search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2-வது திருமணத்துக்கு மறுத்து மாயமான பள்ளி ஆசிரியர்
    X

    2-வது திருமணத்துக்கு மறுத்து மாயமான பள்ளி ஆசிரியர்

    பள்ளி ஆசிரியர் ஒருவர் 2-வது திருமணத்துக்கு மறுப்புத் தெரிவித்து, தன்னுடைய இரு குழந்தைகளுடன் தலைமறைவாகி விட்டார்.
    ஸ்ரீகாளஹஸ்தி:

    பள்ளி ஆசிரியர் ஒருவர் 2-வது திருமணத்துக்கு மறுப்புத் தெரிவித்து, தன்னுடைய இரு குழந்தைகளுடன் தலைமறைவாகி விட்டார். திருமணம் நிச்சயிக்கப்பட்ட மணப்பெண், தீர்வு கிடைக்கும் வரை ஊருக்குச் செல்ல மாட்டேன் என்று பி.கொத்தகோட்டாவில் தங்கி போராட்டத்தில் ஈடுபட்டார்.

    பெத்தத்திப்பசமுத்திரம் மண்டலம் உப்பரவான்ட்லப்பள்ளியைச் சேர்ந்தவர் கங்காதர் (வயது 30). இவர், பி.கொத்தகோட்டாவில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவருக்கு திருமணம் ஆகி ஒரு மகளும், மகனும் உள்ளனர். அவரின் மனைவி உடல் நலப்பாதிப்பால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென இறந்து விட்டார். மனைவி இறந்த ஒரு ஆண்டுக்குள் பாரம்பரிய முறைபடி 2-வது திருமணம் செய்து விட வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தினர். அதற்கான ஏற்பாடுகளை கங்காதரின் உறவினர்கள் செய்து வந்தனர்.

    கடப்பா மாவட்டம் ராயச்சோட்டியைச் சேர்ந்த சொரூபராணி (25) என்பவரை மணப்பெண்ணாக தேர்ந்தெடுத்தனர். இரு வீட்டாரும் அவர்களுக்கு திருமணம் நிச்சயம் செய்து, கடந்த 23-ந்தேதி பி.கொத்தகோட்டாவில் உள்ள ஒரு சிவன் கோவிலில் கல்யாணமும், அங்குள்ள ஒரு மண்டபத்தில் திருமண வரவேற்பும் நடத்த ஏற்பாடுகளை செய்தனர்.

    இந்தநிலையில் கடந்த 22-ந்தேதி இரவு மணப்பெண் வீட்டார் ராயச்சோட்டியில் இருந்து பி.கொத்தகோட்டாவுக்கு வந்தனர். அன்று இரவே கங்காதர் தனது இரு குழந்தைகளை அழைத்துக் கொண்டு திடீரென மாயமாகி விட்டார். இதனால் அவர்களின் திருமணம் தடைப்பட்டது. இரு வீட்டாரும் கங்காதரின் செல்போனுக்குத் தொடர்பு கொண்டு பேசினர். அதற்கு அவர், தனக்கு 2-வது திருமணம் செய்ய விருப்பம் இல்லை எனக்கூறி, கல்யாணத்துக்கு மறுத்ததாக கூறப்படுகிறது.

    ஆனால் மணப்பெண் சொரூபராணி, இதற்கு ஒரு தீர்வு கிடைக்காமல் பி.கொத்தகோட்டாவை விட்டு ஊருக்குச் செல்ல மாட்டேன் எனக் கூறி உறவினர்கள் 25 பேருடன் பி.கொத்தகோட்டாவில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்கினார். இதுகுறித்து அவர் பி.கொத்தகோட்டா போலீசில் கங்காதர் மீது புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் மல்லிகார்ஜுனா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மணப்பெண் சொரூபராணி பி.கொத்தகோட்டாவை விட்டு போகமாட்டேன் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×