search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய அரசை கண்டித்து கேரளாவில் முழு அடைப்பு
    X

    மத்திய அரசை கண்டித்து கேரளாவில் முழு அடைப்பு

    ரூ.500, ரூ.1000 நோட்டு பிரச்சினையால் மத்திய அரசை கண்டித்து கேரளாவில் முழு அடைப்பு நடைபெற்றது.

    திருவனந்தபுரம்:

    ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அதிரடி அறிவிப்பால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். செல்லாத நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ள வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

    அதே சமயம் கூட்டுறவு வங்கிகளில் இந்த வசதி செய்து கொடுக்கப்பட வில்லை. இதனால் கூட்டுறவு வங்கிகளின் செயல்பாடு முழுமையாக முடங்கியது. கூட்டுறவு வங்கிகளிலும் பணம் பரிமாற்றத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை எழுந்தது.

    கேரளாவிலும் அனைத்துக்கட்சி கூட்டத்தை முதல்- மந்திரி பினராய் விஜயன் கூட்டி இந்த பிரச்சினை தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் ரூபாய் நோட்டு செல்லாது பிரச்சினை தொடர்பாக மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு பற்றி பிரதமர் நரேந்திர மோடியை அனைத்துக் கட்சி குழு சந்திக்க முடிவு செய்யப்பட்டது.

    இதுதொடர்பாக நேரம் ஒதுக்க கேட்டு பிரதமர் அலுவலகத்திற்கு கேரள அரசு சார்பில் கடிதமும் அனுப்பப்பட்டது. ஆனால் அனைத்து கட்சி குழுவிற்கு பிரதமரை சந்திக்க அனுமதி வழங்கப்படவில்லை. நிதி மந்திரி அருண்ஜெட்லியை சந்தித்து இந்த பிரச்சினை பற்றி பேசும்படி தெரிவிக்கப்பட்டது.

    மக்கள் பிரச்சினை பற்றி பிரதமரை சந்தித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து கேரளாவில் இன்று (28-ந்தேதி) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அறிவித்தது. இதற்கு இந்திய கம்யூனிஸ்டு மற்றும் எதிர்கட்சியான காங்கிரஸ் ஆகியவை ஆதரவு தெரிவித்தன.

    அதன்படி கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் பஸ்கள் எதுவும் ஓடவில்லை. ஆட்டோக்களும் இயங்காமல் ஸ்டாண்டுகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மாநிலம் முழுவதும் கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது.

    இந்த முழு அடைப்பு போராட்டம் காரணமாக மாநிலம் முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. கடை வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. முழு அடைப்பை அமைதியான முறையில் நடத்த வேண்டும் என்று கேரள அரசு கூறி இருந்தாலும் சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. போலீசார் உடனடியாக விரைந்து சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

    மேலும் மத்திய அரசை கண்டித்து மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். அந்த இடங்களில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கப்பட்டது.

    முழு அடைப்பு போராட்டத்தை தொடர்ந்து கேரளாவில் இன்று நடக்க இருந்த எம்.ஜி. பல்கலைக்கழக தேர்வுகள் கண்ணூர் பல் கலைக்கழக தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டு இருந்தது. பஸ்கள் ஓடாததால் பொது மக்கள் ரெயில் சேவையை பெரிதும் பயன் படுத்தினார்கள். ஆனாலும் ரெயில்நிலையத்தில் இருந்து தாங்கள் செல்லும் இடத்திற்கு செல்ல ஆட்டோ, பஸ்கள் உள்பட வாகன வசதி இல்லாததால் அவதிக்குள்ளானார்கள். சில இடங்களில் இதுபோல தவித்த பொதுமக்களை போலீசார் தங்கள் வாகனங்களில் ஏற்றி அவர்கள் செல்லும் இடத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    தற்போது சபரிமலையில் மண்டல பூஜை நடந்து வருவதால் ஏராளமான பக்தர்கள் வாகனங்களில் சபரிமலைக்கு சென்ற வண்ணம் உள்ளனர். சபரி மலை பக்தர்களின் வாகனங்களை யாரும் தடுத்து நிறுத்தக் கூடாது. அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு கொடுத்து உதவி செய்ய வேண்டும் என்று முதல்-மந்திரி பினராய் விஜயன் கேட்டுக்கொண்டார். இதனால் அய்யப்ப பக்தர்களின் வாகனங்கள் எந்த தடையும் இன்றி சென்றன. அதேபோல சுற்றுலா பயணிகளின் வாகனங்களும் தடையில்லாமல் சென்றன.

    முழு அடைப்பு போராட்டத்தையொட்டி கேரள போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெக்ரா தலைமையில் மாநிலம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. போலீசார் வாகனங்களில் ரோந்து பணியிலும் ஈடுபட்டனர். மேலும் சபரிமலையிலும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

    குமரி மாவட்டத்தில் இருந்து கேரளா செல்லும் அரசு பஸ்கள் மாவட்ட எல்லையான களியக்காவிளையுடன் நிறுத்தப்பட்டது. இதனால் கேரளாவுக்கு செல்லும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

    Next Story
    ×