்த நிலையில் 78 தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்படாமல் இருந்தது. அந்த 78 இடங்களில் 68 இடங்களுக்குத்தான் சிவபால் நேற்றிரவு வேட்பாளர்களை அறிவித்துள்ளார்.

    எனவே முலாயமும், சிவபாலும் சேர்ந்து இன்னும் 10 தொகுதிகளுக்குத்தான் வேட்பாளர்களை அறிவிக்க வேண்டியதுள்ளது.

    அகிலேசும், சிவபாலும் போட்டி போட்டு வேட்பாளர்களை அறிவித்திருப்பது சமாஜ்வாடியில் பிளவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இதனால் தற்போது சமாஜ்வாடியில் கடும் குழப்பம் நிலவுகிறது.

    குறிப்பாக சிவபால் ஆதரவாளர்களை சமாஜ் வாடியில் இருந்து அகிலேஷ் நீக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமாஜ்வாடி மீது அதிருப்தி அடைந்துள்ள பொதுமக்களின் வாக்குகள் ஒன்று பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக மாறும் அல்லது மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஆதரவாக மாறும் என்று அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

    Next Story
    ×