search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மனித வாழ்க்கையை இணைக்கும் பாலமாக மொழிகளும், மதங்களும் இருக்க வேண்டும்: பிரணாப் முகர்ஜி
    X

    மனித வாழ்க்கையை இணைக்கும் பாலமாக மொழிகளும், மதங்களும் இருக்க வேண்டும்: பிரணாப் முகர்ஜி

    மனித வாழ்க்கையை இணைக்கும் பாலமாக மொழிகளும், மதங்களும் இருக்க வேண்டும் என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.
    பெங்களூரு:

    பெங்களூரு கே.ஆர்.புரத்தில் உள்ள ஐ.டி.ஐ. கல்வி நிலையத்தில் 89-வது அகில இந்திய பெங்காலி மொழி இலக்கிய மாநாடு நேற்று காலை நடைபெற்றது. இந்த மாநாட்டை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி குத்து விளக்கு ஏற்றி தொடங்கிவைத்தார்.

    பின்னர் மாநாட்டில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசியதாவது:-

    இந்தியாவின் தலை சிறந்த கவிஞராக விளங்கியவர் ரவீந்திரநாத் தாகூர். அவர் தான் அகில இந்திய பெங்காலி மொழி இலக்கிய மாநாட்டை முதன் முதலில் தொடங்கிவைத்தார். ரவீந்திரநாத் தாகூர் விட்டுச் சென்ற பணியை, அதன் நிர்வாகிகள் தொடர்ந்து சிறப்பாக செய்து வருகிறார்கள்.

    மொழியை பெருமைப்படுத்தும் வேலையை இந்த மாநாடு தொடர்ந்து செய்து வருகிறது. இது பாராட்டுக்கு உரியதாகும். மனித சமூகத்தின் நாகரிக உச்சமாக திகழும் மொழியின் இணையில்லா படைப்பே இலக்கியமாகும். மொழிகளுக்கு இடையே கருத்து பரிமாற்றங்களை சாத்தியமாக்கும் வாய்ப்பை இலக்கியங்களால் மட்டுமே வழங்க முடியும்.

    மன்னர்கள் ஆட்சி காலத்தில் நிலங்களுக்காக மட்டுமே சண்டை போட்டு வந்தனர். மொழிக்காக எந்த ஒரு மன்னரும் சண்டை போட்டுக் கொண்டதாக எந்த வரலாறும் சொல்லவில்லை. ஒவ்வொரு மக்களையும் இணைக்கும் மிகச்சிறந்த ஊடகமாக மொழி விளங்கி வருகிறது. மனிதனின் மிகச்சிறந்த கலைப்படைப்பாக மொழி கருதப்படுகிறது. அந்த மொழி மனிதர்களை பண்படுத்துவதற்காகவே இலக்கிய வடிவத்தில் உறவாடுகின்றன.

    கடலில் கலக்கும் ஆறுகளை போலவே அனைத்து மொழிகளும், மதங்களும் ஒன்றுசேரும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. மனித வாழ்க்கையை இணைக்கும் பாலமாக மொழிகளும், மதங்களும் இருக்க வேண்டும். அவைகள் மனித வாழ்க்கையை பிளவுபடுத்தக் கூடாது.

    இவ்வாறு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசினார்.

    இந்த மாநாட்டில் கவர்னர் வஜுபாய் வாலா, முதல்-மந்திரி சித்தராமையா, கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.கே.முகர்ஜி, ஜார்கண்ட் மாநில மந்திரி சர்யாராய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×